ஏழாவது 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சி அம்பாரை நகரில் கோலாகலமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சனிக்கிழமை (23) ஆரம்பித்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நீதியமைச்சின் காட்சி கூடத்தை அங்கு சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார்.
கிழக்கு மாகாண சபை அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமத், மாகாண சபை உறுப்பினர் நசீர் ஆகியோரும் ஏனைய முக்கியஸ்தர்கள் சிலரும் அமைச்சருடன் வருகை தந்தனர். அவர்களை அடுத்து பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவும் நீதியமைச்சின் காட்சி கூடத்தை பார்வையிட்டார்.
நன்கு வடிவமைக்கப்பட்ட நீதியமைச்சின் காட்சி கூடத்தில் அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்களின் செயல்பாடுகளை விளக்கும் பிரிவுகள் அமைந்துள்ளன. இவ்வமைச்சின் கீழுள்ள அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் பல்வேறுபட்ட பரிசோதனைகளை விளக்கும் காட்சிப் பொருட்கள் அங்கு பெரும் எண்ணிக்கையில் வருகை தரும் பார்வையாளர்களை கவனத்தை வெகுவாக ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக எல்.ரீ.ரீ.ஈ. இன் ஆண், பெண் தற்கொலைதாரிகளினால் அணியப்பட்ட குண்டு பொருத்தப்பட்ட ஆரம்பகால, பிற்கால உள்ளங்கிகள் மனித மாதிரி வடிவங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதையும், முன்னாள் இராணுவத் தளபதி டென்சில் கொப்பேகடுவ உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகளை படுகொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட பாரிய கிளைமோர் குண்டை ஒத்த இன்னொரு செயலிழப்பச் செய்யப்பட்ட குண்டு, நச்சுத்தன்மை வாய்ந்த தாவரங்கள் அவற்றின் காய்கள், போதைப் பொருட்கள், பிரேத பரிசோதனைகளின் போது பெறப்பட்ட மனித உள்ளுறுப்புகள் என்பவற்றை பார்வையிடுவதில்; அதிகமானோர் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய சட்ட சம்பந்தமான விடயங்கள் அடங்கிய கைநூல்கள் இங்கு இலவசமாக பார்வையாளர்ககுக்கு வழங்கப்படுவதோடு, சிறுவர் மற்றும் பெண் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய விளக்கங்களும் உள்ளடங்கியுள்ளன.
நீதியமைச்சின் செயலாளர் திருமதி கமலினி டீ சில்வா, மேலதிகச் செயலாளர் திருமதி லக்ஷ்மி குணசேகர, அரச இரசாயன பகுப்பாய்வாளர், பிரதி பகுப்பாய்வாளர்கள் உட்பட அதிகாரிகள் அமைச்சர் ஹக்கீமை வரவேற்றனர்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
0 comments :
Post a Comment