(எம்.பைஷல் இஸ்மாயில்)
அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிரதேசத்தை அண்டியுள்ள சுமார்1300 ஏக்கர் நெற்காணிகள் செய்கைக்கு உட்படுத்தப்பட முடியாத நிலை தோன்றியுள்ளதாக அறியமுடிகிறது.
கல்முனைப் பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள இறைவெளிக்கண்டம், கல்முனைக்கண்டம், பண்டிதீவு கண்டம் ஆகிய கண்டங்களில் சுமார் 1700ஏக்கர் நெற்காணிகள் உள்ளது. எனினும் இறைவெளிக்கண்டத்தின் ஊடாக நீரை விநியோகிக்கும் அணைக்கட்டில் கதவுகள் பொறுத்தப்படாததாலும், அன்மையில் ஏற்பட்ட அசாதாரண வெள்ளநிலை காரணமாக இறைவெளிக்கண்டத்திலுள்ள தற்காலிக அணைக்கட்டு சேதமுற்றுள்ளதனாலும் சுமார் 1300ஏக்கர் நெற்காணிகள் இம்முறை செய்கை பண்ணமுடியாத நிலைதோன்றியுள்ளதாக விவசாய அமைப்புக்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.
இத்தேவை தொடர்பான விடயங்களை சீர்செய்து தருமாறு விவசாய அமைச்சு, நீர்பாசன திணைக்களம் மற்றும் மாகாண விவசாய அமைச்சு ஆகியவற்றிற்கு எழுத்து மூலம் அறி வித்துள்ளதாகவும், இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் இம்முறை சுமார் 1300 ஏக்கர் காணிகளில் நெற்பயிர்ச்செய்கையை கைவிட வேண்டிய நிலை தோன்றும் எனவும் கல்முனை கமநல சேவை நிலைய குழுத்தலைவரும், பண்டிதீவு கமக்கார அமைப்பின் பிரதிநிதியுமான ஏ.எச்.ஏ.சித்தீக், கல்முனைக் கண்டம் மற்றும் இறைவெளிக்கண்ட கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளான ஏ.ஜெயகுமார், எம்.ஏ.எம். நஸீர் ஆகியோர்கள் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment