ஹலாலும் விட்டுக்கொடுப்பும், தட்டியெடுப்பும்-கட்டுரை


ஏறத்தாழ 24 மணி நேரத்திற்கு முன் இன்றைய பத்திரிகையாளர் மாநாட்டில் இறுதி நாளில் சூடு பிடித்த ஹலால் விவகாரம் எவ்வாறு முடியப்போகிறது எனும் தகவலை நாம் வெளியிட்டிருந்தொம். அதே போன்று இன்று அந்த விடயம் “உத்தியோகபூர்வ ரீதியாக” அறிவிக்கப்பட்டுள்ளது [பார்க்க:சூடுபிடிக்கும் “ஹலால்” சான்றிதழ் விவகாரம்].
இன்று முதல் இந்த விடயத்தில் “விட்டுக்கொடுப்பு” பற்றி பேசப்படப்போகிறது, ஆனால் வழமை போல் “விவேகம்” பற்றி நாம் பல காரணங்களுக்காக பேசுவதைத் தவிர்த்து விடுவோம். எனினும், ஆழ் மனதில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றமாகவே இருக்கப்போகிறது. ஏனெனில் ஹலால் சான்றிதழை அறிமுகப்படுத்துங்கள் என்று மக்கள் நிர்ப்பந்திக்கவில்லை, மார்க்க அறிஞர்கள் அறிமுகப்படுத்திய போது மக்கள் அதைத் தம் “உரிமை”யாக அடையாளப்படுத்திக்கொண்டார்கள.
இன்று அந்த உரிமை “விட்டுக்கொடுக்கப்பட்டதாக” மக்கள் விசனப்படுவதில் தவறும் இல்லை. அப்படித்தான் விட்டுக்கொடுத்தால் முழுமையாகக் கை விடாமல் ஏற்றுமதிப்பொருட்களுக்கும் ஹலால் சான்றிதழ் ஜம் இயத்துல் உலமா ஊடாக வழங்கப்படக்கூடாது என்பது பெருவாரி முஸ்லிம்களின் கருத்தாக இருக்கும், ஆனால் அது வழங்கப்படும் என்று மதிப்பிற்குரிய உலமா சபை அறிவித்துள்ளது. ஆயினும், மார்க்க அறிஞர்களை ஆழ் மனதில் நொந்து கொண்டு வெளிச்சொல்ல முடியாமல் தவிப்போரும் இருக்கத்தான் செய்வார்கள்.
கடந்த காலங்களில் ஹலால் விவகாரம் தொடர்பில் பல கட்டுரைகள் எமது வலைத்தளத்தில் வெளியாகியிருந்தன. [ஹலால்...ஹலால்..!!]
கடந்த டிசம்பர் மாதம் இவ்விடயம் சூடுபிடித்த போது அலசப்பட்ட அக்கட்டுரையில் “பொருளாதார” உலகிற்குள் நுழைந்து அதில் ஒரு பங்கை ஜம் இயத்துல் உலமா பெற்றுக்கொள்வது எவ்வாறு அமையப்பெறுகிறது என்பது குறித்த நுணுக்கமான விடயங்கள் பகிரப்பட்டிருந்தன.
எனினும், ஜம் இயத்துல் உலமா 15 லட்சம் கட்டணம் பெறுவதாகவும், அதில் 13 லட்சம் செலவாவதாகவும் விபரங்கள் வெளியிட்டு பகிரங்க கணக்குப் பரிசோதனைக்கும் அழைத்திருந்தது.
இப்போது எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் ஏற்றுமதிப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்போகும் “சேவை” குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்காகவே வேலைக்கமர்த்தப்பட்ட பணியாளர்களின் சம்பளம் முதல் செலவாகும் 13 லட்சமும் கூட இனி வரும் காலங்களில் எங்கிருந்து பெற்றுக்கொள்ளப்படும்? எனும் கேள்வி எழும்.
அதை “அரசு” திரை மறைவில் வழங்கப்போகிறதா? எனும் கேள்வி எம்மவரால் கேட்கப்படாவிடினும் பொது பல சேனா போன்ற  ”செயல் இயந்திரங்கள்” இந்தக் கேள்வியை கேட்க வேண்டும், அவர்களும் கேட்காதவிடத்து இதன் பின்னணியில் ஒரு “இயக்கும் சக்தியின்” தலையீடும் அச்சக்தியின் செயற்திட்டத்தில் மக்கள் ஏமாற்றப்படுவதும் புலப்படுவதோடு அந்த இயக்குனர்கள் தான் பொது பல சேனாவையும் இயக்குகிறார்கள் ஜம் இயத்துல் உலமாவையும் இழுத்தெடுத்துக் கவிழ்த்தார்கள் எனும் உண்மையும் உணரப்பட வேண்டும்.
ஒரு வேளை, வருங்காலங்களில் பேச்சளவிலாவது பொது பல சேனா போன்ற இயக்கங்கள் இது குறித்து பேசக்கூடும். ஆனாலும், அது பேச்சளவில்தான் இருக்கப்போகிறது. ஏனெனில் அவர்களின் முக்கிய தேவை இப்போது முடிந்து விட்டது.
நமது மார்க்க அறிஞர்களைப் பொறுத்தவரை இனி முஸ்லிம் மக்களை “சமாதானப்படுத்தும்” செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை குத்பாவிலாவது அதனை பிஸ்மி சொல்லி ஆரம்பித்து வைப்பார்கள் அல்லது அவசர அவசரமாக ஒரு பத்திரிகையாளர் மாநாடு வைத்து விளக்கமளிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, ஆனாலும் அதுவெல்லாம் இந்த விடயத்திற்கு மக்கள் கருத்து எவ்வாறாக இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே அமையப்போகிறது. நமது மக்கள் இரண்டு காரணங்களுக்காக அமைதியாக இருப்பார்கள்.
1. மார்க்க அறிஞர்களைப் பகிரங்கமாக கேள்வி கேட்க வேண்டாமே எனும் எண்ணம்
2. கேள்வி கேட்டுத்தான் என்ன ஆகப்போகிறது எனும் எண்ணம்
இந்த இரண்டிற்கும் ஒரே விடை “அமைதி” எனவே அந்த அமைதியைக் கடைப்பிடிப்பதையே பெரும்பாலான முஸ்லிம்கள் விரும்பப்போகிறார்கள். எனவே இன்ஷா அல்லாஹ் மார்க்க அறிஞர்கள் தம் பணியை அதே பாணியில் தொடரலாம்.
ஆனாலும் என்றாவது ஒரு நாள் இந்த சமூகம் “விவேகம்” தொடர்பில் ஆற அமர்ந்து சிந்திக்கத்தான் வேண்டும். முன்னேற்பாடு, எதிர் வினைகளின் தூர நோக்கு, வரையறை மற்றும் சமூக நிலைப்பாடுகள் தொடர்பில் விவேகமான செயற்திட்டங்கள் அவசியமாகத்தான் இருக்கின்றன.
வெறும் உணர்ச்சி மிகுதியாலும், பத்திரங்களுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகளினாலும் சமூகத்தை சிக்கலுக்குள் தள்ளுவதை அரசியல் வாதிகள் மாத்திரமல்ல மார்க்க அறிஞர்களும் தான் கை விட வேண்டும்.
ஜெனிவாக்குச் சென்று அரசைக் காப்பாற்றினோம், முஸ்லிம் நாடுகளை இணங்க வைத்து எம் நாட்டைக் காப்பாற்றினோம் என்று பெருமை பேசிக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தில் “கை” வைத்து சூடு வாங்கியிருக்கும் இந்த சமூகம் இப்போதும் சிந்திக்கத் தவறக்கூடாது.
எந்தவொரு இஸ்லாமிய வெளிநாடும் தமது நலனுக்காகவன்றி இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கவில்லை. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தேவை இருக்கிறது, அது அரசியல் – பொருளாதாரம் மற்றும் வெவ்வேறு காரணிகள் சம்பந்தப்பட்டது. அக்காரணிகளுக்குப் புறம்பாக நின்று அவர்கள் இயங்கவில்லை.
இன்னும் சில நாட்களில் மீண்டும் ஒரு ஜெனிவா, மீண்டும் ஒரு தீர்மானம் வரப்போகிறது, இலங்கையிலே முஸ்லிம்கள் அல்லல்படுகிறார்கள், ஒருவித சமூக அழுத்தத்தினால் நிர்க்கதியாக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் இதே வெளிநாடுகளுக்குத் தெரியாமலும் இல்லை. ஆனாலும் அவர்கள் “முஸ்லிம்கள்” எனும் நிலையிலிருந்து குரல் கொடுக்கவோ எந்தவித செயற்பாடுகளையும் மேற்கொள்ளவோ ஆயத்தமாக இல்லை.
இன்னொரு 1983 கலவரம் முஸ்லிம்களுக்கு எதிராக வந்தாலும் கூட கண்டணங்கள் தான் வெளியிடுவார்களே வேறு எதையும் “நாங்கள்” எதிர்பார்ப்பது போன்று செய்யப்போவதில்லை. ஏனெனில் அரசியல் ராஜதந்திர வலைப்பின்னல் என்பது புறக்கண்ணால் பார்க்கும் விடயத்திற்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது.
இதிலிருந்து, இலங்கை முஸ்லிம்கள் தம் சமூகப் பிரச்சினைகளும் எதிர் நோக்கும் சவால்களையும் தாமே தீர்த்துக்கொள்ளும் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதோடு தயாராக வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள் என்பது உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.
நமக்கொன்று என்றால் பாகிஸ்தானாவது வரும் எனும் நம்பிக்கையும் ஏமாற்றத்தையே காணும். ஏனெனில் பாகிஸ்தானுக்கு பிராந்தியத்தில் வேறு தேவைகள் இருக்கிறது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவிலிருந்து விலகி அத்து மீறும் நிலையில் அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் இன்றைய உலகில் இல்லை என்பதே உண்மை.
எனவே, இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் தமது பிரச்சினைகளையும் தேவைகளையும் இலங்கை எனும் நாட்டின் எல்லைக்குள் ஒரு சமூகமாக இருந்து வென்றெடுக்க வழி காண வேண்டுமே தவிர வீண் விதண்டாவாதங்களாலும் நம்பிக்கையாலும் மூக்குடைபடுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை.
ஹலால் விடயம் ஒரு தெளிவான பாடத்தை நமக்குக் கற்றுத்தந்திருக்கிறது. இன்றைய “இணக்கப்பாட்டிற்கும்”, “விட்டுக்கொடுப்புக்கும்”, பிஸ்மி சொல்லி எமது உலமாக்களும் அரசியல் வாதிகளும் விளக்கமும் எதிர்ப்புரைகளும் வெளியிட முன்னர் தூர நோக்கு எனும் விடயத்திலும், யதார்த்தம் தொடர்பிலும் மக்கள் சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும்.
விவேகமான சமூக செயற்பாடுகளின் தேவையை இன்றைய ஹலால் விடயம் நமக்கு உணர்த்தியிருக்கிறது.
வளர்ச்சியடைந்த உலக சக்திகளாக விளங்கும் அனைத்து நாடுகளிலும் இதே ஹலால் தரப்படுத்தல் முறை வெற்றிகரமாக முஸ்லிம்களால் முன்னெடுக்கப்படும் போது சிறிய நாடான இலங்கையில் அது முடியாமல் போனது ஏன்? எனும் கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழ வேண்டும்.அதன் விடையை விவேகத்தின் அடிப்படையில் காணத் துணிய வேண்டும்.
உணர்ச்சி மிகுதியில் யாரையாவது காப்பாற்ற வேண்டும், குற்றம் சுமத்த வேண்டும் எனும் நிலைக்கு அப்பால் நமது சமூகம் சார்பில் மார்க்க அறிஞர்கள் விட்ட தவறுகளும் பேசப்பட வேண்டும். தலைமைக்குக் கட்டுப்படுவதெல்லாம் சரி, மார்க்க அறிஞர்களை அரசியலுக்குள் தள்ளி நிர்ப்பந்தித்த மக்கள், எதற்கெடுத்தாலும் ஜம் இயாவுக்குக் கட்டுப்படுகிறோம் எனக் கூறி அவர்களை அரசியல் ரீதியாக உசுப்பேற்றி விட்ட மக்களும் தான் சிந்திக்க வேண்டும்.
சமூக அரசியல் தலைமைகளின் வங்குரோத்து நிலைக்கு மாற்றீடாக மார்க்க அறிஞர்களை அரசியலுக்குள் தள்ளிவிட்ட பாவம் உங்களையும், அவர்களை வைத்து அரசியல் அரங்கில் இலாபம் பார்த்த பாவம் அரசியல் வாதிகளையும் சேரும் அதே வேளை தூர நோக்குடன் சிந்திக்கப்படாத உணர்ச்சிமிகுதியில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்காக ஜம் இயாவும் சிந்திக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நம் மக்கள் முதலில் உண்மையை வெளிப்படைாகப் பேச வேண்டும் ! நமது சகோதரனின் பாவத்தை மறைக்கிறோம் பேர்வழி என்று கூறிக்கொண்டு ஒரு சமூகத்தையே படுபாதாளத்திற்குத் தள்ளிக்கொண்டிருக்கிறோம் என்பதையும் உணர வேண்டும்.
மாற்று சமூகங்களில் இடம்பெறும் விடயங்கள் சுட்டிக்காட்டப்படும் போது அந்தச் செய்திகளைப் பார்த்துவிட்டுப் போகும் நாம் முஸ்லிம்கள் சம்பந்தமான செய்திகள் வரும் வேளைகளில் அதை வெளிப்படுத்தக் கூடாது, மறைவில் வைத்து ஆராயப்பட வேண்டும் போன்ற நிலைப்பாடுகளில் இருந்து அவற்றை மறைத்துக்கொண்டு அதிலிருந்து இன்னொன்றை உருவாக்கிக்கொண்டே செல்லும் போக்கைக் கைவிட்டு நிதர்சனங்களைப் புரிந்து சுய விமர்சனம் செய்து முன்னேறும் வழியைக் காண வேண்டும்.
சமூகம் சம்பந்தமான உண்மைகள் பேசப்படாத வரை அதற்கான விடிவுகளும், விடைகளும் கிடைக்கப் போவதில்லை.
ஹலால் விடயம் ஒட்டு மொத்தத்தில் விவேகமற்ற செயல் என்பது ஆரம்பத்திலிருந்து நம் மக்களுக்குத் தெரியும். ஆனாலும் அதில் ஒரு நிலைப்பாட்டையெடுப்பதற்கு மக்கள் தயாராக இருக்கவில்லை. உலமாக்களை விமர்சிப்பதா? என ஒதுங்கிக்கொண்டோர் ஒரு பக்கமிருக்க, “சான்ஸ்” பார்ப்பது என்று சொல்வது போல் நடந்தாலும் நல்லது என்று ஒதுங்கியிருந்தோரும், விமர்சித்த சிலரும் கூட இருக்கத்தான் செய்தார்கள்.
ஆனாலும் சமூகம் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும்,எடுத்துரைக்கவும், குரல் கொடுக்கவும் தவறியதால் இன்று இனி மீண்டும் பழைய நிலைக்கே சென்று ஹலாலையும் ஹறாமையும் தமது அறிவைக்கொண்டே பிரித்தறியும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
பல வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளில் கூடக் காணப்படும் ஹலால் பொறிமுறை இலங்கையில் இனி எப்போதும் வரக்கூடாது எனும் நயவஞ்சகமான செயற்பாட்டை இலங்கை அரசு அரங்கேற்றியிருக்கும் குரூரம் நம் மக்களுக்கு முதலில் புரிய வேண்டும்.
ஹலால் சான்றிதழ் இந்த நாட்டில் இருக்கவே கூடாது என்பதுதான் பொது பல சேனாவின் கோரிக்கையாக இருந்தது. இந்தக் கோரிக்கை ஐக்கிய தேசியக் கட்சி அரசு வந்தாலும் வைக்கப்படும், ஏனெனில் பெளத்தவாதம் தலை தூக்கும் போது எந்த ஒரு அரசும் பணிந்தே செல்லும், அதுதான் இலங்கையின் யதார்த்தம் !
நாளுக்கொரு “மீட்டிங்கும்” கையுமாக ஓடித்திரிந்த உலமா சபை இந்தப் பிரச்சினை எழுந்த போதே, அப்போதாவது அரசாங்கத்தை நம்பியிருந்திருக்காமல், நல்லது இந்த ஹலால் சான்றிதழை நாங்கள் வழங்குவதிலிருந்து விலகிக்கொள்கிறோம் அதை வேறு வகையில் நிறுவனமயப்படுத்தித் தாருங்கள் என அரசை நிர்ப்பந்தித்திருந்தால் அல்லது கேட்டுக்கொண்டிருந்தால் இன்று இனி எப்போதும் இலங்கையில் ஹலால் சான்றிதழ் வர முடியாத நிலை வந்திருக்கும் அவசியம் இல்லை என்பது உணரப்பட வேண்டும்.
மேற்பார்வை நிலையில் நாங்கள் இருக்கிறோம் ஆனால் அதை வேறு ஒரு வழியில் அமுல் படுத்தலாம், அதிலிருந்து வரும் வருமானத்திலிருந்து நாட்டின் அரசிற்கு வரியைச் செலுத்தலாம் எனும் நிலையையாவது எம் மார்க்க அறிஞர்கள் எடுத்திருக்கக் கூடாதா? எனும் ஆவலில் அவர்கள் பார்வைக்கும் கடந்த காலங்களில் இந்த ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன, கட்டுரைகள், நடைமுறை உதாரணங்கள் கூட அனுப்பி வைக்கப்பட்டன.
ஹலால் சான்றிதழ் ஏன் வேண்டும்? என விளக்கமளிக்க விளைந்த ஜம் இயத்துல் உலமா சபை வானொலிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஊடாக மக்களிடம் விதைத்த கருத்துக்கள் இன்று பரவலாக ஒவ்வொருவர் மனதிலும் பதிந்து விட்டது. இந்நிலையில் இனி ஹலால் சான்றிதழ் வேண்டாம் எனும் நிலைப்பாட்டை விளக்குவதற்காக எவ்வாறான விளக்கங்கள் வரப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆக மொத்தத்தில் மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடப்பட்ட இந்த வரலாற்றுத் தருணம் எதை நாடி நிற்கிறது என்பதை மக்கள் தான் உணர வேண்டும். தெளிவு யாருக்குப் பிறக்க வேண்டும் என்பதையும் மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
- மானா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :