கல்முனையின் முதலாவது பதியப்பட்ட ஜும்ஆ பள்ளிவாயல் உள்ள தைக்கா வீதி கடந்த நான்கு தசாப்த காலமாக திருத்தப்படாமல் இருக்கிறது - முபாறக் மெளலவி


கல்முனையின் முதலாவது பதியப்பட்ட ஜும்ஆ பள்ளிவாயல் உள்ள தைக்கா வீதி கடந்த நான்கு தசாப்த காலமாக திருத்தப்படாமல் இருப்பது இப்பகுதி அரசியல்வாதிகளின் பொடுபோக்கினையே காட்டுகிறது என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தைக்கா வீதி என்பது நாமறிந்த இந்த நாற்பது வருடங்களுக்குள் எத்தகைய உருப்படியான திருத்தமும் இன்றி காட்சி தருவது இப்பகுதி அரசியல்வாதிகளினால் இந்தப்பிரதேச மக்கள் எந்தளவிற்கு ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதற்கு ஓர் ஆதாரமாகும். ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஜும்ஆ தொழுகைக்காக கலந்து கொள்ளும் மஸ்ஜித் முஹம்மதிய்யா பள்ளிவாயல் உள்ள மேற்படி வீதி இன்னமும் கிறவல் கலந்த மண் வீதியாக உள்ளதோடு மழைக்காலத்தில் தலைவிரி கோலமாக திரியும் பைத்தியக்காரி போல் காட்சி தருகிறது. 

மழை விட்டு ஐந்து நாட்கள் சென்றாலும் தண்ணீர் வற்றாத அதிசயம் நிறைந்த குழிகள் இந்த வீதியில் காணப்படுகின்றன.  இத்தனைக்கும் இந்த வீதியில் உள்ளவர்களில் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானோர் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்து ஏமாந்தவர்களே.  
இம்மக்கள் 2004ம் ஆண்டு ரஊப் ஹக்கீமுக்கு வாக்களித்து அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கினார்கள். ஹரீசை கல்முனை மேயராகவும், பாராளுமன்ற உறுப்பினராக பல தடவை ஆக்கினார்கள். கடந்த மாநகர சபை தேர்தலில் மு. கா பிரதி தலைவர் நிசாம் காரியப்பரை பகிரங்கமாக ஆதரித்து அவரை கல்முனையின் பிரதி மேயராக்கி அழகு பார்த்தார்கள். ஆனாலும் அம்மக்களின் இந்த வீதி அழகாக இல்லாத நிலையில் மிக அசிங்கமாக காட்சி தருகிறது.

கடந்த வருடம் நாம் இந்த வீதியை திருத்தும்படி கிழக்கு மாகாண சபை அமைச்சர் உதுமா லெப்பையிடம் நேரடியாக கோரிக்கை விடுத்தோம். அதனை செய்து தருவதாக அவர் எம்மிடம் உறுதியளித்திருந்தார். ஆனாலும் இன்னமும் இது நடைபெறாதது கவலை தருகிறது. அமைச்சர் உதுமா லெப்பை மக்கள் அக்கறையுள்ள அமைச்சர் என்பதை நாம் அறிவோம். இருந்த போதும் எமது நேரடியான ஒரேயொரு இக்கோரிக்கையை நிறைவேற்றாததன் மூலம் அனைத்து முஸ்லிம் கட்சிகளாலும் ஓரங்கட்டப்பட்டுள்ள வீதியாக இந்த தைக்கா வீதியின் பரிதாபம் உள்ளது.

கல்முனை மாநகர சபை பல மில்லியன் ரூபாய்களை கல்முனை மக்களின் வரி மூலமாக பெற்றுள்ளதாக அதன் தற்போதைய மேயர் சிராஸ் ஊடகங்களில் பெருமைப்படுகிறார். ஆனால் ஜும்ஆ பள்ளிவாயல் உள்ள இந்த வீதியை அவராலும் வடிகாண் அமைத்து திருத்த முடியவில்லை என்பதன் மூலம் கல்முனை மாநகர வருமானத்தின் நன்மை இந்த வீதிக்கு ஹராமானதா என்றுதான் கேட்க வேண்டியுள்ளது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :