எமது சமூகம் பொறுமையாளர்கள் என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறோம். இந்த சோதனையான நிலையில் முஸ்லிம்களுக்கு இருக்கும் ஒரேயொரு ஆயுதம் துஆ பிரார்த்தனையாகும். முஸ்லிம் சமூகம் பொறுமையுடன் எமக்கு முன்னுள்ள சதிகாறர்களுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்துவத்திற்கான தேசிய பணிப்பாளரும், அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.சீ யஹ்யாகான் தெரிவித்தார்.
பொதுபல சேனாவைப்பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவர்கள் கொண்டுவந்த ஹலால் விடயம் எமது மக்களுக்கு அத்துறைசார்ந்து மேலதிக விளக்கங்களை தேடிப்படிக்கக் கூடிய நிலையை உருவாக்கியுள்ளது. என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கட்சியின் புதிய அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் சமாதான நீதிவான்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (16) அவரது கல்முனை அலுவலகத்தில் நடைபெற்றது. அதற்கு தலைமை தாங்கி உரையாற்றும்போதே, ஏ.சீ யஹ்யாகான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றும்போது,
எமது கட்சியின் தலைமை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மிக நிதானத்துடன் கையாண்டு வருகின்றது. அதற்கு மேலதிகமாக எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவதானத்துடனும், விவேகமாகவும் செயற்பட்டு வருகின்றனர். அந்த வகையில் எமது மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக செயற்படும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.
இன்று இந்த நிகழ்வுடன் எமது பிரதேச மக்கள் பல சமாதான நீதிவான்களை பெறுகின்றனர். கௌரவமான பட்டம் என்றாலும் இதன் முக்கியத்துவம் பிற்காலத்தில்தான் விளங்கும். இதற்காக எமது தலைவரும், நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
பொருளாதார ரீதியாக எமக்கென்று இனி தேவைகள் கிடையாது. என்றாலும் மக்கள் தேவைகளின் நிமிர்த்தமே இன்று நாம் அரசியலுக்கு வந்து பட்டம், பதவிகளுக்கு அப்பால் சமூகப்பற்றின் காரணமாக மக்களுக்கு சேவையாற்ற முனைகின்றோம்.
இந்நிலையில் எமது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று செயற்படும்போது அதில் பல்வேறுபட்ட சிக்கல்கள், விமர்சனங்கள் வருகின்றது. ஆனால் நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பும் சமூகசேவையில் அதிக ஆர்வம் காட்டி வந்தேன். அப்போது எந்த விமர்சனமும் வரவில்லை. நாம் சுதந்திரமாக செயற்பட்டு விரும்பியதை மக்களுக்காக செய்து வந்தோம். இன்று பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் எமது சேவை தொடர்கிறது. அமானிதமாகப்பெற்ற இந்த அரசியல் பதவியை மக்களுக்கான இயலுமான சேவயின் மூலம் அலங்கரிக்க என்னால் முடியுமானதை செய்து வருகிறேன்.
மக்கள் அரசியல்வாதிகளை வழிநடாத்த வேண்டும். அப்போதுதான் எமது பிரதேசத்தின் தேவைகள் சிறப்பாக பூர்த்தியாக்கப்படும். ஒவ்வாரு தனிமனிதனும் தனது சொந்த தேவைகளுக்காக அரசியல்வாதியை நாடாமல் ஒரு குழுவாக சேர்ந்து சிறந்த கட்டமைப்புடன் நமது பிரதேச தேவைகளை முன்வைத்து அரசில்வாதிகளிடம் செல்லும்போது அவை நிறைவேற்றப்படும் என்பதை நாம் உணரவேண்டும்.
இன்று பிளவுகள் அதிகரிக்கப்பட்டதனால் கல்வி, கலாச்சாரம், வாழ்வியல் போன்ற விடயங்களில் எமது சமூகம் பின்நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாகப்பிளவு, மார்க்க ரீதியாகப் பிளவு தன்னலம் என்பது மனித மனங்களில் மேலோங்கி பொதுநலம் என்பது அணுவளவும் இல்லாமல் போய்விட்டது என்றும் கூறினார்.
0 comments :
Post a Comment