(ஸபியுள்ளாஹ்)
ஹலால் விடயத்தில் ஜம்இய்யத்துல் உலமாவின் அறிவிப்பு கோழைத்தனமிக்கதாகவும், ஜெனீவாவுக்கு சென்றமைக்கான இறைதண்டனையாகவுமே முஸ்லிம் மக்கள் கட்சி பார்க்கிறது என அக்கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
உலமா சபையின் ஹலால் சம்பந்தமான வாபஸ் பற்றிய அறிவிப்பு சம்பந்தமாக ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
சிங்கள இனவாதிகளின் மிரட்டலுக்கு உலமா சபை பணிந்து போனது மிகப்பெரிய தலைகுணிவாகும். இது விடயத்தில் அவசரப்படாமல் யார் கேட்டாலும் நாம் ஹலால் பத்திரம் கொடுப்போம் என்றும் அரசாங்கம் பகிரங்கமாக இதனை நிறுத்தச்சொன்னால் மாத்திரமே அது பற்றி ஆலோசிக்கப்படும் என்ற நிலைப்பாட்டையும் கைக்கொள்ளும்படி நாம் பகிரங்கமாக உலமா சபையை கேட்டிருந்தோம். ஆனால் திடுதிப்பென இவ்வாறு முடிவெடுத்திருப்பதன் மூலம் அரசாங்கத்தையும் முஸ்லிம் எம்பிமாரையும் நம்பிய உலமா சபை ஏமாந்து போயுள்ளதையே காட்டுகிறது.
இந்த அரசைக்காப்பாற்ற உலமா சபை ஜெனீவா செல்லும் போது அவ்வாறு செய்ய வேண்டாம் என சில முஸ்லிம் அமைச்சர்களிடமும் உலமா சபை பிரதிநிதிகளிடமும் நாம் வேண்டினோம். இதற்காக எமது உலமா கட்சி போனால் அது அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படும் என்றும் உலமா சபை செல்வது சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினோம். உலமா சபை என்பது அரசியல் அமைப்பல்ல என்பதாலும், அது மார்கக்கத்தின் முக்கிய சில பகுதிகளைக்கொண்டுள்ள அமைப்பு என்பதாலும் ஏனைய மத அமைப்புக்களைப்போன்று நடு நிலைமையாக இருக்க வேண்டும் என்றும் கூறினோம்.
ஆனால் இதையெல்லாம் உதாசீனப்படுத்திய உலமா சபை ஆட்சியாளர்களின் அன்பையும், அமைச்சர்களின் தாலாட்டையும் நாடி ஜெனீவா சென்றதன் மூலம் தம்மை இனங்காட்டிக்கொண்டதோடு இந்த நாட்டில் அநியாயம் செய்யப்பட்ட ஒரு சமூகத்தின் அப்பாவி மக்களின் சாபத்துக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனைக்கும் இறைவனுக்குமிடையில் திரை இல்லை என்ற வார்த்தை இத்தனை சீக்கிரம் உண்மையாகும் என நாம் எதிர் பார்க்கவில்லை.
இந்த நாட்டின் உலமாக்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இல்லாமலிருப்பதாயின் உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சியின்; மூலமே சாத்தியமாகும் என்பதை இந்த நாட்டில் நாம் மட்டுமே கடந்த 20 வருடங்களாக சொல்லி வருவதோடு அதனை செயலிலும் காட்டி வருகின்றோம். உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சி பாராளுமன்றத்தில் இருந்திருந்தால், ஜம்இய்யத்துல் உலமாவை கைவிட மாட்டோம் என்ற அரச உயர் மட்டத்தின் போலி வார்த்தைகளினால் ஏமாற்றப்பட்டிருக்க வேண்டி வந்திருக்காது. அத்தோடு ஹலால் விடயம் தமக்கு முடியாது என உலமா சபை கண்டிருந்தால் இது விடயத்தை ஸ்ரீலங்கா உலமா கவுன்சிலிடம் விட்டுக்கொடுத்திருக்கலாம்.
தமது அரசியல் நலனுக்காக உலமா சபையின் அங்கத்தவர்களை தேர்தல் காலங்களில் பாவிக்கும் பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் கட்சிகளும், சுயநல முஸ்லிம் உறுப்பினர்களும் ஜம்இய்யத்துல் உலமாவை நட்டாற்றில் விட்டுவிட்டனர். ஹலாலுக்கு ஆதரவாக எவனும் பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வராமல் மயக்கத்தில் கழித்து விட்டு இப்போது ஜம்இய்யத்துல் உலமாவை குறை கூறி அறிக்கை விடுகிறார்கள்.
ஆக மொத்தத்தில் சுயநல ஏமாற்று முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளுக்கெதிராக முஸ்லிம் மக்கள் வெளிப்படையாக வாய் திறக்காத வரை, தியாக உணர்வுடன் செயற்படும் உலமாக்கள் தலைமையிலான அரசியல் கட்சியை ஆதரிக்காத வரை இன்னும் பல பிரச்சினைகளுக்கு சமூகம் முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதை மீண்டும் நாம் மக்களுக்கு சொல்லிக்கொள்வதோடு ஜம்இய்யத்துல் உலமா தனது ஹலால் அறிவிப்பை வாபஸ் பெறவேண்டுமென கோருகின்றோம்.
0 comments :
Post a Comment