சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் ரிஸானா நபீக்கின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் அவர்களுக்கு அனுப்பி வைத்த கருணை மனு சாதகமான முறையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டிருப்பதாகவும், உயிர் இழந்த குழந்தையின் பெற்றோருடனான சமாதான முயற்சிகள் பயனளிக்கும் என்றும், அவர் தொடர்பிலான சட்ட ஆவணங்கள் விடுதலைக்கு உதவலாமென்றும், அவற்றின் அடிப்படையில் ரிஸானா விரைவில் இலங்கை திரும்பும் சாத்தியம் உண்டு என்றும் அந் நாட்டுத் தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை நீதியமைச்சில் வியாழக்கிழமை (03) மாலை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறினார். இச் சந்திப்பில் முன்னாள் சவூதி அரேபியாவின் ஜித்தா கொன்சலர் கலாநிதி அஷ்ஷெய்க் எம். இனாமுல்லாவும் கலந்து கொண்டார்.
மக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பையும், பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கும் ரிஸானா நபீக் மரண தண்டனை விவகாரம் தொடர்பான சட்ட ரீதியான அணுகு முறை தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு தூதுவர் ஜம்மாஸ் சாதகமான விதத்தில் பதிலளித்தார்.
மனிதாபிமான அடிப்படையிலான ஜனாதிபதியின் கோரிக்கைக்கு தாமும் விஷேட குறிப்புகளை இணைத்து அனுப்பியதாகக் குறிப்பிட்ட சவூதி அரேபியத் தூதுவர் அதனை தமது சொந்த விவகாரமாக மதிப்பதாகவும் சொன்னார். சவூதி மன்னரின் வேண்டுகோளின்படி ரியாத் ஆளுநர் சல்மான் ஏற்கனவே உயிரழந்த குழந்தையின் குடும்பத்தினரோடு தொடர்பு கொண்டிருப்பதாகவும் கூறினார்.
முக்கியமான சில காரணங்கள் ரிஸானா நபீக்கிற்கின் விடுதலைக்கு சாதகமாக அமையக் கூடுமென தூதுவர் அமைச்சர் ஹக்கீமிடம் தெரிவித்ததோடு, முன்னர் அவரது கடவுச் சீட்டில் கூடுதல் வயது குறிப்பிடப்பட்டிருந்ததைப் பற்றி பிரஸ்தாபித்து, அவரது உண்மையான வயது பற்றி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகளின் ஊடாக தெரியவந்திருப்பதும், ரிஸானா நபீக் பணிப்பெண்ணாக சென்றிருப்பதும், பாலூட்டும் கடமை பணிப்பெண்ணுக்கு உரியதல்லாது குழந்தைப் பராமரிப்பாளருக்கு உரியதாக இருப்பதும் விடுதலைக்கு சாதகமான காரணிகளாக அமையலாமென்றும் கூறினார்.
ரிஸானா நபீக்கின் கடவுச் சீட்டிலும், பயண ஆவணங்களிலும் வயதைக் கூட்டிக் குறிப்பிட்டு மோசடியான முறையில் அவரை சவூதி அரேபியாவுக்கு அனுப்பிய பயண முகவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் ஹக்கீம் அதற்கான ஆவணங்கள் தற்பொழுது உள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் குற்றவாளிகளாக காணப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளுவதற்கும் இரு நாடுகளிலும் சாட்சியங்களை பதிவு செய்து கொள்ளுவதற்கும் வழிவகுக்கும் விதத்தில் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளுவது பற்றி அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் எடுத்துக் கூறி, ஏற்கனவே அவ்வாறான உடன்படிக்கைள் பிற நாடுகள் சிலவற்றுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த போது அதையிட்டு தூதுவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
முன்னர் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சராக இருந்த ரோஹித்த போகொல்லாகம, சவூதி அரேபியாவில் அப்போதைய உள் நாட்டு விவகார அமைச்சராக இருந்த இளவரசர் நாயிப் பின் அப்துல் அஸீஸ் ஆகியோரும் இந்த சிறைக்கைதிகள் பரிமாற்றல் விவகாரம் தொடர்பில் பயனுள்ள பேச்சுவார்த்தை நடாத்தியிருந்ததாகவும் பின்னர் அது செயலுருப்படுத்தப்படாது போய் விட்டதாகவும், அதனை முன்னெடுக்க அமைச்சர் ஹக்கீம் தெரிவிக்கும் ஆலோசனையை தாம் பெரிதும் மதிப்பதாகவும் தூதுவர் ஜம்மாஸ் கூறினார்.
செய்தியைப்படித்ததும் Facebook Like கிளிக்பன்ன மறக்கவேண்டாம்.
0 comments :
Post a Comment