15,000 சிங்களவர்கள் வடக்கில் குடியேற்றப்படுவர்- அரசாங்கம்.

றிப்தி அலி

மீள்குடியேற்ற செயற்பாடு முடிவடையும் காலத்தை வரையறுத்து கூற முடியாது என்பதுடன் வடக்கில் 15,000 சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது "மீள்குடியேற்றமே' தவிர 'மீள்குடியமர்த்தல்" அல்ல என வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்ன நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

இவர்கள் வெலிஓயா, பதவியா மற்றும் வவுனியா தெற்கு ஆகிய பகுதிகளிலேயே மீள்குடியேற்றப்பட்டவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள சிங்கவர்களுக்காக 850 வீடுகளை அரசாங்கம் நிர்மாணிக்கவுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச தெரிவித்தார்.

"இதில் முதற் கட்டமாக 500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் இவற்றின் நிர்மாணப் பணிகள் முடிவடையும் நிலையிலுள்ளன. இந்த புதிய வீடுகளின் திறப்பு விழா இன்னும் ஓரிரு மாதங்களில் இடம்பெறவுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

இந்த வீடுகள் வெலிஓயா பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்றன. இந்த 500 வீடுகளும் நான்கு கிராமங்களை உள்ளடக்கியதாகவுள்ளன என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதுபோன்ற வீடுகள் பதவியா பிரதேசத்திலும் நிர்மாணிக்கப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்ன மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச ஆகியோர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

வட மாகாண அபிவிருத்திக்காக 2,569 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அரசாங்கம் செலவளிக்கவுள்ளது.இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு உதவிகளும் கிடைக்கும் என்றும் வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரத்ன தெரிவித்தார்.

எனினும் வட மாகாண அபிவிருத்திக்கு வெளிநாட்டு உதவிகளே அதிகம் வழங்கப்படுகின்றன. இவை நிதியுதவி மற்றும் கடன் ஆகிய இரண்டு வகைகளில் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதில் கடன்கள் குறுகிய மற்றும் நீண்ட கால அடிப்படையில் வெளிநாடுகளினால் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது வடக்கில் 42 நலன்புரி நிலையங்கள் மாத்திரமே உள்ளன என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜானக சுகததாச தெரிவித்தார்.

எனினும் இவை சிறிய கிராமங்கள் என்றே அழைக்கப்படுகின்றது. ஏனென்றால் இங்கு மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியவசிய வசதிகளும் மேற்கொள்ளப்பட்டள்ளன என அவர் குறிப்பிட்டார்.

"இவற்றில் சுமார் 400 குடும்பங்களே உள்ளன. இவர்கள் ஆரம்ப காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களாவர். எனினும் இறுதிக் கட்ட யுத்ததின்போது வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்" என செயலாளர் ஜானக சுகததாச தெரிவித்தார்.

"இதற்கு மேலதிகமாக பல்லாயிரக்கணக்கானோர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் இந்தியவிலுள்ள நலன்புரி நிலையங்களிலும் உள்ளனர். அத்துடன் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் மீள்குடியேற்றபட வேண்டியுள்ளனர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

'இவற்றில் முஸ்லிம்கள் மன்னார் மாவட்டத்தின் முசலி உள்ளிட்ட பல இடங்களில் மீள்குடியேற்றப்படுகின்றனர். எனினும் இவர்கள் காணி விடயத்தில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்' என்றும் எஸ்.பி.திவாரத்ன தெரிவித்தார்.

"அதாவது இவர்களின் காணிகள் விடுதலை புலிகளினால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களை மீள்குடியேற்றப்படும் போது அவர்களின் காணிகளில் ஏனையோர் உள்ளனர். இதனால் பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதற்காக அரசாங்கம் மாற்று திட்டங்களை மேற்கொண்டுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்ற செயற்பாட்டை முடிவடையும் காலத்தை வரையாறுத்து கூற முடியாது அது ஏனெனில் இது பாரிய செயற்பாடொன்றாகும்'  என்றும் அவர் தெரிவித்தார்.

"இதற்கு மேலதிமாக திருகோணமலை சம்பூரிலும் பல குடும்பங்கள் மீள்குடியேற்ற வேண்டியுள்ளனர். எனினும் குறித்த பிரதேசம் முதலீட்டு வலயமாக மாற்றப்படுவதானல் இவர்களுக்கு மாற்று நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. 

எனினும் அவற்றை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் இவற்றில் 56 குடும்பங்கள் அண்மையில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்பில் பேச்சு நடத்தி நஷ்டஈடு வழங்கப்படும்" என அவர் குறிப்பிட்டார். 

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டுள்ளோம் என எஸ்.பி.திவாரத்ன தெரிவித்தார். இவற்றில் வீதி அபிவிருத்தி, பாடசாலை மற்றும் வைத்தியசாலை நிர்மாணம் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளடக்கபடுகின்றன என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் வட மாகாணத்தில் எந்தவித அதியுயர் பாதுகாப்பு வலயங்களுமில்லை என எஸ்.பி.திவாரத்ன தெரிவித்தார்.

"எனினும் யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் மாத்திரமே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன. இவை சிறியளவானதே. அதாவது தெல்லிப்பளை பிரதேசம் 17 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக உள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

வட மாகாணத்தில் முன்னர் காணப்பட்டதை விட சிறிய அளவிலேயே அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் காணப்படுகின்றன. இவை பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.TM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :