இந்தியாவின் தமிழ் நாடு பிரதேசத்தில் இரு தேரர்கள் தாக்கப்பட்டதன் பின்னணியில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொது பல சேனா தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற அதன் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ரயில் நிலையம் மற்றும் தஞ்சை பகுதியில் பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கவலை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவ்வமைப்பு இவ்வாறான தாக்குதல்களை நடத்த விடுதலை புலிகள் ஆதரவு அமைப்பு அல்லது புலம் பெயர் தமிழர்கள், முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கே தேவை இருப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழ் நாட்டுக்கு செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் இந்திய அரசு உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இந்திய மாணவர்கள் பெரும் எண்ணிக்கையிலானோர் இலங்கையில் கல்வியை தொடர்வதாகவும் இவ்வாறான தாக்குதல்கள் மூலம் இந்திய எதிர்ப்பு போராட்டமொன்றினை இலங்கையில் ஏற்படுத்த சில குழுக்கள் முனைவதாகவும் பொது பல சேனா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இலங்கை இந்தியாவின் பிராந்தியம் இல்லை என்பதை இந்தியா முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள அந்த அமைப்பு இலங்கையில் இன ரீதியாக மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் செயற்படும் சக்திகளை இந்தியா உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment