பொது பல சேனா ஆரம்பித்துள்ள இந்தப் பிரச்சினை முஸ்லிம் சிங்களப் பிரச்சினையாக ஒரு போதும் முடிவடையாது- அமைச்சர் பசீர் சேகுதாவூத்

பொது பல சேனா ஆரம்பித்துள்ள இந்தப் பிரச்சினை முஸ்லிம் சிங்களப் பிரச்சினையாக ஒரு போதும் முடிவடையாது. அது சிங்கள சமூகத்திற்குள் உள்ள உயர்சாதி, கீழ் சாதி என்ற பிரிவுகளில் ஊடுருவி கடைசியில் அது அவர்களுக்கே சாபக்கேடாக முடிவடையும் என உற்பத்தித் திறன் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஏறாவூரில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் அமைக்கப்படவிருக்கும் நான்கு மாடிகளைக் கொண்ட சத்திர சிகிச்சைக்கான கூட்டுறவு வைத்தியசாலையின் அடிக்கல் நடும் விழா இன்று  இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொத்துவில் முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதி அங்குள்ள மணல் மேட்டில் ஒரு புத்தர் சிலையை வைக்கப் பாடுபடுகின்றார்கள். இது இப்பொழுது தீர்க்கப்பட்டு விட்டது.

சிங்களவர்கள் வாழ்கின்ற பெரும்பான்மையான பகுதிகளில் வாழ்வதற்கு புத்தர் விரும்பாமல் அவர் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, முஸ்லிம்களும் சிறுபான்மையினரும் பெரும்பான்மையாக வாழுகின்ற பகுதிகளில் வந்து வாழ விரும்புகின்றார் போல் தெரிகின்றது என்பதை நான் அங்கு தெளிவு படுத்தினேன்.

புத்தர் ஒரு மதத்தைப் போதிக்கவில்லை, தான் ஒரு சமயத்தின் பிரதி நிதி என்றும் கௌதம புத்தர் கூறவில்லை. தான் ஒரு மதத்தை உருவாக்குகின்றேன் என்றும் புத்தர் கூறவில்லை. சொர்க்கம் நரகம் உண்டென்று அவர் சொல்லவில்லை.

அவர் உலக வாழ்க்கைத் தத்துவத்தைத்தான் போதித்தார். புத்தம் ஒரு மதமல்ல. அது ஒரு தத்துவம்.

இது ஒரு இக்கட்டான கால கட்டம். அரசியல் வாதிகள் ஊடகப் பிரபல்யத்துக்காக வாய்க்கு வந்ததையெல்லாம் உளறி விட்டுப் போகக் கூடாது.

நாட்டின் அரசியலினுடைய எதிர் காலப்போக்கு இப்போதே வாசமெடுக்கின்றது. பெரிய சூழ்ச்சி வலை பின்னப்படுகின்றது.

இந்த சதி நாச சூழ்ச்சி வலையில் முஸ்லிம் சமூகம் சிக்கிக் கொள்ளத் தேவையில்லை. இந்தக் கண்ணோட்டத்தில்தான் நாம் பொது பல சேனாவை எதிர் கொள்ள வேண்டும்.

இதற்குப் பெரிய முக்கியத்துவம் கொடுத்து இளைத்துக் களைத்து இழப்புக்களைச் சந்தித்துச் சீரழிய வேண்டிய அவசியம் இல்லை.

“ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்தவொரு இனத்திற்கும் எதிரானவர் அல்ல. அவருடன் பழகுகின்றபோது அது தெரிய வரும். முதலில் கள நிலவரங்களின் யதார்த்தத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என

சரத் பொன்சேகாவைக் கொண்டு வந்து ஆட்சியை மாற்ற சர்வதேச வலைப்பின்னலினூடாகச் சதி செய்தார்கள் அது தோற்றுவிட்டது. பிரதம நீதியரசர் விவகாரத்தைக் கையிலெடுத்தார்கள். அதுவும் படுதோல்வி கண்டு விட்டது.

இந்த நாட்டின் 65 வருட சுதந்திரத்திற்குப் பின்னரான தற்போதைய கால கட்டத்தில் வாழ்க்கை நடைமுறையிலும், அரசியல் நடவடிக்கைகளிலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் தலைகீழான மாற்றத்தைக் கொண்டு வருவதற்குரிய சூழ்ச்சி உலகின் எங்கோ ஓர் மூலையில் நடக்கின்றது.

இப்பொழுது நடப்பது ஜனநாயகம் அல்ல இதுவொரு தன்னிச்சையான சண்டிநாயகம்.  ஜனநாயகம் இப்பொழுது உலகில் மரணித்து விட்டது. இது சண்டியர்கள் ஆளுகின்ற காலம். கும்பல்களின் ஆட்சி நடக்கிறது. தடியெடுத்தவன் எல்லாம் சண்டியர்கள். உலகம் முழுக்க இதுதான் நடக்கின்றது.

இப்படிப்பட்ட ஒரு சூழ் நிலையில் பொறுப்பு வாய்ந்த ஒரு சமூகம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

எறாவூரில் எல்லோரும் ஹபாயா அணிந்து முகத்தை மூடிக் கொண்டுதான் இங்கிருப்பார்கள் என்று அவர் ஏறாவூருக்கு வரும்போது நினைத்திருந்ததாகவும் ஆனால் இங்கே வந்து பார்த்த பொழுது மாணவ மாணவியர் ஆசிரியர்கள் மிகக் கண்ணியமான கலாச்சார உடையணிந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று ஜனாதிபதி என்னிடம் சொன்னார்.

நாட்டின் தலைவர் என்கின்ற வகையில் எல்லோரையும் சரிசமமாகப் பார்த்துச் செயற்பட வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இருக்கின்றது. எந்த சமூகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்கின்ற ஆலோசனைகளை ஜனாதிபதியபெற்றிருக்கின்றார்.

சிலர் பொது பல சேனாவுடன் நாங்கள் உக்கிரத்தாண்டவம் ஆடவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கின்றார்கள்.

கொஞ்சக் காலத்திற்கு முன்னர் இப்படித்தான் கிறீஸ் பேயை அனுப்பி புரளியை ஏற்படுத்தினார்கள். இவையெல்லாம் சமூகங்களுக்கிடையிலான பிளவை ஏற்படுத்தி சுமுக நிலையைச் சீர்குலைக்க நினைக்கும் சிந்தனை வடிவங்கள் தான்.

இவையெல்லாம் ஜனாதிபதிக்குத் தெரியும். முட்டியைக் கொண்டு எங்களை மிரட்ட வருபவனிடம் நாங்கள் எங்கள் தலையைக் கொடுத்து அடிவாங்கும் நிலைக்கு  வந்து விடக்கூடாது.

நாங்கள் மிக மிக அவதானமாக இருக்க வேண்டிய ஒரு கால கட்டம் இது. இப்போது அரசியலில் எல்லாமே சீரழிந்திருக்கின்றது.

பொதுபல சேனாவின் விடயத்தில் அரசியல் தலைவர்கள் ஆக்ரோஷமாகக் குரல் கொடுக்கவில்லை என்று ஊடகங்களில் குற்றச் சாட்டுக்கள் வருகின்றன. அப்படிச் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

அப்படியொரு நிலைமைக்குள் முஸ்லிம் சமூகத்தை இழுத்துச் சென்று இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி விடவே பொதுபல சேனாவும் அதற்குப் பின்னாலுள்ள சக்திகளும் முயற்சிக்கின்றார்கள்.

அரசியல் வாதிகள் பேசாமல் இருந்ததால் கிடைக்கும் நன்மைகள் ஆத்திரப்பட்டு எதையாவது உளறி விடுவதால் எதுவும் கிடைத்து விடப் போவதில்லை.

சரத் பொன்சேகா வினால், பிரதம நீதியரசர் விவகாரத்தால், 35 இலட்சமாய் இருந்த தமிழர்களால் போராடி முடியாததை, உலகில் எட்டுக் கோடியாக இருக்கின்ற தமிழர்களால் முடியாமற் போனதை, உலகில் இன்று நூற்றைம்பது கோடி சனத்தொகையை எட்டிப் பிடித்திருக்கின்ற முஸ்லிம்களைக் கொண்டு செய்து முடிக்கப் பார்க்கின்றார்கள். இந்த இடத்தில்தான் நாம் மிக மிக அவதானமாக இருக்க வேண்டும்.

அரசியலில் எதுவும் நடக்கலாம். இலங்கையில் ஆகக் குறைந்த வாக்குகளைப் பெற்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக வந்த ஒரே ஒருவர் இலங்கையில் நான் மட்டும்தான் எல்லாவற்றுக்கும் நம்பிக்கையே பிரதானம்.” என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :