துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி லண்டன் குயின்ஸ் எலிசபத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாகிஸ்தான் சிறுமியான மலாலா யூசுப் சை நேற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.
எனினும் மலாலா இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத ஆரம்பத்திலோ மற்றொரு சத்திர சிகிச்சைக்காக வைத்திய சாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என குயின்ஸ் எலிசபத் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மலாலா வைத்தியசாலையிலிருந்து வெளியேறி மேற்கு மிட்லேண்டில் உள்ள அவரது தற்காலிக இல்லத்துக்கு சென்றதாக லண்டன் தகவல்கள் தெரிவித்தன.
இந் நிலையில் மலாலாவின் தந்தைக்கு லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வேலையொன்று பாக்.அரசினால் வழங்கப்பட்டுள்ள நிலையில் மலாலா பாகிஸ்தான் திரும்புவதில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானின் பக்தூவான் மாகாணத்தைச் சேர்ந்த மலாலா கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இனந் தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி லண்டன் குயின்ஸ் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சப்பெற்றுவந்த நிலையில் தற்போது முதன் முறையாக அங்கிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment