நிந்தவூர் பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மூவரின் பகிஷ்கரிப்புக்கு மத்தியில் எதிர்க்கட்சி உறுப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள நிந்தவூர் பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்று வியாழக்கிழமை அதன் தவிசாளர் ஏ.எல்.ஏ.தாஹிர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அமர்வை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான பிரதித் தவிசாளர் முஹம்மட் அன்ஸார், ஜப்பார் அலி மற்றும் நௌசாத் அலி ஆகிய மூவரும் பகிஷ்கரித்து சபை அமர்வுக்கு சமூகமளித்திருக்கவில்லை.
இது குறித்து ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான ஜப்பார் அலி கருத்து தெரிவிக்கையில்;
“எமது நிந்தவூர் பிரதேச சபையின் கடந்த (2012) வரவு செலவுத் திட்டத்திற்கு நானும் பிரதித் தவிசாளரும் எதிர்த்து வாக்களித்திருந்தோம். தவிசாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாகவே நாம் அப்போது எதிராக வாக்களித்திருந்தோம். இது குறித்து கட்சியின் தலைவர் மற்றும் செயலாளருக்கு நாம் அறிவித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
சபையின் ஆரம்ப காலம் முதலே- அதாவது கடந்த இரு வருடங்களாக குழுக்கள் எதையும் கூட்டாமல் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றார். அவர் வெளிநாட்டுப் பயணம் சென்றபோது கூட பிரதித் தவிசாளரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு செல்லவில்லை. இது பற்றி கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், அமபாரை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோருக்கு முறைப்பாடு செய்திருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த சபையின் காலத்தில் இதே தவிசாளருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர் சுலைமாலெப்பை செய்த முறைப்பாட்டின் பேரில் ஜனாதிபதி கணக்காய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் போது 18 ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அது மட்டுமல்லாமல் தற்போது தனது நண்பர் ஒருவருக்கு யுனொப்ஸ் திட்டத்தில் தொழில் வழங்கி, அதற்காக சம்பளமும் வழங்கி வருகின்றார். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நிந்தவூர் பிரதேச சபை ஊழல் நிறைந்த சபையாக இயங்கி வருகின்றது.
இவ்வாறான காரணங்களின் பேரிலேயே இன்றைய பட்ஜெட் அமர்வை நாம் பகிஷ்கரித்து எமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளோம்.
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளரின் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்றை எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் பேராளர் மாநாட்டில் சமர்ப்பிக்கவுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment