பாணந்துறை, எழுவில பிரதேசத்தின் வேகட பெளத்தாலோக வித்தியாலயத்தில் முஸ்லிம் மாணவர்கள் ஆசிரியர்களை வணங்க வேண்டும் என அதிபர் வலியுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்இன்றய தினம் அவதானித்து மேலதிக நடவடிக்கை எடுக்கப்படுமென எழுவில ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் முஹம்மத் பாரில் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் இன்று இஷா தொழுகையை தொடர்ந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் முடிவிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
குறித்த பாடசாலையின் அதிபர் முஸ்லிம் மாணவர்களும் ஏனைய சிங்கள மாணவர்களைப்போல் அம்மா, அப்பா மற்றும் ஆசிரியர்களை காலில் விழுந்து வணங்க வேண்டும். இல்லையேல் பிரம்படி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மாணவர்கள் பெற்றோரின் கவனத்துக்கு கொண்டுவர அவர்கள் இதனை எமது கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
சுமார் 30 முஸ்லிம் மாணவர்கள் வரையில் கல்வி பயிலும் குறித்த பாடசாலையின் அதிபரின் கட்டளை குறித்து நாம் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் அந்தகேயின் கவனத்துக்கு கொண்டுவந்தோம்.
அவர் உடனடியாக அதிபரை தொடர்பு கொண்டு இது குறித்து வினவினார். அப்போது தாம் முஸ்லிம் மாணவர்களிடம் அவ்வாறு எதுவும் தெரிவிக்கவில்லை என அதிபர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இன்றைய தினம் மாணவர்கள் பாடசாலைக்கு வழமை போன்று செல்வர். அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் நாம் சிந்திப்போம் என அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment