மட்டக்களப்பு மாநரசபை உறுப்பினர் ரம்ழானுக்கு உலமாகட்சித்தலைவரின் பதில்.


அறியாத விடயத்தை அறிந்தோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற குர்ஆன் வார்த்தைக்கிணங்க அவர் கேள்விகள் கேட்டிருந்தது பாராட்டத்தக்கது.
ஆனாலும் சில விடயங்களில் அவரே சுயமாக பதிலும் தந்துள்ளது அவரது அறியாமையை காட்டுகிறது. இனி நான் பதிலுக்கு வருகிறேன்.
1. இந்த நாட்டில் ஆண்மீக கடமை செய்ய வேண்டிய உலமா, அரசியல் அறிக்கை விடலாமா என்பது போல் கேட்டுள்ளார். ஆண்மீகம் என்பது அரசியலையும் சேர்த்துத்தான் என்பது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான இவருக்கு தெரியாது போனது விந்தையல்ல. ஏனென்றால் அக்கட்சியை சேர்ந்தோருக்கு இஸ்லாம் சரியாக தெரியாது.
2. நாங்கள் லெட்டர் ஹெட் கட்சி என்றும் என்னை நானே தலைவர் என கூறிக்கொள்வதாகவும் சிறு பிள்ளை தனமாக கூறியுள்ளார். இவருக்கு ஸ்ரீ. மு. காவின் வரலாற கூட தெரியாது என நினைக்கிறேன். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்களை இந்த முழு முஸ்லிம் சமூகமும் இணைந்து தலைவராக தேர்ந்தெடுக்கவில்லை.
காத்தான்குடியில் கூடிய நாலு பேர் சேர்ந்து அவரை தலைவராக்கினார்கள். அந்த வேளை அவரை அவர் ஊரான கல்முனையிலும் நாலுபேரை தவிர யாரும் தலைவராக ஏற்கவில்லை. அந்த நாலுபேரில் நானும் ஒருவன்.
அதன் பின் அவர் 88ம் ஆண்டு கட்சி பதிவு பெறும் வரை லெட்டர் ஹெட்டில்தான் கட்சி நடத்தினார். அவர் கல்முனையிலிருந்து இரவோடிரவாக கொழும்புக்கு அகதியாக சென்றபோது அவருக்கு இருக்க இடங்கொடுக்க கல்முனையிலோ காத்தான்குடியிலோ எவரும் இருக்கவில்லை.
பின்னர் 88ம் ஆண்டு கட்சி பதியப்பெற்று அதற்கு தென்னிலங்கை மக்கள் வாக்களித்த பின்தான் கல்முனை மக்களும் காத்தான்குடி மக்களும் அவரை திரும்பிப்பார்த்தார்கள். அதுவும் கட்சியை பதிய அங்கத்தவர்கள் இல்லை என்பதால் ஐயாயிரம் விண்ணப்பங்கள் அச்சிட்டு அதனை பழையதாக காட்ட தூசியல் புரட்டி சமர்ப்பித்த கதையெல்லாம் இப்போது பழம் திண்ணும் உங்களுக்குத் தெரியாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் நானும் கொஞ்சப்பேரால் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது என்னுடன் இருந்தவர்கள் மௌலவி பத்ருத்தீன் கபூரி (குருனாகல்) மௌலவி இப்றாகீம் உமர் (அட்டாளைச்சேனை), மௌலவி அஸ்வர் பாக்கவி (கொழும்பு), மௌலவி முஸம்மில் (ஏறாவுர்), மௌலவி றாஸிக் (மன்னார்), மௌலவி லியாகத் அலி (புத்தளம்). ஆக நான் என்னை தலைவர் என சுயமாக அறிவிக்கவில்லை என்பதுடன் தேசிய மட்டத்தினாலானவர்களால் தெரிவு செய்யப்பட்டேன்.
3. மக்கள் முன் எமது கட்சியை நிறுத்த கால நேரம் இன்னமும் வரவில்லை. ஆனாலும் ஒரு கட்சி தேர்தல் திணைக்களத்தில் பதிவு பெற அது களத்தில் ஆறு வருடங்கள் அரசியல் செய்திருக்க வேண்டும் என்ற சட்டமிருப்பது அரசியல் கட்சியின் அங்கத்தவரான உங்களுக்கு தெரியவில்லை என்பது தெரிகிறது. நாம் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக பேச யாரும் அதிகாரம் தரத்தேவையில்லை. அது ஒரு முஸ்லிமின் தார்மீக கடமை. 
அத்துடன் எமது கட்சியை மக்கள் மயப்படுத்துவதில் நாம் தீவிரமாக செயற்படவில்லை. காரணம் எமது பிரதான நோக்கம் மக்களை இஸ்லாமிய அரசியலின் பக்கம் அழைப்பதேயாகும். வாக்கு கேட்பதெல்லாம் இரண்டாம் பட்சம். இஸ்லாமிய அரசியல் என்றால் உண்மை, நேர்மை, மக்களை ஏமாற்றாமை, வெளிப்படத்தன்மை என்பதாகும்.
4. எமது அறிக்கையினால் சமூகம் நன்மையடைந்துள்ளதா என தேடி பார்த்ததாகவும் எதுவும் இல்லை என்று பொய் சொல்லியுள்ளீர்கள். நீங்கள் தேடிப்பார்க்கவே இல்லை. காத்தான்குடி மஞ்சந்தொடுவாயில் உள்ள 45 குடும்பங்களுக்கு 2005ல் சுனாமி நஷ்டஈடு கிடைக்காத போது புலிகளின் பாரிய முட்டுக்கட்டையை எமது பத்திர்கை அறிக்கை (சுடர் ஒளி) உடைத்தெறிந்து ஒரு குடும்பத்துக்கு இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் வீதம். அன்றைய ஜனாதிபதி மூலம் பெற்றுக்கொடுத்தோம். அதற்கு சாட்சி காத்தான் குடி அப்துல் ரஹிம் மௌலவி. தற்போது கட்டாறில் உள்ளார். அத்தோடு மௌலவி ஆசிரிய நியமனத்தை எமது அறிக்கைகளால் வெளிக்கொணர்ந்தவர்கள். இது போல் பல. எமது அறிக்கை காரணமாக மு. கா தலைவர் பல மேடைகளில் எம்மை ஏசியுள்ளார். அந்தளவுக்கு எமது அறிக்கைகள் அவரை தூங்க விடாமல் செய்துள்ளன.
5. இன்று முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பஜிரோக்களுக்கு விலை போவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மைதான். இவ்வாறு சோரம் போயுள்ள கட்சியின் அங்கத்தவர்தான் நீங்கள் என்பதை மறந்து போனது ஏன்?
இந்த நேரத்தில் ஒரு உலமாவான நாம் எம்மோடு ஒற்றுமைப்படும்படி சமூகத்தை அழைக்கிறோம். சோரம் போன, சமூகத்தை காட்டிக்கொடுத்த, போக்கிரிகள், கள்வர்கள், ஏமாற்றுக்காரர்கள் நிறைந்த உங்கள் கட்சியில் ஒன்றுபடுங்கள் என ஒரு உலமாவான நாம் மக்களிடம் சொல்லி அவர்களை ஏமாற்றலாமா? முடியவே முடியாது. அதனால்தான் மாற்றீடாக எமது கட்சியில் ஒன்று படும்படி அழைக்கிறோம். அதனால்த்தான் ஊடகங்கள் மூலமாக எமது இஸ்லாமிய அரசியலை சமூக மயப்படுத்தகிறோம்.
அதனை சமூகம் உடனடியாக ஏற்றுக்கொள்ளும் என எண்ணுவது மடமை. வல்லமை வாய்ந்த நபியவாகளுக்கே 13 வருட பிரச்சாரத்தில் சுமார் 70 பேரே அன்னாரின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். நாம் அவர்களுக்கு முன் ஒரு அற்பம். உலமாக்கள் தலைமையிலான முஸ்லிம் அரசியல் கட்சி மூலமே இந்நாட்டு மக்கள் சுயநலமற்ற அரசியல் பயணத்தில் வெல்ல முடியும் என்ற எமது கருத்தை சமூகம் அங்கீகரிக்க இன்னும் பல தசாப்தம் செல்லலாம் என்பது எனது கணிப்பு. ஆனாலும் அது நிச்சயம் எனது மௌத்துக்கு பின்னராவது இன்ஷா அள்ளா நிறைவேறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
6. தற்போதைய ஜனாதிபதியை வெல்ல வைத்த எனக்கும் ஒரு கதிரை கிடைத்திருக்க வேண்டுமே என நீங்கள் கூறுவதன் மூலம் உங்கள் இரத்தத்தில் ஊறிப்போயுள்ள சுயநலம் தெரிகிறது. ஜனாதிபதி 2005ம் ஆண்டு வென்றவுடன் எல்லோரும் ஓடிப்போய் பதவி கேட்டார்கள். நான் மட்டும்தான் எமக்கு எந்த பதவியும் வேண்டாம் எமது கோரிக்கையான மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்கங்கள் என கூறி அதில் வெற்றியும் பெற்றேன். வேண்டுமானால் உங்கள் கட்சிதானே இப்போது ஜனாதிபதி மாளிகையில் நக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் சொல்லி ஜனாதிபதியை கேட்கச்சொல்லுங்கள் உண்மையா என்று.
இதைத்தான் 2008ம் ஆண்டு ஜனாதிபதி அவர்கள் மஹரகமை கூட்டம் ஒன்றில் “என்னிடம் எந்தவொரு பிரதிபலனையும் எதிர் பார்கக்hமல் எனக்கு ஆதரவு தரும் ஒரேயொரு முஸ்லிம் கட்சித்தலைவர் இவர்தான்” என என்னை மேடையில் நின்றவாறே சுட்டிக்காட்டினார். அப்போது ஆளுனர் அலவி மௌலவானா, அஸ்வர் ஹாஜியார், அமைச்சர் அமீரலி ஆகியோரும் இருந்தனர். கேட்டுப்பாருங்கள். இதன் பொருள் உங்களுக்கு புரிகிறதா?
7. பெதுபலசனாவுக்கு எதிராக என்ன அதற்க முன்பே தம்புள்ள பள்ளி தாக்கப்பட்ட போது அதற்கெதிராக ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடாத்த முன் வர வேண்டும் என பகிரங்க அறிக்கை மூலம் கோரினோம். இதற்காக சி ஐ டி பொலிசாரால் விசாரணை செய்யபப்பட்டோம்.
தம்புள்ள தேரருக்கு எதிராக நாம் விடுத்த பகிரங்க அறிக்கை தேரர்களையே கதி கலங்கச்செய்தது. எமது கட்சி மக்கள் வாக்குகள் பெற்ற கட்சியல்ல. அப்படி இருந்தால் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை செய்து இந்நேரம் நான் சிறையில் இருந்திருப்பேன். புலிகளை பகிரங்கமாக கண்டித்து பேசிய எனக்கு இந்த தேரர்கள் மிகச்சாதாரணம். உங்கள் கட்சிக்கு நாடு முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒரு இடத்திலாவது உங்கள் தலைவர்களை அழைத்து ஒரு சிறிய ஆர்ப்பாட்டம் ஒன்றாவது செய்தீர்களா? பயம். பதவிகள் பறிபோகும் என்ற பயம்.
8. எங்கள் கட்சியின் தேசிய மாநாடு கொழும்பு, கல்முனை என நடந்துள்ளது. பாவம் உங்களுக்கு பத்திரிகை படிக்கும் பழக்கம் இல்லை என நினைக்கிறேன். உங்கள் முகவரியை அனுப்புங்கள். இது பற்றி போட்டோக்களுடன் வந்த எமது புத்தகத்தை அனுப்புகிறேன்.
9. நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றது ஒருவரின் தியாகத்தால் வளர்ந்த கட்சியில். நான் தனித்து நின்று தேர்தலில் தோற்றவன். 2004ம் ஆண்டு நான் அம்பாரையில் ஹக்கீம், பேரியல், அதாவுள்ளா ஆகிய மூவரையும் எதிர்த்து நின்றேன். நான் போட்டியிட்ட கட்சி 43 கட்சி சுயேற்சைகளுக்குள் 7வது இடத்தை பிடித்தது. தோற்பது பெரிதல்ல, அயோக்கியர்களை துணிந்து பகிரங்கமாக எதிர்த்து நின்பதுதான் பொது. இந்த வகையில் எனக்கு இறைவன் பாரிய வெற்றியை தந்தான். ஹுசைன் ரழி அவர்கள் கர்பலாவில் தோற்றதை கேவலமாக பார்க்கிறீர்களா அல்லது அவர் எதிர்த்து நின்றதை பலமானதாக பார்க்கிறீர்களா?
இன்றும் நாம் எதுவித பாதுகாப்பு பந்தோபஸ்த்தும் இன்றி அரசையும் முஸ்லிம் ஏமாற்று அரசியல்வாதிகளையும் எதிர்க்கிறோம். காரணம் எமக்கு இந்த முஸ்லிம் சமூகத்தின் நலன்தான் முக்கியம். நீங்கள் மாற்றான் மாளிகையில் இருந்து கொண்டு பேசுகிறீர்கள். நான் எனது சொந்த குடிசையில் கௌரவமாக இருந்து கொண்டு பேசுகிறேன். எது சிறந்தது என்பது புத்தியுள்ளவர்களுக்கு புரியும்.
10. என்னைத்தவிர எமது கட்சியை சேர்ந்த எவரும் அறிக்கை விடுவதில்லையே என கேட்டுள்ளீர்கள். இது விடயத்தில் நாம் மிக கவனமாக இருக்கின்றோம். நாம் வளர்ந்து வரும் கட்சி. ஒரு வசனப்பிழை வந்தாலும் தூக்கிப்பிடிப்பார்கள். அதனால் கட்சியின் பேச்சாளனாகவும் நானே இருக்கிறேன். ஆனாலும் செயலாளரினதும் உப தலைவரினதும் பேச்சுக்கள் பத்திரிகைகளில் வந்துள்ன.
இறுதியாக மழை பெய்வது பொது நலம் அதற்காக குடை பிடிப்பது சுயநலம் என்பது உண்மை. ஆனால் மழையில் நனையும் மக்களை பாதுகாக்க குடையையும் உதறி விட்டு முன்வருவதுதான் உண்மையான பொது நலம்.
மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கபூரி, நத்வி, மதனி, பீ. ஏ. ஜேர்னலிசம், தலைவர், முஸ்லிம் மக்கள் கட்சி (நான் எனது மதுரசா பட்டங்களை குறிப்பிடுவதை விரும்புபவன் அல்ல. ஆனால் அது பற்றியும் கேள்வி வரலாம் என்பதற்காக குறிப்பிடுகிறேன் )


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :