நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஷரீஆ அடிப்படையிலான முஸ்லிம் தனியார் சட்டத்தை ஒழிக்கும் வரை தாம் ஓயப்போவதில்லை என பொது பல சேனா தெரிவித்துள்ளது.
கண்டியில் சற்றுமுன்னர் நடைபெற்று முடிந்த அவ்வமைப்பின் பொதுக்கூட்டத்திலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டத்தில் ஹலால் சான்றிதழ் மற்றும் ஜம்இய்யதுல் உலமா சபை ஆகியவற்றை மிக மோசமாக சித்திரித்து உரைகள் இடம்பெற்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் சிங்கள பெண் பிள்ளைகள் முஸ்லிம்களின் கடைகளில் வேலை செய்யக்கூடாது எனவும் அவ்வாறு வேலை செய்பவர்கள் இஸ்லாம் சமயத்துக்கு மதமாற்றம் செய்யப்படுவதாகவும் குறித்த அமைப்பினால் குற்றம் சாட்டப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையில் ஷரீஆ சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள முஸ்லிம் தனியார் சட்டங்களை இல்லாதொழிப்பதனால் , நாட்டில் உருவாகியுள்ள பிரச்சினையை தீர்க்கலாம் என தெரிவித்துள்ள பொது பல சேனா , உடல் முழுதையும் மறைத்து உடையணியும் கலாசாரம் மற்றும் மாடறுத்தல் போன்றவற்றை இதன்மூலம் இல்லாமல் செய்யலாம் என தெரிவித்துள்ளது.
இதனிடையே இலங்கையில் எதிர்காலத்தில் பெளத்தர்கள் சனத்தொகையில் வீழ்ச்சி கண்டு சிறுபான்மையினராக மாறக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் எதிர்பார்த்த அளவு பொது பல சேனாவுக்கு குறித்த கூட்டத்தில் ஆதரவு கிடைக்கவில்லை என அங்கிருக்கும் எமது செய்தியாளர் சுட்டிக்காட்டினார். பொது பல சேனாவின் குறித்த மாநாடு தொடர்பில் அச்ச நிலையொன்று காணப்பட்ட போதும் இன்றைய தினம் கண்டி மா நகரில் வழமையான வியாபார மற்றும் ஏனைய நடவடிக்கைகளை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பொதுக்கூட்டத்தில் பொது பல சேனாவின் தலைவர் கிரமவிமல ஜோதி தேரர் மற்றும் அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் உரையாற்றியமைக் குறிப்பிடத்தக்கது.VV
0 comments :
Post a Comment