காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஊடக அறிக்கை இலங்கை முஸ்லிம்கள் மிகவும் இக்கட்டானதொரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இத் தருணத்தில் முஸ்லிம் சமூகத்தின் மார்க்க தலைமைத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கவும் சின்னாபின்னப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் எம்மைக் கவலையடையச் செய்துள்ளன. பௌத்த தீவிரப் போக்குடைய சக்திகளால் அண்மைக்காலமாக இஸ்லாத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் பிரசாரங்களும் குறிப்பாக ஹலால் சான்றிததழுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றவையாகும். இந்நிலையில் குறித்த விஷம பிரசாரங்களிலிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த அங்கீகாரத்தைப் பெற்ற தலைமைத்துவமான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மேற்கொண்ட சளைக்காத முயற்சிகள் இந்த இடத்தில் மெச்சத்தக்கனவாகும். ஹலால் சான்றிதழை இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் என பௌத்த தீவிரப் போக்காளர்கள் கங்கணம் கட்டிச் செயற்பட்ட போதிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இதுவிடயத்தில் நாட்டு நலனையும் வரலாறு நெடுகிலும் பேணப்பட்டு வரும் சிங்கள-முஸ்லிம் இன உறவையும் சகவாழ்வையும் கருத்திற் கொண்டும் மேற்கொண்ட விட்டுக் கொடுப்பின் அடிப்படையிலான தீர்மானத்தினை இன்று சிலர் விமர்சிக்கத் தொடங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஓர் ஆரோக்கியமான சமூகத்தின் இருப்புக்கு விமர்சனங்கள் அவசியம் என்கின்ற போதிலும் இதுவிடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை நோக்கி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் இந்த நாட்டு முஸ்லிம்களின் தலைமைத்துவக் கட்டமைப்பை சீர்குலைப்பதை அடிப்படையாகக் கொண்டவை என்றே சம்மேளனம் கருதுகிறது. இலங்கை முஸ்லிம்கள் காலாகாலமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை அங்கீகரிக்கப்பட்ட சிவில் சமூக, சமய தலைமைத்துவக் கட்டமைப்பாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன் அதன் வழிகாட்டல்களுக்கு இணங்கவே செயற்பட்டும் வருகின்றனர். 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவானது இன்று வரை இலங்கை முஸ்லிம்கள் சவால்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் தன்னால் இயன்ற வழிகாட்டல்களையும் தலைமைத்துவத்தையும் வழங்கி வந்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக வெளிச் சக்திகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டபோதும் முஸ்லிம்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகளும் வன்முறைகளும் தலையெடுத்த போதும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நடுநிலைமையாக செயற்பட்டு சுமுக நிலையை தோற்றுவிக்க மேற்கொண்ட அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும். காத்தான்குடி, பேருவளை, வெலிகம உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மார்க்க விவகாரங்கள் தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலைக்கு தீர்வு காணும்வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மேற்கொண்ட சமரச முயற்சிகளே இன்று வரை அப் பகுதி மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ள வழிசமைத்துள்ளது என்பதை நாம் இந்த இடத்தில் நினைவுபடுத்திப் பார்ப்பது பொருத்தமானதாகும். இஸ்லாமிய அமைப்புகளிடையே கருத்து முரண்பாடுகள் தோற்றம்பெறும்போது அவற்றைக் களைந்து வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் நோக்கில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ‘ஒருங்கிணைப்புக்கும் ஒத்துழைப்புக்குமான கவுன்சில்’ எனும் அமைப்பை தோற்றுவித்து சிறப்பாக செயற்படுத்தி வருகிறது. இவ்வாறான பின்னணியில் இலங்கை முஸ்லிம்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்திகளையும் கருத்து வேறுபாடுகளையும் தோற்றுவித்து அதில் குளிர்காய முனையும் சக்திகள் தொடர்பில் முஸ்லிம்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் வேண்டுகோள்விடுக்க விரும்புகிறது. இந்த நாட்டில் முன்னெப்போதுமில்லாதவாறு முஸ்லிம் சமூகம் மிகப் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அந்த சவாலை எதிர்கொள்ள வேண்டுமாயின் நாம் அனைவரும் ஒரே தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றுமைப்பட்டுச் செயற்படுவதே புத்திசாதுரியமானதாகும். இதனை மறந்து நமக்குள் நிலவும் சிறு கருத்து வேறுபாடுகளையும் பெரிதுபடுத்தி அதன் மூலம் முரண்பாடுகளை வளர்க்க முற்படுவோமாயின் அது நமக்கு நாமே இழைத்துக் கொள்ளும் பாரிய துரொகமாகவே அமையும். அந்த வகையில் நாட்டின் ஒற்றுமையையும் சமாதான சகவாழ்வையும் கருத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எடுத்துள்ள இத் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு செயற்படுமாறு சகல முஸ்லிம்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதோடு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தனது அர்பணிப்பான பணிகளில் சளைக்காது செயலாற்ற வேண்டும் என்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் வினயமுடன் வேண்டுகோள்விடுப்பதுடன் ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்து ஈருலகிலும் வெற்றி பெற்ற சமூகமாக மாற வல்ல இறைவனிடம் பிரார்த்திக்குமாறும் கேட்டுக் கொள்கிறது.VV |
Home
/
LATEST NEWS
/
Slider
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் கீழ் ஒன்று படுவோம் -காத்தான்குடி சம்மேளனம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment