குஜராத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா?


குஜராத் சட்டசபை தேர்தலில் நரேந்திரமோடி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார். அவர் தொடர்ந்து 3-வது முறையாக முதல் – மந்திரி ஆகிறார். நரேந்திரமோடிக்கு முன்பு அங்கு ஏற்கனவே இருமுறை பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்தது. ஆக மொத்தம் தொடர்ந்து 5-வது முறையாக பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
காந்தி பிறந்த மண் என்பதால் எப்போதுமே குஜராத் மீது நாட்டு மக்களுக்கு ஒரு பற்று உண்டு. அதே குஜராத்தைச் சேர்ந்த நரேந்திரமோடி இப்போது நாடு முழுவதும் பேசப்படும் அரசியல் தலைவராக உருவாகி இருக்கிறார்.
நாலாபுறமும் பாய்ந்து தாக்கிய எதிர்க்கட்சிகளின் அம்பு, சொந்த கட்சிக்குள்ளே எழுந்த எதிர்ப்புகள், துரோகம், தொடர் வழக்குகள் என அனைத்தையும் தகர்த்து மக்களின் நம்பிக்கையை பெற்று விட்டார். ஒரு மாநில சட்டசபை தேர்தல் இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றதில் இன்னொரு காரணம் உள்ளது. அதுதான் பிரதமர் வேட்பாளர். 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதாவில் ஒரு பிரிவினர் வெளிப்படையாக பேசி வந்தனர்.
தேர்தல் பிரசாரத்தின் போது அத்வானி, சுஷ்மா சுவராஜ் போன்ற தலைவர்கள் நரேந்திர மோடிக்கு பிரதமராகும் தகுதி உள்ளதாக புகழ்ந்தனர். தற்போது தேர்தலில் பெற்ற வெற்றியின் மூலம் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக குஜராத் மக்கள் அங்கீகரித்து விட்டார்கள். எனவே அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
பாரதீய ஜனதாவில் பிரதமர் வேட்பளர் போட்டியில் கட்சி தலைவர் நிதின்கட்காரி, சுஷ்மாசுவராஜ், நரேந்திர மோடி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்று இருந்தது. இதில் சுஷ்மாசுவராஜ் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இல்லை என்று கூறியதுடன் நரேந்திர மோடிக்கு பிரதமராகும் தகுதி உள்ளதாக வெளிப்படையாக அறிவித்து விட்டார்.
நிதின்கட்காரி மீது சமீபத்தில் ஊழல் புகார்கள் வெளியானது. இதனால் அவரும் பிரதமர் வேட்பாளர் போட்டியில் இல்லை. ஊழல் கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர் என்ற வகையில் இப்போதைக்கு நரேந்திரமோடியே பிரதமர் வேட்பாளர் களத்தில் உள்ளார். ஆமதாபாத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று அவரது ஆதரவாளர்கள் வெற்றி கோஷம் எழுப்புகையில் கூறினார்கள்.
தேர்தல் வெற்றிக்குப்பின் நரேந்திரமோடிக்கு பிரதமர் வேட்பாளராவதற்கு பாரதீய ஜனதாவில் ஆதரவு அதிகரித்து வருகிறது. பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்திடம் கேட்டபோது, நரேந்திரமோடி கட்சியின் முக்கிய தலைவர், அவர் பிரதமர் வேட்பாளரா? என்பதை கட்சி முடிவு செய்யும் என்றார்.
பாரதீய ஜனதாவில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட ராம்ஜெத்மலானி கூறுகையில், குஜராத் தேர்தலில் நரேந்திரமோடி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். வருகிற பாராளு மன்ற தேர்தலில் அவருக்கு பிரதமர் வேட்பாளராகும் தகுதி உள்ளது.
தேர்தல் வெற்றி இதை எடுத்துக்காட்டுவதுடன், அந்த கருத்துக்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது என்றார். ராம்ஜெத்மலானி ஏற்கனவே நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறானாலும் நரேந்திர மோடி ஒரு முஸ்லிம் எதிர்ப்பு வாதி என்று இந்திய முஸ்லிம் அமைப்புக்கள் கருத்து தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.
(ஈழம்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :