இவ்வாறு ஏழாவது 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியோடு இணைந்ததாக ஞாயிற்றுக்கிழமை (24) அம்பாறை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பயன்பாடுகள் பற்றிய செயலமர்வில் உரையாற்றும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். சட்டத்தரணிகள் மன்றத்தினர், பொலிஸார் ஆகியோர் பங்குபற்றிய இச் செயலமர்வுக்கு அம்பாறை மாவட்ட நீதிபதி ஏ.எம்.எம். சஹாப்தீன், நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ். பிரிங்கி, நீதியமைச்சின் மேலதிகச் செயலாளர் லக்ஷ்மி குணசேகர ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.
சென்ற ஆண்டு அநுராதபுரத்தில் நடைபெற்ற 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியின் போதும் அமைச்சரின் தலைமையில் இதே போன்ற செயலமர்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இச் செயலமர்வில் உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தவையாவன,
நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு, உரிய தீர்ப்புகள் வழங்கப்படுவதற்கு மிகவும் காலதாமதம் ஆவதாக ஜனாதிபதிக்கு கூட அநேகர் சுட்டிக்காட்டியுள்ளனர். அவ்வாறான கடிதங்கள் ஜனாதிபதியினால் எனது கவனத்திற்கு கொண்டுவரப்படுகின்றன.
வழக்குகளை தாமதமின்றி விசாரித்து முடிப்பதற்காக ஒதுக்கப்பட்ட 150 மில்லியன் ரூபா உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை, நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்த நிதியை சரிவர பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்களினது ஒத்துழைப்பு இன்றியமையாதது.
இவ்வாண்டு இறுதிக்குள் குடியியல் மற்றும் குற்றவியல் சட்டங்களைப்பொறுத்தவரை மகத்தான மாற்றங்கள் நிகழவுள்ளன.
எனது அமைச்சின் கீழ் உள்ள அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் செயல்பாடுகள் வழக்குத் தாமதங்களை வெகுவாக குறைப்பதற்கு பெரிதும் உதவக் கூடியவை. அவை பற்றி இங்கு இரசாயன பகுப்பாய்வாளர், சட்ட மருத்துவ அதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் விளக்கமளிப்பர்.
இவ்வாறான கலந்துரையாடலில் அம்பாறை கரையோரப் பிரதேச நீதிபதிகளும், சட்டத்தரணிகளும், பொலிஸாரும் முழுமையாக கலந்து கொள்வதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ஜனாதிபதி அம்பாறையில் இருப்பதனால் பாதுகாப்பின் நிமித்தம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதன் காரணமாக அவர்களில் பலருக்கு இந் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போய் இருப்பதாக என்னிடம் வினயமாக எடுத்துக் கூறப்பட்டது என்றார்.
இரசாயன பகுப்பாய்வாளர் லியனாராச்சி மற்றும் பிரதிப் பகுப்பாய்வாளர் குணதிலக ஆகியோர் உரையாற்றும் போது வழக்குகளின் போது நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் தடையப்பொருட்கள் ஆயிரக்கணக்கில் தேங்கிக்கிடப்பது பற்றி குறிப்பிட்டதோடு, கொலை, தற்கொலை, கற்பழிப்பு, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்செயல்கள் இடம்பெறும் பொழுது பெறப்படும் இரத்த, சிறுநீர், ஆண் உயிரணுக்கள், பெண் யோனித்திரவம் மற்றும் உடற் திரவங்கள் ஆகியவற்றின் மாதிரிகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு, பொதி செய்யப்பட்டு, குளிரூட்டப்பட்ட நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டு, காலதாமதமின்றி இயன்றவரை விரைவாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
அம்பாறை சட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் சிசிர செனவிரத்ன குற்றச்செயல்களின் காரணமாக உயிரழப்போரின் மரண பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது தாம் அனுபவிக்க நேர்ந்தவற்றை அங்கு சமூகமளித்தவர்களுடன் பகிர்ந்து கொண்டதோடு சடலங்களிலிருந்து தாம் சேகரிக்கும் மாதிரிகளை பொலிஸார் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு கொண்டு செல்வதற்கு இடையில் விரயமாகும் தேவையற்ற காலதாமதத்தையிட்டு கவலை தெரிவித்ததோடு, சேகரிக்கப்படும் மாதிரிகள் உரிய முறையில் பக்குவமாக கையாளப்படாவிட்;டால் அவை அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தை சென்றடைவதற்கு முன்னதாகவே பழுதடைந்து அறவே செயலிழந்து போவதால் பாரிய குற்றச்செயல்களை புரிந்தோர் போதிய விஞ்ஞான பூர்வமான தடையங்கள் அற்றுப் போவதன் காரணமாக வழக்குகளை நிரூபிக்க முடியாமல் போய்விடுவதாகவும் கவலை தெரிவித்தனர்.
அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி அஜித் ரோஹன (முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்) உரையாற்றுகையில் பாரதூரமான குற்றச்செயல்களின் போது விஞ்ஞானபூர்வமான பரிசோதனை முடிவுகள் மற்றும் ஆய்வறிக்கைகள் தாமதமாவதால் அல்லது அறவே கிடைக்காமலேயே போய்விடுவதால் குற்றச்செயல்கள் நிரூபிக்கப்படாமல் சூத்திரதாரிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடுவதாக அல்லது இலேசாக நழுவி விடுவதாக குறிப்பிட்டார்.
தற்பொழுது அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் பத்தரமுல்ல பெலவத்தையில் விசாலமான நிலப்பரப்பில் நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப வசதிகளோடு சிறப்பாக செயல்பட்;டு வருவதாகவும் அங்கு மரபணு பரிசோதனைகளை அமெரிக்காவில் விஷேட பயிற்சி பெற்ற விஞ்ஞானிகள் அறுவர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment