நாடு எதிர்கொண்டுள்ள பாரதூரமான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை கண்டறியாது அவற்றை ஹலால் சான்றிதழ் ஊடாக மூடிமறைத்து ஆட்சி அதிகாரத்தை நீடித்துக்கொள்வதற்கே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.
இனங்களுக்கிடையில் இனவாதத்தை விதைத்துவருகின்ற தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்கு 2014ஆம் ஆண்டுக்குள் முற்றுப்புள்ளிவைத்து அது விரட்டியடிக்கப்படவேண்டும். நாட்டில் அனைத்து இன மக்களும் சகல உரிமைகளுடன் ஜனநாயகத்துடன் வாழ்வதற்கான நல்லாட்சி மரலவேண்டுமானால் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும். அதற்கான தயார் படுத்தல்களே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள் ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வினை குருணாகல் மாவட்டத்தில் நிக்கவரட்டிய, யாப்பபூவ மற்றும் கல்கமூவ ஆகிய தேர்தல் தொகுதிகளில் ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளாதாவது:
நாட்டில் இனங்களுக்கிடையே இனவாதத்தை தூண்டி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கும் அதனை நீடித்துக்கொள்வதற்கும் ஏற்றவகையிலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதுமாத்திரமின்றி நாடு எதிர்கொண்டுள்ள பாரிய பிரச்சினைகளுக்கு நிரந்தரமான, நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க தவறியுள்ள இன்றைய அரசாங்கம், ஹலால் சான்றிதழ் ஊடாக அனைத்து பிரச்சினைகளையும் மூடிமறைத்து விடுவதற்கே எல்லா வகையான முயற்சி களையும் மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் இன்றைய நிலையில் ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு என்று எதனையுமே காணமுடியாதுள்ளது. பொதுபலசேனா என்ற அமைப்பின் பிரதானமானவர் அரசாங்கத்தின் பங்காளியாக செயற்பட்டு வருகின்ற அதேவேளை, பெல்லங்வெல தேரர் பாதுகாப்பு அமைச்சின் அழைப்பின் பேரில் ஹலால் சம்பந்தமான விடயங்களில் பங்குகொண்டிருந்ததாகவும் ஊடகங்களிலிருந்து தகவல்கள் வெளியாகிக்க்ொண்டிருக்கின்றன. அத்துடன் நின்றுவிடாது உலமா சபையானது அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் கருத்துக்களுக்கு இணங்கவே செயற்பட்டு வருகின்றது. இதனூடாக மேற்படி மூன்று தரப்புக்களும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பது தெளிவுபட்டிருக்கின்றது. அப்படியாயின் இந்த பிரச்சினைக்கு இங்கு தீர்வினை ஏற்படுத்தியவிட முடியாது.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சியினை முடிவுக்கு கொண்டுவரும் வரையில் இந்நாட்டில் ஜனநாயகத்தையோ அல்லது சட்டம் ஒழுங்கினையோ இல்லாவிட்டால் மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சியையோ எவராலும் எதிர்பார்க்க முடியாது.
எனவேதான் இன்றைய ஆட்சியையும் அதன் அதிகாரத்தில் உள்ளவர்களையும் கீழ் இறக்குவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த வண்ணம் நாட்டு மக்கள் இருக்கின்றனர். அந்த சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுப்பதே ஐக்கிய தேசியக்கட்சியின் தலையாய கடமையாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே ஐக்கிய தேசியக்கட்சி நாடு முழுவதும் கிராமங்கள் தோறும் வீடு வீடாக சென்று உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாட்டில் இறங்கியிருக்கின்றது.
அபிவிருத்தி என்ற பேரில் அரசாங்கம் பெறுகின்ற வெளிநாட்டு கடன்களை செலுத்த வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களின் தலைகளிலேயே சுமத்தப்பட்டிருக்கின்றது. ஆனால், வீதி அபிவிருத்தி என்ற பேரில் 30 வீத தரகு அதன்பொறுப்பாளிகளால் பெறப்படுகின்றது. இவ்வாறான காரணங்களினாலேயே எரிபொருள் விலை உட்பட அனைத்து அத்தியவசியப் பொருட்களின் விலைகளும் கட்டணங்களும் வானளவில் உயர்ந்திருக்கின்றன. வாழ்க்கைச் சுமை தாங்கிக்கொள்ள முடியாத அவளவுக்கு உயர்ந்துள்ளது. இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை ஆகியவை இல்லாமல் செய்யப்படுகின்றன.
இந்நாட்டிலுள்ள சகல இனமக்களும் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே ஐக்கிய தேசியக்கட்சியின் மாறாத கொள்கையாகும். அவ்வாறு இடம்பெறுவதற்கு இந்நாட்டில் ஜனநாயத்துடனான நல்லாட்சி மலர வேண்டும். நல்லாட்சி ஒன்று இந்நாட்டில் மரல வேண்டுமேயானால் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அதன் ஆட்சி அதிகாரத்திலிருந்து கீழ் இறக்கப்பட வேண்டும். இந்த ஒரே காரணத்துக்காகவே அனைத்து எதிர்க்கட்சிகளும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் கைகோர்த்து நிற்கின்றன. இந்த பலத்துடன் 2014ஆம் ஆண்டுக்குள் இன்றைய அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
இன்றைய உள்நாட்டு பிரச்சினைகள் ஜெனிவா வரையில் சென்றிருப்பதென்றால் அதற்கான அனைத்து பொறுப்புகளும் அரசாங்கத்தையே சார்ந்து நிற்கின்றன என்றார்.VV
0 comments :
Post a Comment