உலமா சபையின் பணி இந்த நாட்டு முஸ்லிம்களின் ''ஹலாலான'' வாழ்க்கைக்கு வழிகாட்டுவதே அன்றி ஏற்றுமதி வர்த்தகர்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவது அல்ல.


கடந்த பல வருடங்களாக நாட்டில் சுதந்திரமாக நடமாடிய ஹலாலின் குரல்வளை கடந்த திங்கட்கிழமை முதல் நசுக்கப்பட்டுவிட்டது. ஹலால் இலங்கையிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு விட்டது. வெளிநாடுகளில் மாத்திரம் ஹலால் இலச்சினை சுதந்திரமாக நடமாட முடியும்.

எதிர்காலத்தில் இலங்கைச் சந்தைகளில் ஹலால் இலச்சினை பொறிக்கப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பு எமக்குக் கிடைக்காது. ஆனால் ''ஹலால் சிறீலங்கா'' எனப் பொறிக்கப்பட்ட லேபல்களைக் கொண்டு வெளிநாட்டு முஸ்லிம்கள் மாத்திரம் உணவுகளை இலகுவாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

இலங்கை முஸ்லிம்கள் ஹலால் பொருட்களை பொதிகளில் அச்சிடப்பட்டிருக்கும் மூலப் பொருட்களைக் கொண்டே அடையாளம் காண வேண்டியேற்படும். இதற்காக வேறு ஹலால் விளக்கப் புத்தகத்தையும் நாம் கையில் ஏந்திச் செல்ல வேண்டி வரலாம்.

கடந்த திங்கட்கிழமை காலை கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்களையடுத்தே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஹலாலுக்கு இந்தக் கதி நேர்ந்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் பெளத்த மகா சங்கத்தினர் ஆகியோர் இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டார்கள்.

ஹலால் விவகாரத்தினால் நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டது. முஸ்லிம் சமூகம் பீதிக்குள்ளானது. நாட்டின் தேசிய நல்லிணக்கத்துக்கும் சகவாழ்வுக்கும் ஒற்றுமைக்கும் கை கொடுப்பதற்காகவே நாம் ஹலாலை விட்டுக் கொடுக்கத் தீர்மானித்துள்ளோம். ''ஹலால் கட்டாயம்'' என்னும் நிலைப்பாட்டிலிருந்தும் விலகி ''ஹலால் விருப்பத்திற்குரியது'' என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம் என இம் மாநாட்டில் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.

இதேவேளை, பெல்லன்வில விமலரத்ன தேரர் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

‘ஹலால் உணவு உண்பது முஸ்லிம்களின் உரிமை. என்றாலும் இது ஒரு பெளத்த நாடு. இங்கு ஏனைய சமயங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தாலும் நாட்டின் பெரும்பான்மையினர் நாம் ஏன் ஹலால் உண்ண வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களின் நிலைப்பாடு நியாயமானதே. அவர்கள் ஹலால் வேண்டாம் என்கிறார்கள்.

இந்நிலையில நாம் வர்த்தக சமூகம், மகாநாயக்க தேரர்கள், உலமாக்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி இந்த முடிவுக்கு வந்துள்ளோம். நாட்டின் சமாதானத்தையும் முஸ்லிம் சமூகத்தின் நன்மையையும் ஒற்றுமையையும் இன நல்லுறவினையும் கருதி உலமா சபை ஹலால் இலச்சினையை நீக்கிக் கொள்ள முன்வந்தமைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம் என்றார்.

பொது பல சேனாவின் மூன்று மாத கால போராட்டத்தின் பின் தனது இலக்கில் அவ்வமைப்பு வெற்றி பெற்றுள்ளதென்பதே உண்மை. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவரும் பெல்லன்வில விமலரத்ன தேரரும் இது உலமா சபையின் வெற்றியோ அல்லது பொதுபலசேனாவின் வெற்றியோ அல்ல. இது முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகும் என்று கூறி திருப்தியடைந்தாலும் முஸ்லிம் சமூகம் இது பொதுபலசேனாவின் வெற்றியென்றே கருதும்.

ஹலால் ஒரு நெறிமுறையற்ற அங்கவீனமான குழந்தை. இக்குழந்தைக்கு அரசோ மகாநாயக்க தேரர்களோ அங்கீகாரமளிக்க இயலாது. இதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம் என்று இரு வாரங்களுக்கு முன்புதான் பொதுபலசேனா சவால் விட்டிருந்தது.

எது எப்படியிருந்தாலும் இந்த தீர்மானமானது அதிகாரவர்க்கத்தினதோ அல்லது வர்த்தக சமூகத்தினதோ வற்புறுத்தலினால் எட்டப்பட்டது என்றே சந்தேகிக்கத் தோன்றுகிறது.

பெல்லன்வில விமலரத்ன தேரர் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் இந்நாடு பெளத்த நாடு. இது பற்றி எவருக்கும் விவாதிக்க முடியாது என்று கூறினார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

‘ஹலால் விவகாரத்துக்கு சவால்கள் விடுக்கப்பட்டபோது நாம் இதனை பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்த்துக் கொள்ளவிரும்பினோம். சிலர் பேச்சுவார்த்தைகள் மூலமல்ல, கை கால்களினால் தான் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என நினைக்கிறார்கள். இது தவறு.

ஹலால் விவகாரத்தினால் வர்த்தகர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே நாம் வர்த்தக சம்மேளனத்துடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். இப்பிரச்சினை எமக்கு ரியது மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் உரியதாகும்.

நாட்டில் 30 வருட கால யுத்தத்தினால் பலவற்றை இழந்து விட்டோம். பல உயிர்களைப் பலி கொடுத்துவிட்டோம். மீண்டும் நாட்டில் சமயங்களுக்கிடையிலோ இனங்களுக்கிடையிலோ பிரச்சினைகள் எழக்கூடாது. பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். உலமா சபை நாட்டினதும் சமூகத்தினதும நலன் கருதி ஹலாலை நீக்கிக் கொள்ள தீர்மானித்ததற்கு நன்றி கூறுகிறோம்.

இந்நாட்டில் அனைவருக்கும் ஹலால் தேவையில்லை. முஸ்லிம்கள் ஹலால் உணவுகளை உணவுப் பொதிகளில் குறிப்பிட்டிருக்கும் மூலப் பொருட்களின் விபரங்கள் மூலம் தெரிவு செய்து கொள்ள முடியும் என்றார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி பேசுகையில்,

‘முஸ்லிம்களாகிய நாம் இந்நாட்டில் நீண்ட காலமாக ஏனைய சமூகங்களுடன் ஒன்றுபட்டு வாழ்ந்திருக்கிறோம். தொடர்ந்தும் எமது உறவை கட்டியெழுப்ப வேண்டும். மனித நேயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். நாட்டின் சகவாழ்வுக்கும் அமைதிக்குமாக நாம் எடுத்த முடிவு இது. நாம் ஹலால் விவகாரத்தில் தொடர்ந்தும் பிரச்சினைப்பட்டுக் கொண்டிருக்க இயலாது.

சிங்கள பெளத்த மக்களுடன் கைகோர்த்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்காக கடந்த கால சம்பவங்களை மறந்து நாம் அர்ப்பணிப்புச் செய்துள்ளோம். நாம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் தான் ஹலாலை அனுமதித்தோம். ஆனால் காலக் கிரமத்தில் அது பொதுவானதாக சந்தைகளில் மாற்றமடைந்தது. எவருக்கும் நாம் ஹலாலை பலவந்தப்படுத்தவில்லை.

பிரச்சினைகளை மறந்து நாட்டில் முஸ்லிம், இந்து, பெளத்த, கிறிஸ்தவ சமூகம் அனைத்தும் ஒற்றுமைப்பட்டு செயற்படுவோம் என்றார்.

உலமாசபையின் ஹலால் பிரிவு பொறுப்பாளர் மெளலவி முர்சித் முழப்பர் பேசுகையில்,

‘ஹலால் உற்பத்திப் பொருட்கள் அனைவருக்கும் பொதுவாக உற்பத்தி செய்யப்பட்டு சந்தைப் படுத்தப்பட்டதினாலேயே இந்தப் பிரச்சினை எழுந்தது. இதன் மூலம் நாட்டின் சகவாழ்வுக்கும் அமைதிக்கும் குந்தகம் ஏற்படும் நிலை உருவாகியது. எனவே அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய இத்தீர்வுக்கு நாம் உடன்பட்டோம்.

ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை நாம் ஆரம்பத்தில் ஒரு சேவையாக இலவசமாகவே ஆரம்பித்தோம். ஆனால் அதற்கான கேள்வி அதிகரித்தபோது எமது செலவினங்கள் அதிகரித்தன. இதனையடுத்தே நாம் நியாயமான கட்டணத்தை அறவிடுவதனை ஆரம்பித்தோம். எமது வரவு - செலவு விபரங்கள் கணக்குப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதில் எவ்வித இரகசியங்களும் பேணப்படவில்லை.

கட்டணம் அறவிடுவது இன நல்லுறவுகளுக்கும் பாதகம் என்று கருதப்படுவதாலும் அதுபற்றி விமர்சிக்கப்படுவதாலும் எதிர்காலத்தில் இச்சேவையை நாம் இலவசமாக வழங்கத் தீர்மானித்துள்ளோம் என்றார்.

இம் மாநாட்டில் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக், உதவிச் செயலாளர் மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம், பொருளாளர் மெளலவி கலீல், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சுசந்த ரத்னாயக்க மற்றும் பெளத்த மகாசங்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

எது எப்படியிருப்பினும் உலமா சபையின் இந்தத் தீர்மானம் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை தோற்றுவித்துள்ளதையே அவதானிக்க முடிகிறது.

பௌத்த தீவிரப் போக்காளர்களின் நியாயமற்ற கோரிக்கைகளுக்காக உலமா சபை இவ்வாறு இலங்கை முஸ்லிம்களின் ஹலால் உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டது என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே இன்று பலரதும் அபிப்பிராயமாகும்.

ஹலால் தொடர்பில் பௌத்த பிக்குகள் ஓர் உடன்பாட்டுக்கு வர மறுக்கும் பட்சத்தில் முற்றுமுழுதாக ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியிலிருந்து விலகிக் கொள்வதாக உலமா சபை அறிவித்திருக்கலாம். இது வர்த்தக சமூகத்தினருக்கு மட்டுமன்றி அரசாங்கத்திற்கும் பாரிய அழுத்தத்தைக் கொடுத்திருக்கும். அவர்களாகவே இறங்கி வந்து முஸ்லிம்களைப் பாதிக்காத வகையிலான ஒரு தீர்வைக் காண முனைந்திருப்பார்கள்.

ஆனால் இன்று உலமா சபை எடுத்திருக்கும் தீர்மானமானது ஏற்றுமதி வர்த்தகம் செய்வோரைத் திருப்திப்படுத்துவதாகவும் உள்நாட்டு முஸ்லிம்களை அதிருப்திக்குள்ளாக்குவதாகவுமே அமைந்துள்ளது.

உலமா சபையின் பணி இந்த நாட்டு முஸ்லிம்களின் ''ஹலாலான'' வாழ்க்கைக்கு வழிகாட்டுவதே அன்றி ஏற்றுமதி வர்த்தகர்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவது அல்ல.

உலமா சபை கடந்த சில மாதங்களாக சிங்கள சமூகத்திற்குள்ளிருந்து எழுந்த எதிர்ப்புகள் குறித்தே சிந்தித்தது. மாறாக இதுபற்றி முஸ்லிம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி ஏதேனும் கருத்துக் கணிப்புக்களையோ அல்லது பரந்துபட்ட கருத்தாடல்களை நடத்தியிருக்கவில்லை. ஏன் இந்த இறுதித் தீர்மானம் தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் சிவில் அமைப்பின் ஆலோசனையைத்தானும் பெற்றிருக்கவில்லை.

ஹலால் விடயத்தில் விட்டுக் கொடுப்புச் செய்யக் கூடாது என நாம் இங்கு கூறமுனையவில்லை. அந்த விட்டுக் கொடுப்பு முஸ்லிம்களைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்பதையே இங்கு நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.

இரண்டாயிரத்துக்கும் குறைவான ஒரு தரப்பினரின் கோரிக்கைகளுக்காக இருபது இலட்சம் பேரைக் கொண்ட ஒரு சமூகத்தின் விருப்பு வெறுப்புகள் மறுதலிக்கப்பட்டுவிட்டன என்பதைத்தான் எம்மால் ஜீரணிக்க முடியாதிருக்கிறது.VV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :