கல்முனையில் இடம் பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் மக்கள் கட்சியின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவைகள்.


எஸ்.அஷ்ரப்கான்


 ஸ்ரீ லங்கா முஸ்லிம் மக்கள் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது பலசேனாவின் இனவாத செயற்பாடுகளையும், முஸ்லிம் கட்சிகளின் கையாலாகா தனத்தையும் கண்டிக்கும் கூட்டம் 25.03.2013 திங்கள் கிழமை கல்முனையிலுள்ள கட்சி அலுவலகத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் தலைமையில் இடம்பெற்றது. இந்த கண்டன கூட்டத்தில் விசேட அதிதியாக சட்டத்தரணி என்.எம். ஸறூக் காரியப்பர் அவர்களும், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இங்கு 12 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், வெளியிட்டும் வைக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

01 முஸ்லிம்கள் தமக்கெதிரான இனவாத செயல்களுக்கெதிராக பகிரங்க கூட்டங்கள் நடாத்த முற்பட்டால் அதனை தடுக்கும் அரசாங்கம் முஸ்லிம்களுக்கெதிரான பொது பல சேனாவின் பகிரங்க கூட்டங்களை தடுக்காமல் விட்டதை கண்டிக்கிறோம்.

02. முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்புடன் பெறப்பட்ட சமாதானத்தை சீரழித்து நாட்டில் இறுக்கமான சூழ்நிலை சிலரால் ஏற்படுத்தப்பட்ட்டுள்ளதையும் அதற்குரிய பொறுப்பை அரசும், அரசுக்கு ஆதரவான முஸ்லிம் கட்சிகளும் ஏற்க வேண்டும் என கோருகிறோம்.

03. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இனங்களுக்கிடையில் குரோத மனப்பான்மை தொடர்ந்தும் வளர்க்கப்படுவதை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

04. பௌத்த குருமாருக்கென தனியான ஆடை இருப்பது போல் முஸ்லிம் பெண்களுக்கான தனியான கலாசார ஆடை, ஆண்களின் தொப்பி போன்றவை முஸ்லிம்களின் தனிப்பட்ட சுதந்திரமாகும். இதில் தலையிடுவது தனிமனித உரிமைகள் மீதான மீறல்களாகும். இது விடயத்தை அரசாங்கம் பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு விளக்கி மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

05. அரசுக்கு ஆதரவுகொடுக்கும் முஸ்லிம் கட்சிகளாலும் ஆளுங் கட்சி முஸ்லிம் உறுப்பினர்களாலும் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளை அரசுடன் பேசி தடுக்க முடியாமல் போன கையாலாகா தனத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

06. ஹலால் விடயத்தில் சமூகத்தின் பல தரப்புக்களையும் பொறுமையுடன் ஆராயாமல் திடீரென அதனை கைவிட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் முடிவை கண்டிப்பதுடன் இது விடயத்தை மீண்டும் ஜம்இய்யத்துல் உலமா உள்நாட்டில் முஸ்லிம்களுக்கு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

07. ஜம்இய்யத்துல் உலமாவுக்கெதிராக பொது பல சேனா மோசமான, அசிங்கமான குற்றச்சாட்டுக்களை முன் வைத்த போதும் எந்த பள்ளியும் தாக்கப்படவில்லை என கூறப்பட்ட போதும்  அவற்றை பாராளுமன்றத்தில்  பகிரங்கமாக கண்டிக்காத முஸ்லிம் அமைச்சர்களின் செயற்பாட்டை கண்டிக்கிறோம்.

8. இந்தியாவில் புத்த பிக்குகள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கும் நாம் அதே போல் இலங்கை உலமாக்கள் பொது பல சேனாவினால் மிக மோசமான வார்த்தைகளால் தாக்கப்பட்டதையும் கண்டிக்கிறோம். அதே போல் புத்த பிக்குகள் தாக்கப்பட்டதை நமது நாட்டில் கண்டித்தவர்கள் இலங்கையில் மௌலவிமார்; பிக்குகளால் கடுஞ்சொற்களால் தாக்கப்பட்டதை கண்டிக்காத ஒரு பக்க செயற்பாட்டை முஸ்லிம் மக்கள் கட்சி கண்டிக்கிறது.

 09. தம்மை ஏமாற்றி தமது சுயநலன்களையே காத்துக்கொள்ளும் சுயநல ஏமாற்று கட்சிகள் விடயத்தில் முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன் தொடர்ந்தும் ஏமாற்று வார்த்தைகளுக்கு ஏமாறுகின்ற சமூகமாக இருப்பது பற்றி முஸ்லிம் மக்கள் கட்சி கவலையுடன் பார்க்கின்றது.

10. நாட்டில் எந்தவொரு இனமும் இன்னொரு இனத்துக்கெதிராக வன்முறையில் ஈடுபடுவதையும், அவற்றுக்கு தூபமிடுவதையும் நாம் கண்டிப்பதுடன் முப்பது வருட யுத்தம் ஓய்ந்து மக்கள் சுதந்திரமாக எல்லா இடங்களுக்கும் போய்வரலாம் என்ற சூழல் ஏற்பட்ட சில காலத்துக்குள் முஸ்லிம்கள் மட்டும் அச்சமின்றி நடமாட முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது கவலைக்குரியதாகும். இது பற்றி அரசாங்கம் சரியாக புரிந்து கொண்டு ஓர் இனம் இன்னோர் இனத்தை அவமதிக்க முனைவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

11. முஸ்லிம்கள் தம்மிடையே உள்ள இயக்க மற்றும் தப்லீக், தவ்ஹீத், சுன்னத்வல் ஜமாஅத், ஜமாஅத் இஸ்லாம், ஜமாஅதுல் முஸ்லிமீன் என்ற ஜமாஅத் பிளவுகளிலிருந்து விடுபட்டு முஸ்லிம்கள் அனைவரும் ஒரே ‘முஸ்லிம் ஜமாஅத்’ என்ற முஸ்லிம் சமூகமாக ஒன்றுபட்டு வாழ முன்வரவேண்டும்.

12. சமகால பிரச்சினைகளை அரசியல் ரீதியாக ஆராயும் வகையில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து ‘முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பை’ உருவாக்க வேண்டும்.

என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :