புல்மோட்டை பிரதேச மக்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கை நிலங்கள் கடற்படை அதிகாரிகளால் அக்கிரமிக்கப்பட்டுவருவது தொடர்பில் காணி அமைச்சருடனும், கடற்படைத் தளபதியுடனும், அரசாங்க அதிபர், மாவட்ட காணி ஆணையாளர், வனபரிபாலன திணைக்களம், கரையோர பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படுமெனக் கூறிய நீதியமைச்;சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், ஜனாதிபதியின் கவனத்திற்கும் தாம் இந்த விவகாரத்தை கொண்டு செல்லவுள்ளதாகத் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டைப் பிரதேசத்தில் தற்பொழுது உக்கிரமடைந்துள்ள முஸ்லிம்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச் செய்கைக் காணிகளை அபகரிக்கம் முயற்சிகளை நேரில் கண்டறிந்து, உரிய தீர்வு காண்பதற்காக நீதியமைச்;சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சனிக்கிழமை (16) புல்மோட்டைக்கு விஜயம் செய்த போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
காணி அபகரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள புல்மோட்டை பிரதேச குக்கிராமங்களைச் சேர்ந்த விவசாய, மீன்பிடி தொழில்களில் ஈடுபட்டுவரும் வறிய மக்களின் சார்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து அமைச்சர் ஹக்கீம் புல்மோட்டைக்கான இந்த விஷேட விஜயத்தை மேற்கொண்டார்.
முஸ்லிம்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கை நிலங்கள் காணப்படும் கொக்கிளாய் கடற்படைத் முகாமை அண்டிய பிரதேசத்திற்கு அப்பகுதி அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்களுடன் சென்ற அமைச்சர் ஹக்கீம் நிலைமையை நேரில் அவதானித்ததோடு பின்னர் புல்மோட்டை ஜும்மாப் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடலின் போது மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் விதத்தில் உரையாற்றிதும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ஹக்கீம் அங்கு உரையாற்றும் பொழுது மேலும் தெரிவித்ததாவது, மத்திய அரசின் காணி அமைச்சரை அல்லது அவரால் உத்தரவாதப்படுத்தப்படும் உயரதிகாரியை இங்கு அழைத்து வந்து சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரையும் வரவழைத்து இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும்.
படையினருக்கு தேவைப்படுகின்ற போதெல்லாம் மக்கள் பலநெருக்கடிகளுக்கு மத்தியில் மிகுந்த விட்டுக்கொடுப்புகளை பல தடவைகள் செய்துள்ளனர் இதற்கு அப்பால் இன்னும் நெருக்கடிகள் தொடர்வது சகித்துக் கொள்ள முடியாத ஒரு நிலைமைக்கு அவர்களைத் தள்ளியிருக்கிறது என்ற நிலைமையில் இந்த விவகாரம் ஓர் ஆர்ப்பட்டத்தில் முடியாமல் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் இதற்கான தீர்வுகளை காணப்பதற்கான பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
இதற்கான உடனடித் தீர்வாக ஏற்கனவே நடைபெற்றுள்ள காணிக் கச்சேரிகளில் தீர்மானிக்கப்பட்ட உத்தரவுப் பத்திரங்களை உரியவர்களுக்கு தொமதமின்றி பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த விவகாரத்தை நீடிக்க விடுவது பொறுப்பு வாய்ந்த ஓர் அரசாங்கத்திற்கு நல்லதல்ல இதனை தனியே முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக நோக்காது மற்றைய சமூகத்தினரும் அங்கலாய்கக் கூடிய பிரச்சினையாக இருந்தால் அவர்களுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். காணிக் கச்சேரிகளின் போது உத்தரவுப் பத்திரங்கள் நீதி நியாயத்துடன் வழங்கப்பட வேண்டும்.
13ஆம் 14ஆம் கட்டைகளில் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை இன்னும் நீடிக்க விடுவது நியாயமல்ல. பிரதேச செயலக மட்டத்தில் இந்த விவகாரம் மிகவும் மந்தகெதியில் கையாளப்பட்டு வருவது விசனத்துக்குரியது.
பாரம்பரிய தொழில் சம்பந்தமான பிரச்சினைகளும் உள்ளன. காட்டுத் தொழில் பிரச்சினை, மாட்டு வண்டிக்காரர்களின் பிரச்சினை, மீன்பிடியாளர்களின் பிரச்சினை, சிறுபயிர்ச் செய்கையாளர்களின் பிரச்சினை என்று ஒவ்வொன்றும் சரிவர அணுகப்பட்டு அவற்றுக்கு உரிய தீர்வுகள் காணப்பட வேண்டும். ஏற்கனவே கரைவலை சம்பந்தமான பிரச்சினையை நான் நேரில் காணமுடிந்தது.
யுத்தம் ஓய்ந்த பிறகு இலங்கையிலுள்ள அனைத்துக் காடுகளுமே தமக்குச் சொந்தமென்ற மனப்போக்கில் வனபரிபாலன திணைக்கள உயரதிகாரிகள் நடந்து கொள்வதும் மிகவும் விசித்திரமாக இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்,
நில வளமும், கடல் வளமும் நிறைந்து காணப்படும் புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள சபா நகர், தேத்தாவாடித்தீவு, பொன்மலைகுடா, பட்டிக்குடா, 13ஆம் கட்டை, மண்கிண்டிமலை, கொக்கிளாய் கரையோரப் பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் வெகு நீண்டகாலமாக வசித்தும் பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டும் வருகின்றார்கள்.
இவ்வளவு காலமாக இங்கு தொழில்துறைகளில் ஈடுபட்டு வந்த மக்களுக்கு தற்பொழுது தமது அன்றாடத் தொழிலை நிம்மதியாக மேற்கொள்ள முடியாமல் படைத்தரப்பினர் குறிப்பாக கடற்படையினர் தடைவிதித்துள்ளனர்.
'இது கடற்படைக்குச் சொந்தமான காணி' எனக் குறிப்பிட்டு 'இங்கு யாரும் பிரவேசிக்கக்கூடாது' என அறிவிப்புப் பலகைகளை அங்குள்ள மரங்களில் காட்சிப்படுத்தியுள்ளனர். அத்துடன் குடியிருப்பாளர்களின் குடும்பத்தினர்களை கடற்படைத் தரப்பினர் அடிக்கடி அச்சுறுத்தி வருவதாகவும் அமைச்சரிடம் பாதிப்புக்குள்ளான மக்கள் முறையிட்டனர்.
1966ஆம் ஆண்டில் இருந்து இங்கு மக்கள் வசித்து வருகின்றனர். கடற்படை தளத்தை நிறுவதற்கு 25 ஏக்கர் நிலத்தை கோரிய போது அதற்காக 50 ஏக்கர் நிலம் விட்டுக்கொடுக்கப்பட்டது. ஆனால் அதைவிட அதிகமாக கைப்பற்றப்பட்டிருக்கின்றது எனவும் இன்னும் உள்நோக்கிச் சென்று நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் படைத்தரப்பினரால் அபகரிக்கப்பட்டுள்ளது எனவும் மக்கள் அமைச்சரிடம் மேலும் முறையிட்டனர்.
மா, பலா மரங்கள் செறிந்த வளமான காணிகளை படைத்தரப்பினரின் இலக்கு வைத்திருப்பதாகவும், கொக்கிளாய் கடற்படை கட்டளைத் தளபதி அடையாளப்படுத்தி தயாரித்துக் கொடுக்கும் வரைவை அதில் மக்கள் வசிக்கிறார்களா, மக்களக்குரிய பயிர் நிலமா என்பவற்றை கண்டறிய முயற்சிக்காது, கிராம சேவகரின் ஆலோசனையை பெறாது குச்சவெளி பிரதேச செயலாளர் அங்கீகரித்து அவரது சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளரின் ஒத்துழைப்பைப் பெற்று உறுதிப்பத்திரத்தை வழங்கிவருவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்த சூழ்நிலையில் படையினரின் ஆலோசனைப்படி இப்பிரதேசத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் 2009ஆம் ஆண்டில் யுத்தம் ஓய்ந்த சூழ்நிலையில் முன்னர் வசித்த இடங்களில் மீண்டும் குடியேறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே அமைச்சரின் வருகையைத் தொடர்ந்து தங்களுக்கு நிம்மதியாக வாழ்வதற்கு வாய்ப்பு ஏற்படுமென அவர்கள் கூறினர்.
காணிகளுக்குரியவர்கள் தம்மிடம் உள்ள ஆவணங்களை அமைச்சரிடம் காண்பித்த பொழுது அவற்றை அவர் நுணுக்கமாக பரிசீலித்தார்.
அமைச்சர் ஹக்கீமுடனான கலந்துரையாடலில் மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் சட்டத்தரணி லாஹிர், குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் முபாறக், உதவித் தவிசாளர் தௌபீக், குச்சவெளி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஆசிக் முகம்மது, சல்மான பாரீஸ், புல்மோட்டை ஜம்மியதுல் உலமா சபை தலைவர் மௌலவி அப்துல் சமது, அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளன தலைவர் மௌலவி மஃமூத், விவசாய அமைப்பின் தலைவர் ஏ.சீ. முஸம்மில் மற்றும் கிராம சேவை அலுவலர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
0 comments :
Post a Comment