சட்டக்கல்லூரிக்கு கூடுதலான முஸ்லிம் மாணவர்கள் இம் முறை தெரிவு செய்யப்பட்டிருப்பதை காரணம் காட்டி நீதித்துறை முஸ்லிம் மயப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதித்துறை அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மறுத்துள்ளதுடன் நீதித்துறை முஸ்லிம் மயப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நீதியமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசிய புலமையாளர் கவுன்சிலின் தலைவர் எனக் கூறிக்கொள்ளும் பந்துல சந்திரசேகர என்பவர் ஊடகங்கள் ஊடாக தெரிவித்து வரும் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் ஜாதிக ஹெல உருமய முக்கியஸ்தர் உதயகம்மன்பிலவிற்கு எடுத்துரைத்துள்ளார்.
சட்டக் கல்லூரி நீதியமைச்சுடன் சில விவகாரங்களில் தொடர்புபட்டிருந்தாலும் அது சட்டக் கல்வி மன்றத்தின் தனியான அமைப்பின் கீழேயே செயல்படுகின்றது. அத்துடன் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களமே அனுமதிக்கான பரீட்சையை நடாத்தி வருகின்றது. அதற்கும் நீதியமைச்சிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
கொழும்பில் மாத்திரமே நடைபெறும் சட்டக்கல்லூரி நுழைவுக்கான இந்த பலத்த போட்டிப் பரீட்சைக்கு நாடெங்கிலும் இருந்து பெருந்தொகையான விண்ணப்பதாரிகள் தோற்றுகின்றனர். முன்னர் நாட்டில் யுத்தம் நிலவிய சூழ்நிலையில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடகிழக்கில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானோர் இப் பரீட்சைக்குத் தோற்றும் வாய்ப்பு இருக்கவில்லை.
சமாதானம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு பெருமளவில் தோற்றுகின்றனர். அவர்களில் மிகத் திறமை வாய்ந்தவர்கள் இப் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்துள்ளமை வரவேற்கத்தக்கது.
இந்தப் பரீட்சை மும்மொழிகளிலும் நடைபெறுவதனால் முஸ்லிம் மாணவர்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தோற்றி சித்தியடைந்துள்ளமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது பற்றிய விளக்கம் தேவைப்பட்டோர் சட்டக் கல்லூரி அதிபரை அனுக முடியும்.
உண்மை இவ்வாறு இருக்க, பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் தேவையற்ற விதத்தில் பீதி மனப்பான்மையை ஏற்படுத்தும் நோக்கத்தில் தீய சக்திகள் இவ்வாறான விஷமக் கருத்துகளை பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதும், விசனத்துக்குரியதும் ஆகும்.
அத்துடன் நீதிபதிகளை நியமிக்கும் விஷயத்தில் நீதியமைச்சர் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டும் எந்தவிதமான அடிப்படையும் அற்றதாகும். அவர்களை நீதிச்சேவை ஆணைக்குழுவே நியமிக்கின்றது. அது சுயாதீனமாக செயல்படும் ஓர் அமைப்பாகும்.
வடகிழக்கில் யுத்தகாலத்தில் செயல்படாதிருந்த நீதிமன்றங்கள் பல மீண்டும் இயங்குவதோடு, புதிதாக நீதிமன்றங்கள் சில நிறுவப்பட்டிருப்பதாலும் அவற்றிற்கு நீதிச்சேவை ஆணைக்குழு எழுத்துப் பரீட்சை, நேர்முகப்பரீட்சை என்பவற்றின் ஊடாக நீதிபதிகளை தெரிவு செய்து நியமிக்கின்றது. அங்கு தமிழ் மொழி தெரிந்த நீதிபதிகள் நியமிக்கப்படுவதில் தவறில்லை.
உண்மைக்கு மாறாக புனைந்து கூறப்பட்டுள்ள இந்தப் பொய் பிரசாரத்தையும், போலிக் குற்றச்சாட்டுக்களையும் தான் கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment