சம்பிக்க அல்ல அவரின் அப்பா வந்தாலும் ஹலாலை விட முடியாது, ஹரிஸ்



ஏ.எச்.எம்.பூமுதீன்

சம்பிக்கவின் அப்பன் வந்தாலும் ஹலாலை விட முடியாது, இவ்விடயத்தில் உயிர் துறக்கவும் முஸ்லிம்கள் தயார் என்று முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் எம்.பி ஆவேசம் வெளியிட்டுள்ளார்.

பொதுபல சேனாவின் பிரசாரத்துக்கு அடிபணிந்து ஹலால் சான்றிதழை எக்காரணம் கொண்டும் உலமா சபை வாபஸ் வாங்கக் கூடாதெனவும் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி. தெரிவித்தார்.


அவர் வழங்கிய விசேட நேர்காணலின் போதே இவற்றைக் குறிப்பிட்டார்.

கேள்வி: ஹலாலை விட்டுக் கொடுத்தால் என்ன?

பதில்: ஹலால் என்பது மார்க்கக் கடமை அதனை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க                       முடியாது. ஐவேளை தொழுவது எப்படி மார்க்கக் கடமையோ அதே போன்று ஹலால் உணவை உண்பதும் மார்க்கக் கடமையாகின்றது. இதில் விட்டுக் கொடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்த மார்க்கக் கடமையை தடுக்க எவருக்கும் உரிமையும் கிடையாது. இந்த நாட்டில் முஸ்லிம்களாகிய நாங்கள் சிறுபான்மையினராக விருப்பதால் ஹலால் முத்திரை பொறிக்கப்பட்ட பொருட்களை வாங்கி உண்பது எமது அடிப்படை உரிமையாகின்றது. பொதுபல சேனா இன்று ஹலாலுக்கு எதிராக முன்னெடுக்கின்ற எந்த முன்னெடுப்பையும் முஸ்லிம் சமூகம் எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.

ஹலால் முத்திரைப் பொறிக்கப்படாத எந்தவொரு பொருளையும் கொள்வனவு செய்ய நாங்கள் தயாராகவுமில்லை. ஹராத்தை உண்பதற்கு எவரும் எம்மை திணிக்க முடியாது. அவ்வாறு முயற்சிப்பார்களாயின் அதற்கு எதிராக எந்த விலையைக் கொடுக்கவும் முஸ்லிம் சமூகம் தயார் நிலையில் உள்ளது என்பதை மிக உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி: 31ம் திகதிக்கு முன்பு ஹலாலை வாபஸ் வாங்க வேண்டுமென்று அமைச்சர் சம்பிக்க கூறியுள்ளாரே?

பதில்: சம்பிக்க அல்ல அவரின் அப்பன் வந்தாலும் ஹலாலற்ற உணவுப் பொருட்களை முஸ்லிம் சமூகத்தை உண்ணவைப்பதற்கு அவர்களால் முடியாது. இதுவொன்றும் அரசியல் பதவிப் போராட்டமல்ல, மண் மீட்புப் போராட்டமுமல்ல. இது மார்க்கக் கடமையிலுள்ள விடயம். இதன் பின் விளைவுகள் என்னவென்று புரியாமல் அமைச்சர் சம்பிக்க இருக்கலாம்.

உலகின் முஸ்லிம் சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிந்தனை வடிவிலான தெளிவின்படி இஸ்லாத்துக்காக உயிரை விடவும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தயாராகவுள்ளனர் என்பதை சம்பிக்க போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு நிலையிருக்கும் போது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை உரசிப் பார்க்கும் வேலைகளை கடும் போக்காளர்கள் உடன் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

கேள்வி: உயிரைக் கொடுக்கவும் தயார் என்கிறீர்கள்? ஆனால், குறைந்தது இதனை முறியடிக்க இதுவரை எந்தவொரு முன்னெடுப்பும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லையே?

பதில்: உண்மை தான் ஏற்றுக் கொள்கின்றேன். முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையின் பின்னணியில் அரசியல், மத ரீதியான துவேசம், வியாபார போட்டித்தன்மை, சனத்தொகை வளர்ச்சி வீதம் போன்ற பல காரணிகள் காணப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட பலமிக்க கட்டமைப்பு இதில் பின்னணியிலுள்ளது.

இலங்கை அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆரோக்கியமற்ற இந்த செயற்பாட்டை முறியடிக்க முஸ்லிம் சமூகம் இன்னும் தயார் நிலையில் இல்லை என்பது மிகக் கவலைக்குரிய விடயமாகும். சரியான, ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத் திட்டமொன்று முஸ்லிம் சமூகத்திலிருந்து வெளிவரவில்லை என்பதை மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் கவலையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இதனை முறியடிக்க முஸ்லிம் அரசியல் தலைமைகள், மக்கள் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், உலமாக்கள், இளைஞர்கள் உள்ளடங்கிய ஒரு அமைப்பு ரீதியான பொறிமுறை அவசரமாக உருவாக்கப்பட்டு இந்தச் சவாலை முறியடிக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி: உங்களின் கட்சி இது தொடர்பில் அரசுடன் பேசியதா?

புதில்: பல தடைவ பேசியிருக்கிறோம். முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரத்தை தடுத்து நிறுத்துங்கள் என்று மிகக் காட்டமாகவும் கூறியிருக்கின்றோம். ஜனாதிபதி மற்றும் அரச உயர்மட்ட அமைச்சர்களை சந்தித்த வேளை, ஹலால் விடயத்தில் விட்டுக் கொடுப்புக்கே இடமில்லை என்பதை மிக ஆணித்தரமாக கூறியிருந்தோம்.

இந்த அடிப்படையில் தான் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் எங்கள் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட மூன்று முஸ்லிம் அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஆதனால் சாதகமான முடிவொன்று வரும் என்று பொறுமையாக காத்திருக்கின்றோம்.

கேள்வி: அரசுடன் பேச்சு நடத்தியிருந்தாலும் அரசு இதுவரை உருப்படியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையே?

புதில்: அரசு – பொதுபல சேனாவை கட்டுப்படுத்துவதில் மெத்தனப் போக்குடன் செயற்படுகிறது என்ற நிலை முஸ்லிம்கள் மத்தியில் உள்ளதை வெளிப்படையாக கூறித்தான் ஆக வேண்டும். இரும்புக்கரம் கொண்டு பொதுபல சேனாவை அரசு அடக்கியிருக்கலாம் என்பது சமூகத்தின் கருத்தாகவுள்ளது.

இவ்வாறான நிலையில் தான் பொதுபல சேனாவை அடக்கி வைப்பதற்குப் பதிலாக பல அமைப்பினருடன் பேச்சு நடாத்தி அமைச்சரவை உப குழுவை அரசு நியமித்துள்ளது. அந்தக் குழுவின் முடிவு எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்பு வரும் என்பதால் முஸ்லிம் சமூகம் மிகப் பொறுமையாக அந்த முடிவை எதிர்பரத்துக் கொண்டிருக்கின்றது.

கேள்வி: முஸ்லிம்கள் இன்னும் எத்தனை காலத்துக்கு அச்சத்துடனேயே வாழ வேண்டுமென்று அரசு விரும்புகின்றது?

புதில்: உண்மையில் பள்ளிகளை சேதமாக்குவதிலிருந்து ஆரம்பித்து உணவு, உடை, உறையுள் என்று முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலோங்கிச் செல்கின்றன. பள்ளிவாசல்களுக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமது தனிப்பட்ட வாழ்வுரிமை குறித்த அச்சம் இன்று இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தென்பகுதி முஸ்லிம்கள் பெரும் அச்சத்துடன் வாழ்வதை எக்காhரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. பாடசாலை சென்ற மாணவிகள் வீடு திரும்புவரா என்ற அச்சம் இன்று பெற்றோர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்களை பஸ் தரிப்பிடங்களிலும் அவர்கள் கடமைரியும் அலுவலகங்களிலும் கிண்டலடித்து, கேவலப்படுத்தும் செயற்பாடுகளும் விரித்தாடுகின்றது.

இவ்வாறான மிகக் கேவலமான முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிச்சயமாக முஸ்லிம் இளைஞர்களை பொறுமையிழக்கச் செய்யும் என்பதை சம்பிக்க முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மீண்டுமொரு யுத்தத்தை ஏற்படுத்த சில சக்திகள் முனைந்து வரும் இக்கால கட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளால் முஸ்லிம் இளைஞர்களை ஆத்திரமூட்டச் செய்து வேறு திசைகளுக்கு அவர்களை கொண்டு செல்ல தூபமிடும் சம்பவங்களாகவே இவை அமையும் என்பதை மிக எச்சரிக்கையுடன் கூறிவைக்க விரும்புகிறேன்.

கேள்வி: உங்கள் மறைந்த தலைவர் அஷ்ரஃப் நாட்டைக் காட்டிக் கொடுத்தாராமே?

பதில்: இலங்கை முஸ்லிம்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள், மர்ஹும் அஷ்ரஃபும் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர் என்று அமைச்சர் சம்பிக்க கூறியிருப்பதை அறிந்து அதிர்ச்சியும், ஆத்திரமும் கொண்டேன்.

30 வருட யுத்தத்தை வெற்றி கொள்ள முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது. வடக்கு கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் இதற்காக விலை கொடுக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் உயிர்ப்பலி, ஒரு மாகாணத்திலிருந்து முஸ்லிம் சமூகமே வெளியேற்றப்பட்டது.

எமது தலைவர், மாமனிதர் மர்ஹும் அஷ்ரஃப் மு.கா. வை ஆரம்பித்ததே தமிழ் இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து விடக்கூடாது என்பதற்காகவே. அன்று புலிகள் பாசிசவாத நடவடிக்கைகளை எதிர்த்தது மட்டுமன்றி சந்திரிக்கா அரசில் பங்காளியாகி நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு உதவியவர். இதனை சம்பிக்க மறந்திருக்கலாம்.

மர்ஹும் அஷ்ரஃப் நாட்டுக்காக சேவையாற்றுவதை அறிந்துதான் மேற்குலக சக்திகள் உள்ளுர் சக்திகளுடன் இணைந்து திட்டமிட்டு அவரை படுகொலை செய்ததை நாங்கள் இன்னும் மறக்கவில்லை. நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த நாட்டுப் பற்றாளரை நன்றி கெட்டதனமாக பழி சொல்வது, சம்பிக்கவை ஒரு மட்டமான புத்தியுள்ளவராகவே என்னால் பார்க்க முடிகின்றது.

கேள்வி: ஹலால் சான்றிதழுக்காக உலமா சபை பெறும் பணம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: உலமா சபை அவ்வாறு பெறப்படும் பணத்தை தீவிரவாத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன். ஆபத்தான குற்றச்சாட்டு அது. வெளிப்படைத் தன்மையுடன் அவர்களின் கணக்கு விபரங்கள் உள்ளன. பாதுகாப்பு அமைச்சுக்கும் அவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம் தீவிரவாத இயக்கங்கள் நாட்டில் இல்லாத சூழ்நிலையில் இவ்வாறு அபத்தமாகக் கூறுவது கண்டிக்கத்தக்கது. சிங்கள மக்களை பிழையாக வழி நடத்தும் நடவடிக்கை.

கேள்வி: அப்படியென்றால் சூறா அல் – பகறாவின் 174வது வசனத்தின்படி இது பிழையல்லவா? அப்படியென்று சம்பிக்க கேள்வி எழுப்புகிறாரே?

பதில்: சூறா  அல் – பகறா பற்றி பேசுவதற்கு சம்பிக்க ஒன்றும் முப்தி கிடையாது (முப்தி – இஸ்லாமிய மார்க்க அறிஞர்) முஸ்லிம் முப்தி தான் அதைப் பற்றி பேச முடியும். அதற்கான தகுதியும் உள்ளது. அல்குர்ஆனிலுள்ள சூறா அல் – பகறாவை படிப்பதற்கு முன் தனது பௌத்த சாசனத்தை ஒழுங்காக படிக்குமாறு சம்பிக்கவிடம் கூறுங்கள்.

பௌத்த சாசனத்தில் மற்ற மதங்களை மதித்து அவர்களது மத ரீதியான நடவடிக்கைகளுக்கு மதிப்பளியுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதலில் இதன்படி அவரை நடக்கச் சொல்லுங்கள். அதன் பின்னர் சூறா பகறாவைப் பற்றி பேசுவோம். ஏனைய மதங்களையும் மதியுங்கள் என்று கூறுகின்ற பௌத்த மதத்தைச் சேர்ந்த சம்பிக்க இப்போது என்ன செய்கிறார்.?

உலகிலுள்ள 66 நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர். அங்குள்ளவர்கள் எல்லாம் ஹலால் உணவைத்தான் உண்ணுகிறார்கள். அங்கு அவர்களுக்கு அதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. பௌத்த நாடான தாய்லாந்திலும் இந்த முறை உள்ளது. தலைமைச் செயலகமும் அங்கு தான் உள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு பணம் தேவையென்றால் அரபு நாடுகள் கோடிகோடியாகக் கொட்டும். உணவு மட்டுமின்றி முஸ்லிம் சமூகத்தினரின் அத்தனை விடயங்களிலும் வழிகாட்டும் பொறுப்பு உலமாக்களுக்குத் தான் இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கு கிடையாது.

ஹலால் விடயத்தில் இவ்வளவு அக்கரை காட்டும் சம்பிக்க, நாட்டில் மலிந்து கிடக்கும் மதுபானசாலை மற்றும் கசினோ நிலையங்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாகயிருப்பது எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.

சிங்கள சமூகத்தை சேர்ந்த புத்திஜீவிகளான பேராசிரியர் ஜயந்த தனபால மற்றும் பேராசிரியர் சாவித்திரி குணசேகர போன்றோர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

எனவே நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் மிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய முஸ்லிம்களுக:கு எதிரான நடவடிக்கைகளை அரசு உடன் தடுத்து நிறுத்த வேண்டும்.

கேள்வி: ஹலால் சான்றிதழை ‘வாபஸ்’ பெறுவது தொடர்பில் உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?

பதில்: உலமா சபை இது விடயத்தில் பின் வாங்கக்கூடாது. இது மார்க்கம், அல்லாஹ்வுக்கு ஒவ்வொருவரும் பயந்து கொள்ள வேண்;டும். முஸ்லிம்களும் ஹறாம் உண்பதற்கு உடந்தையாக உலமா சபையும் இருந்து விட்டது என்ற அவப்பெயர் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் தங்களின் உணவுகளில் ஹலால் பொறிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து வாங்கும் பொறுப்புள்ளது.

சிங்கள மக்களிடம் இதனை திணிக்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம் சிங்கள உற்பத்தி நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் கோரினால் அதற்கு மறுப்பும் தெரிவிக்கக் கூடாது. ஹலால் விடயத்தில் முஸ்லிம்கள் விட்டுக் கொடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. உலமா சபை வாபஸ் வாங்கவும் கூடாது.

SO
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :