(எஸ்.எம்.அறூஸ்)
பிரதேச சபை உறுப்பினர்களின் கலந்தாலோசனையின்றி தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து செயற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். எதிர்காலத்தில் அவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுமாயின் எனது பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்துவேன்;.
இவ்வாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் மருந்தாளருமான ஐ.எல்.அப்துல் முனாப் தெரிவித்தார். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஒரு குடும்பத்திற்கு கைத்தொழில் முயற்சிக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே பிரதேச சபைக்குச் சென்றிருக்கின்றோம். மாறாக கதிரையைச் சூடாக்கி விட்டு; சுயநல அரசியல் செய்வதற்காக அல்ல. மக்கள் தந்த அமானத்தை காப்பாற்ற வேண்டும். இன்று அரசியல் என்றால் ஏமாற்று வித்தை என்கின்ற ஒரு நிலைப்பாடு மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
அட்டாளைச்சேனைப் பிரதேசம் அபிவிருத்தியில் பின்தங்கிக் காணப்படுகின்றது. பிரதேச சபை தன்னால் இயன்ற அபிவிருத்திப் பணிகளை முன்னடுத்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தைக்கான அடிக்கல் நடப்பட்டு வேலைகள் நடைபெறுகின்றது. மிக விரைவில் பிரதேச சபைக்கான கட்டிடமும் கட்டப்படவுள்ளது.
மிகத் திறமையான ஒரு தவிசாளர் எமக்குக் கிடைத்திருக்கின்றார். எந்த விடயத்தையும் நேர்மையாகச் செய்ய வேண்டும் என்ற மனநிலையில் உள்ள ஒருவராகும். இருந்தாலும் சில விடயங்களில் பிரதேச சபை உறுப்பினர்களின் கலந்தாலோசனை பெறப்படாது முடிவுகள் எடுக்கப்படுவது கவலையளிக்கின்றது.
இது எதிர்காலத்தில் நடைபெறாது என நினைக்கின்றேன். எந்த விடயத்தினை எடுத்துக் கொண்டாலும் பிரதேசம், இன,மத வேறுபாடுகளுக்கப்பால் சிந்தித்து சேவையாற்ற வேண்டும். நான் அரசியலுக்கு ஏன்? வந்தேன் என்றுகூட சில நேரங்களில் சிந்திப்பதுண்டு. நான் பிறந்த மண்ணுக்கு என்னால் இயன்ற பணிகளைச் செய்வதற்கு சித்தமாக உள்ளேன்.
துன்பப்படுகின்ற மக்களுக்கு உதவி புரியவேண்டும் என்ற மனநிலையில் நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும். அதிகாரம் இன்று இருக்கும் நாளை நம்மை விட்டு போய்விடும். அதிகாரத்தில் இருந்தபோது உனது சமூகத்திற்கு எதனைச் செய்தாய் என்று இறைவன் நம்மிடம் கேட்பான். அரசியலுக்காக பொய் பேசவேண்டிதில்லை. அட்டாளைச்சேனையில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படுவதில் குறிப்பிட்ட ஒரு அமைச்சர் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டுள்ளார்.
பட்டம் பெற்ற பட்டதாரிகளை இப்படியா? அவமானப்படுத்துவது. எல்லோரும் இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இன்று உதவி பெற்ற நீங்கள் நல்லதொரு கைத்தொழிலை ஆரம்பித்து எதிர்காலத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களாக மாற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.
0 comments :
Post a Comment