கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் மாடிக்கட்டிடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்துள்ளது.


(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக மாணவர்களால் பாவிக்கப்பட்டு வந்த பாடசாலை மாடிக்கட்டிடத்தின் முன்பகுதி திங்கள்கிழமை இரவு (11) திடீரென இடிந்து விழுந்துள்ளது. கல்வி அமைச்சின்  கட்டிட வேலைகளுக்கான பொறியியலாளர் மானல் பெர்னாண்டோ இக்கட்டிடத்தை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு  பார்வையிட்டு பாவிக்க முடியாதது என அறிவித்திருந்தார்.
இருந்தபோதிலும் இப்பாடசாலையில் இடவசதியின்மை காரணமாக தொடரந்தும் மாணவர்களுக்காக தற்காலிகமாக  பாவிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இக்கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. அப்பிரதேசத்தில் மாணவர்கள் எவரும் சம்பவ நேரம் இல்லாத காரணத்தால் அதிஸ்டவசமாக எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
பாடசாலை நேரத்தில் இக்கட்டிடத்தின் பகுதி இடிந்து விழுந்திருந்தால் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்படைந்திருப்பர் என பாடசாலை அதிபர் ஏ. ஆதம்பாவா தெரிவித்தார்.

இப்பாடசாலையின் வளப்பற்றாக்கறையை நிவர்த்திப்பதற்கு இதுவரை பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் எந்த தன்னார்வ நிறுவனமும் முன்வரவில்லை. இந்நிலையில்  இக்கட்டிடத்தினை கட்டுவதற்காக நோர்வே தன்னார்வ நிறுவனம் முன்வந்தபோதும், இடை நடுவில் அந்நிறுவனமும் கைவிட்டிருந்தது. கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை சுனாமியினால் பாதிக்கப்பட்ட ஒரேயோரு தேசிய பாடசாலை என்பது  குறிப்பிடத்தக்கது.
இந்த இடிந்துள்ள கட்டிடத்தை பார்வையிடுவதற்காக சம்பவ இடத்திற்கு அதிபர் ஏ.ஆதம்பாவாவுடன், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், சாந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார் உள்ளிட்ட குழுவினர் வந்திருந்ததுடன், இந்த கட்டிடத்தை திருத்துவதன் அவசியம் பற்றி அரசியல் பிரமுகர்களிடம் அதிபரினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதன்போது உரிய தரப்பினருடன் பேசுவதாகவும் அரசியல் பிரமுகர்கள் தெரிவித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :