சில முடிவுகள் வந்து நிர்ப்பந்தத்தின் பேரில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் அந்த நிர்ப்பந்தத்தை நாட்டின் சமாதானத்தையும் சக வாழ்வையும் கருதியதாகவே பார்க்க வேண்டி உள்ளது. அது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சில வகையில் ஜீரணிக்க முடியாமை போகலாம். ஆனால் மறுபக்கத்தில் இந் நாட்டிற்கு முஸ்லிம்கள் செய்த தியாகமாக அது மாறலாம். ஆகவே எமது முடிவுகள் தேசிய மட்டத்தில் இன ஐக்கியத்தை நடைமுறைப்படுத்துவதும் நாட்டின் அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதுமேயாகும் என்று அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
ஹலால் விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை சம்மந்தமாக விளக்கமளிக்கும் நிகழ்வு கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலில் கண்டி சிட்டி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் பஸ்லுல் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
ஜம்மியதுல் உலமாவுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் ஹலால் ஒரு பிரச்சினைக்குரிய விடயமல்ல. சேவை நோக்காகக் கொண்டு இதனை செயற்படுத்துகின்றோமே ஒழிய இலாப நோக்கமாக அல்ல. அதற்காக அறவிடப்படுகின்ற பணம் சேவைக்குரிய கட்டணமாகவே அறவிடப்பட்டது. இதன் பிற்பாடு இந்த சேவைக் கட்டணத்தைக் கூட நாட்டின் அமைதிக்காகவும் சக வாழ்வுக்காகவும் முஸ்லிம் சமூகமே பொறுபற்றுக் கொள்ளும். இதன் ஊடாக முஸ்லிம் விரோத சக்திகளுக்கு ஹலால் பணத்தை வைத்து வெளிநாட்டுச் சக்திகளுக்கு நிதி உதவி வழங்குதல், இலங்கையில் பள்ளிகளைக் கட்டுவதற்கு உதவுதல் போன்ற குற்றச்சாட்டுக்களெல்லாம் போலியானவை என்று நிரூபணமாகின்றது. இந்த முடிவை முஸ்லிம் விரோத சக்திகளுக்கு ஜீரணிக்க முடியாமல் போய் உள்ளது.
நாங்கள் விவாதத்திற்கு செல்ல விரும்பவில்லை. ஏனெனில் முஸ்லிம் விரோத சக்திகளின் நோக்கமே விவாதம் ஒன்றின் மூலம் வன்முறையைத் தூண்டுவதாகும். இதற்கான பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. உதாரணமாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொண்ட வழக்குகளில் எதிலுமே முஸ்லிம் சமூகம் தோற்றதில்லை. 1915 ஆம் ஆண்டு இடம்பெற்ற வழக்கில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கலகம் வெடித்தது. விவாதங்களிலும் முஸ்லிம் சமூகம் வெற்றி பெற்றே உள்ளன. விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அஷ்ரப் வெற்றி பெற்றாலும் அவர் இன்று எம்மோடு இல்லை.
எனவே விவாதத்தின் முடிவு எமது வெற்றியாக இருந்தாலும் பெரும்பான்மை சமூகம் அதனை ஜீரணிக்குமா என்று அறிந்து நாம் புத்திக்கூர்மையுடன் சிந்தித்து செயலாற்ற வேண்டிய ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
VV
0 comments :
Post a Comment