இலங்கை தூதரகம் முற்றுகை: மு.க.ஸ்டாலின், வீரமணி உட்பட 5000 பேர் கைது

சென்னை: தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) சார்பில் இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டது. தூதரகத்தை முற்றுகையிட்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, திருமாவளவன் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையிலான போர் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. இறுதி கட்ட போரின் போது தஞ்சம் அடைந்த ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்ததாக அதிபர் ராஜபக்சே மீது சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்பட்டது. போர் குற்றங்கள் குறித்து ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும், அவருக்கு தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை சரியாக அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு 
நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவம் கைது செய்து சுட்டுக் கொன்ற காட்சிகளை இங்கிலாந்தின் சேனல்4 டிவி ஒளிபரப்பியது. அதன்பின் சர்வதேச அளவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிரபாகரன் மகனை சுட்டுக் கொன்றதை கண்டித்தும், ராஜபக்சே மீது போர் குற்றங்களுக்கான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) சார்பில் சென்னையில் இன்று இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 9 மணிக்கு கருப்பு சட்டை அணிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், வள்ளுவர் கோட்டம் அருகே குவிந்தனர். காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த சிறிய மேடையில் மு.க.ஸ்டாலின், திமுக மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம், தா.மோ.அன்பரசன் ஆகியோர் இருந்தனர். 

முதல் கட்டமாக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தூதரகத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அதன்பின், மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, திருமாவளவன் ஆகியோர் முன்னிலையில் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் தூதரகத்தை முற்றுகையிட சென்னர். அப்போது, ராஜபக்சேவை கண்டித்து கோஷம் போட்டனர். ராஜபக்சேவின் உருவ பொம்மையை கொளுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஸ்டாலின், வீரமணி, திருமாவளவன் மற்றும் 5000க்கும் மேற்பட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அனைவரையும் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கை தூதரகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள இலங்கை வங்கி, எழும்பூரில் உள்ள புத்தவிஹார் ஆகிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினகரன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :