தென்னந்தோப்பில் முளைத்த கிள்ளுக்கீரைகளான இலங்கை முஸ்லிம்கள்



(ஏ.எம்.எம்.முஸம்மில் - செயலாளர், மலையக முஸ்லிம் மாநாடு – UCMC)

     கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இந்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கை இலக்காகக் கொண்டு அப்போதைய ஆட்சியாளர்களால் இனவாதத் தீ மூட்டப்பட்டது. அத்தீயில் வெந்து கருகிய கடந்த 30 ஆண்டு வருட காலத்தில் கற்றுக்கொண்ட பாடங்களும் அதற்கான தீர்வுகளையும் பற்றி கருத்தாடலொன்று நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் மீண்டும் தலைகீழான சிந்தனைகளால் முன்னெடுக்கப்படும் பௌத்த மேலான்மை வாதம் இம்முறை இந்நாட்டு முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளது.

     பல் சமூக அமைப்பில் தமது தனித்துவத்தைப் பேணியவர்களான, இந்நாட்டிற்கு துரோகம் இழைக்காத, இந்நாட்டைக் காட்டிக் கொடுக்காத இந்நாட்டின் இறையாண்மைக்கும், சுபீட்சத்திற்கும், அபிவிருத்திக்கும் பாரியதொரு பங்காற்றிய கீர்த்தி மிக்கதொரு வரலாற்றைக் கொண்ட, சமூகம் இன்று பல பொய்யான, தர்க்க ரீதியற்ற, அறிவுக்குப் பொருந்தாத பல குற்றச்சாட்டுகளை, அவதூறுகளை சுமக்க வேண்டியதோர் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

 அதுமட்டுமல்லாமல் மேற்படி குற்றச்சாட்டுகளுக்கும், படுதூறுகளுக்கும் தகுந்த ஆவணப்படுத்தப்பட்ட பதிலுரைக்கக் கூடியதொரு தலைமையோ, சமூக அமைப்போ இல்லாத கையாளாகாத சமூகமாகவும் 'ஆக்க'ப்பட்டுள்ளார்கள்.

    முஸ்லிம்களின் அரசியல் தலைமை எவ்வாறு திட்டமிட்டு சிதைக்கப்பட்டுள்ளதோ, அதே பாணியில் சமூக, சமய தலைமைகளும் சில வரப்பிரசாதங்களுக்காக சிதைக்கப்பட்டுள்ளதாகவே எமது நாட்டின் பெரும்பான்மையான முஸ்லிம்களின் உளக்கிடக்கையாக உள்ளதையும் அறிய முடிகின்றது. 

முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் வடித்தெடுத்த அபாண்டங்களாகவும், துவேச உணர்வின் வெளிப்பாடாகவே உள்ளன. அவற்றில் முக்கியமானதும், பெரும்பான்மை சமூகத்தை அச்சமடையச் செய்துள்ளதுமான குற்றச்சாட்டுகளை நோக்கினால்,

1). சிங்கள சமூகத்தின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய அல்லது இல்லாமல் ஆக்கக்கூடிய   'சதிகளை' முஸ்லிம்கள் திட்டமிட்டுச் செய்கிறார்கள். (உ-ம்) நோலிமிட் டொபி, முஸ்லிம்   ஹோட்டல்களில் சமைக்கப்படும் உணவு வகைகள்.

2). முஸ்லிம்களின் இனப்பெருக்கத்தை திட்டமிட்டு அதிகரிக்கச் செய்வதோடு குறுகிய எதிர்காலத்தில் இந்நாட்டை முஸ்லிம் நாடாக ஆக்குவதற்கும் ஷரிஆ சட்டத்தின் மூலம் இந்நாட்டு பௌத்தர்களை ஆட்சி செய்யவும் திட்டமிட்டுள்ளார்கள்.

3). பௌத்த கலாசார விழுமியங்களையும், புராதன வரலாற்றுச் சின்னங்களையும் திட்டமிட்டு       சிதைக்கிறார்கள். (உ-ம்) கிழக்கு பௌத்த விகாரைகள்.....?, ஜெயிலானி – குரகல, பன்சலைகளை     அண்டிய முஸ்லிம் பள்ளிவாயில்கள் .

4). பௌத்தர்களின் பொருளாதாரத்தை சுரண்டி வாழ்கிறார்கள். (உ-ம்) ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும்  வருமானத்தை இந்நாட்டை முஸ்லிம் மயமாக்க செலவளிப்பதுடன், அல்கைதா போன்ற ஜிஹாதிய    அமைப்புகளுக்கும் அனுப்பி வைத்தல்.

5). பரம்பரை முஸ்லிம், வஹாபிஸ முஸ்லிம் என்ற பிரிவினைகள் இந்நாட்டில் உள்ளன. இதில் வஹாபிஸ    முஸ்லிம்கள் மிகத் திட்டமிட்ட அடிப்படையில் இந்நாட்டை இஸ்லாமிய நாடாக்க முயற்சி செய்கின்றனர்.  இவர்களால் நிர்வகிக்கப்படும் எல்லாப் பள்ளிவாயில்களும், ஜிஹாதிய போராட்டத்திற்கான பங்கர்களாக  செயற்படுகின்றன. 

    மேற்போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து மிகத் தீவிரமாக பௌத்த மேலாண்மை வாதத்தால் பிரச்சாரம்   செய்யப்படுகின்றது. மேற்படி பிரச்சார நடவடிக்கைகள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில், பல கிளை அமைப்புகளை அமைத்து வேகமாக செயற்படுத்தப்படுகின்றன. 

இவர்களின் இப்பிரச்சார நடவடிக்கைகள் கடந்த சுமார் 10 மாதங்களுக்கு முன் மிகவும் தொய்வடைந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்டாலும், இதன் விபரீதத்தை ஒரு சில விரல்விட்டு எண்ணக்கூடிய ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்களால் சுட்டிக் காட்டப்பட்டு, அதற்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தாலும் எமது அரசியல் சமூகத் தலைமைகளாலும், ஆளுந்தரப்பு பிரதிநிதிகளாலும், ' இது ஒரு சிறு கும்பலின் வேலை, இதைக்கொண்டு நாம் அச்சமடையத் தேவையில்லை. 

இவர்களின் விடயத்தில் நாம்; நடவடிக்கைகளை மேற்கொள்வதானது, இவர்களுக்கான விளம்பரத்தைத் தேடித்தரும் விடயமாக மாறிவிடுவதால், இவர்களின் செயற்பாடுகளை கண்டு கொள்ளாது விட்டுவிட வேண்டும்' 

என்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்தப் பொடுபோக்குத் தனத்தின் விளைவையே இன்று இந்நாட்டு முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். மேற்குறித்த குற்றச்சாட்டுகள் மூலம் அவப்பேறு சுமத்தப்பட்ட முஸ்லிம்களை 'தென்னந் தோப்பில் முளைத்த கிள்ளுக்கீரைகளாக' சித்தரித்து பகிரங்க ஊடகங்களில் கருத்து வெளியிட்டபோது அதற்கெதிராக எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் 'கிள்ளுக்கீரைகளாகவே' எழுந்து வந்த வரலாறையும் காணவேண்டிய துர்ப்பாக்கியம் எங்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

   உலக சனத்தொகை பரம்பல் பற்றிய அறியாமையால், கலகொட  அத்தே ஞானசார தேரர் TNL தொலைக்காட்சி ஊடக கலந்துரையாடலொன்றில் கருத்து வெளியிட்ட போது, 'ஒரு தென்னந்தோப்பில் வல்லாரை போன்ற கீரை வகைகளும் முளைக்கும். ஆனால் நாம் அதை வல்லாரைத் தோட்டமென்று ஒருபோதும் அழைக்க மாட்டோம். அது தென்னந்தோட்டம் தென்னந்தோட்டம்தான். அதுபோல் இந்நாடு பௌத்த நாடு பௌத்த நாடுதான். 

அது வல்லாரைத் தோட்டமாகாது' என்று கருத்துக் கூறினார். அத்துடன் இந்நாட்டு முஸ்லிம்களின் பூர்வீகம் சுமார் 300 வருடங்களை வரலாறாகக் கொண்டதாகும். அதற்கு முன் வியாபார நோக்கில் அரேபியர்கள் இந்நாட்டுக்கு வந்து போயிருக்கலாம் என்றும் முஸ்லிம்களின் பூர்வீகம் கொச்சைப்படுத்தப்பட்டது.

  உலக சனத்தொகைப் பரம்பலுடன் நோக்கும்போது, 14  பங்கினரான முஸ்லிம்கள் ஒரு சர்வதேச சமூகமாகவே கருதப்படுகிறது. அதேவேளை மிக வேகமாக வளர்ந்து வரும் சமூகமாகவும் கருதப்படுகின்றது. அண்மையில் வத்திக்காணில் ஓய்வுபெற்ற போப்பாண்டவரான ஜோன பெனடிக்;  அவர்கள் அறிவித்ததைப் போல் உலக சமயங்களில் இன்று இஸ்லாமே மேலோங்கியுள்ளது. பொதுபலசேனா கூறுவதைப் போல், யுனெஸ்கோ அறிக்கையின்படி உலகில் அழிந்துபோகும் 23 இனங்களில் பௌத்தமும் ஒன்று என்று கூறுவதைப் போன்ற நிலை இன்று இஸ்லாத்திற்கோ, முஸ்லிம்களுக்கோ இல்லை. 

ஆகவே இந்நாட்டில் சிறுபான்மையினராகவும், அதேவேளை சர்வதேச குடும்ப அமைப்பாகவும் பிண்ணிப் பிணைந்துள்ள ஒரு வாழும் சமூகத்தை கிள்ளுக்கீரைகளாக இவர்களால் ஒதுக்கிவிட முடியாது. முஸ்லிம் சமூகம் எல்லைக்கடந்த குடும்ப முறையை கொண்டிருப்பதாலேயே கடந்த முறை ஜெனீவாவில் இலங்கைக்கு சார்பாக சாதிக்கமுடிந்துள்ளது என்பதையும் இவர்;கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

  பிரிவினை வாதத்துக்கும், பயங்கரவாதத்திற்கும் எதிராக செயற்பட்ட இந்நாட்டு முஸ்லிம்கள் இந்நாட்டில் 30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதனை உளப்பூர்வமாகவும், இலங்கையர் என்ற அபிமானத்துடனும் வெற்றிக்களிப்பைக் கொண்டாடினார்கள். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த செய்தியை ஜனாதிபதி அவர்களால் உத்தியோகபூர்வமாக இந்நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் அறிவித்த வேளை, 'இந்நாட்டில் இனிமேல் சிறுபான்மையினர் எனும் ஓர் இனம் இல்லை. 

நாம் இலங்கையர் என்ற ஒரு இனம் மட்டுமே உள்ளது' என்ற கூற்றில் நம்பிக்கை வைத்தனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவப் பிரஜைகள் என்ற அபிமானமும்,கௌரவமும் நமக்கு உண்டு என்ற எண்ணப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது. ஆனால், இந்த எண்ணம் தற்காலிகமானது என்ற ஆதங்கம் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு சமகால நிகழ்வுகள் ஏற்படுத்தியுள்ளதும் கசப்பான உண்மையாகும்.

பிரஜா உரிமை என்பது நாட்டின் யாப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்கப்பெற்ற சமநிலை அந்தஸ்தாகும். இதன்  மூலமாகவே இந்நாட்டில் வாழவும், சாகவும் வியாபாரம் செய்யவும் கருத்தைச் சொல்லவும், சமயத்தைப் பின்பற்றவும், சமயத்தை துறக்கவும், வாழ்வில் இன்னோரன்ன அனைத்து விடயங்களுக்கும் உரித்துடையவனாகிறான். இதன்மூலம் சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற உறுதிப்பாட்டிற்கு உரித்துடையவனாகிறான். இந்த உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதே ஒரு ஜனநாயக அரசின் பிரதான கடப்பாடாகும். 

இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட பிரஜா உரிமைக்கு முன்னால் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதம், இனத்துவப் பாகுபாடுகள், பூர்வீகக் குடிகள்,வந்தேறு குடிகள் என்ற அத்தனை வேற்றுமைகளும் அடிபட்டு போய்விடும்.

ஆகவே, இந்நாட்டுக் குடிமகனொருவன் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரமொன்றை உரிய அனுமதிப் பத்திரங்களைப் பெற்று, வரிகளை செலுத்தி இந்நாட்டு சட்டவிதிகளுக்கமைய மேற்கொள்ளப்படும் வியாபாரத்தை தடுக்கவோ, அவனுடைய வியாபாரத்திற்கு எதிராக அவன் என்ன இனத்தை சார்ந்தவன் என்ற ஒரே காரணத்தினால் அங்கே கொடுக்கல் வாங்கல் செய்யாதீர்கள் என்று பிரச்சாரம் பண்ணுவது சட்டபடி குற்றமாகும். இந்த சட்டம் இன்று பகிரங்கமாக மீறப்படுகின்றது. சிங்கள ராவய, அபி சிங்கள, பொதுபலசேனா போன்ற இயக்கங்கள் தமது சுலோகங்களிலும், பெனர்களிலும் இவ்வறிவித்தலை உத்தியோகபூர்வமாகவே அறிவிக்கின்றார்கள்.

நோலிமிட் ஜவுளிக்கடைகளில், அன்பளிப்பாக வழங்கப்படும் டொபிகள் உட்பட முஸ்லிம் உணவகங்களில் விற்கப்படும் உணவு, பான வகைகள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளார்கள் என்று விசனப் பிரச்சாரம் செய்து அவர்களின் வியாபாரத்துக்கு இடையூறு விளைவி;க்கிறார்கள்.

ஒரு வியாபாரி தமது அங்கீகரிக்கப்பட்ட வியாபாரத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளுக்கமைய தமது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பிரச்சாரம் செய்வதற்கு உரிமையுடையவனாகிறான். இந்த வகையில்;, நோலிமிட் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டொபிகள், இனிப்புகள் பகிரப்பட்டிருக்கலாம். ஆனால், அதில் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளது என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டப்படும்போது அதற்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு, உண்மை நிலையை வெளிக்கொணர்வதும், அதன்மூலம் குற்றவாளிகளை உலகறியச் செய்யும்  அதேவேளை, சமூக நல்லுறவை நிலைநாட்டுவதே சமூகக் கடப்பாடாகும்.

நோலிமிட் உரிமையாளருக்கு இது தனிப்பட்ட வியாபார பிரச்சினையாக இருக்கலாம். ஆனால், அவர் முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளதால், இது ஒரு சமூகப் பிரச்சினையாக உள்ளது. ஆனால் குறிப்பிட்ட அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்காத காரணத்தால்,பௌத்த மேலாண்மை வாதத்தால் முடுக்கிவிடப்பட்டுள்ள இப் பொய்ப்பிரச்சாரம் மத்தியஸ்த பௌத்த மக்களின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற அடிப்படைகளற்ற பொய்ப் பிரச்சாரங்களைத் தர்க்க ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் முறியடிக்கப்பட வேண்டிய சமூகக் கடமை இன்று வரை உரிய முறையில் முஸ்லிம் சமூக தலைமைத்துவத்தால் மேற்கொள்ளப்படவில்லை என்பது எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளிகளின் பரிமாணத்தையே சுட்டிக்காட்டுகின்றது. 

அதேபோல் பௌத்த கலாசார சின்னங்களை திட்டமிட்டு சிதைக்கின்றார்கள். அதேவேளை மூன்று அல்லது நான்கு குடும்பங்கள் வாழ்கின்ற இடங்களில் பள்ளிவாயில்களை கட்டுகின்றார்கள் போன்ற குற்றச்சாட்டுகளுள் அடிப்படைகளின்றியே முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டு வருகின்றது. இன்று இந்நாட்டில் 10 க்கு மேல் முஸ்லிம் பள்ளிவாயில்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள வேளையிலும் நாட்டில் எந்தவொரு முஸ்லிம் பள்ளிவாயிலும் தாக்கப்படவில்லை என்று கூறிக்கொண்டே முஸ்லிம்களால் பௌத்த சின்னங்கள் சிதைக்கப் படுகின்றன என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார்கள்.

  உண்மையாகவே தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களின் எதிர்ப்பை அல்லது முஸ்லிம்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் தொனியை குறைப்பதற்காகவே இவ்வாறு மிகவும் சூட்சுமமாக இச்செயலைச் செய்கிறார்கள். சிதைக்கப்படும் பௌத்த மத உரிமைகள் பற்றி அவர்கள் குறிப்பிடும் கிழக்கு விகாரைகள், குரகல எனப்படும் ஜெயிலானி போன்ற இன்னும் சில இடங்களைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள். இவர்கள் கூறும் மேற்படி பௌத்த நிலையங்கள், சின்னங்கள் சம்பந்தமாக ஆதாரபூர்வமான ஆதாரங்களைத் திரட்டப்பட்டு அதன் உண்மை நிலைகளையும், நியாயங்களையும் உலகறியச் செய்ய இதுவரை எந்த அமைப்பும் முன்வரவில்லை. 

   ஆக, இன்று முஸ்லிம்களின் மேல் அபாண்டங்களையும், அவதூறுகளையும் அள்ளிவீசி பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்ற மேலாண்மைவாதம் இனிவரும் காலங்களில் இந்நாட்டு முஸ்லிம்கள் இதுவரைக்காலமும் பின்பற்றிவரும் இஸ்லாமிய நடைமுறைகள் அனைத்தையும் இல்லாமல் செய்வதாக சூழுரைக்கிறார்கள். இதுவரைக் காக்கப்பட்டுவந்த முஸ்லிம்களின் கண்ணியம், இனவாதிகளின் உண்மையான பின்னணியை தோலுறித்துக் காட்டவும் எம் மத்தியில் முறையானதொரு கட்டமைப்பு தோற்றுவிக்கப்படவில்லை என்பதை எமது நாட்டு முஸ்லிம்கள் கிள்ளுக்கீரைகள் தான் என்பதை நிரூபிப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அண்மைக்கால அழுத்தங்கள் எதேச்சையாக ஏற்பட்டவை அல்ல. மாறாக மிகவும் திட்டமிட்டதொரு நிகழ்;ச்சி நிரலுக்கு அமையவே செயற்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை நடந்தேறிய ஒரு சில நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டக் கூடியதாய் உள்ளன.

ஒரு சில மாதங்களுக்கு முன் முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் பரவலாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அசாதாரண நிலைமைகள் பற்றி பாதுகாப்புச் செயலாளருடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கௌன்சில் ஆகிய அமைப்புகளுடன் இன்னும் சில பிரமுகர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்வொன்றில் (பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் காரியாலயம்) கருத்துக் கூறியிருந்த பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அவர்கள், 'இன்று கொழும்பில் சிங்களவர்களைவிட முஸ்லிம்களின் வீதம் கூடியுள்ளது. 


என்பதை தானும் ஏற்றுக்கொள்வதாகவும், இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு இனரீதியான எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை பிறநாட்டு ராஜதந்திரிகளுக்கு எடுத்துக்காட்டுவதற்காக தாம் இவ்விடயத்தை முன்னுதாரணமாகக் காட்டுவதாகவும் கூறியிருந்தார். அதாவது, கொழும்பில் முஸ்லிம்கள் 40மூ தை தாண்டிவிட்டதற்காகவும் தமிழர்கள் 30மூ ஆகவும், பௌத்தர்கள் 29மூ ஆகவும் குறிப்பிட்டிருந்தார்.

பொதுபலசேன போன்ற அமைப்புகளால் சோடிக்கப்பட்ட பொய்த் தரவுகளில் இதுவும் ஒன்றாகும் என்பதை இலங்கைக் குடிசனத் தொகை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் ஒரு அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. அத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, 'கொழும்பில் பௌத்தர்கள் 29மூ ஆகவும், தமிழர்கள் 30மூ ஆகவும், முஸ்லிம்கள் 40% ஆகவும் வசிப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொய்யானது என்றும் கொழும்பு மாநகரமானது, கொழும்பு மற்றும் திம்பிரிகஸ்யாய ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களுக்கான இடப்பரப்பைக் கொண்டுள்ளது எனவும், கொழும்பு பிரதேச செயலகத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு மேற்படி புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவையும் உள்ளடக்கி நோக்குகையில், பௌத்தர்கள் 38.8 வீதமும், தமிழர் 31.8 வீதமும், இலங்கை சோனகர் (முஸ்லிம்கள்) 29 வீதமும், வேறு இனத்தவர் 2 வீதமும் வாழ்வதாக அவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆகவே, உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்டு, அரச அதிகாரிகள் செயற்படுகின்றார்கள் அல்லது செயற்படத் தூண்டப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாது, மேற்குறித்த சந்திப்பின் போது, முஸ்லிம் பெண்கள் பர்தா  அணியும் வீதத்தில் சடுதியான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பல்ககலைக்கழகங்களிலும், ஏனைய பொது இடங்களிலும் இதனை சுலபமாகக் காணலாமென்றும், இதுப்பற்றியும் பல பௌத்த அமைப்புகள் தமக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் வருவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியிருந்தார்.

குறிப்பிட்ட அச்சந்திப்பில் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு தாம் உத்தரவாதம் அளிப்பதாகவும், இந்நாட்டின் புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரியாக ஒரு முஸ்லிமையே தாம் நியமித்தப்பதாகவும், பாதுகாப்புச் செயலாளரால் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட சந்திப்பின் நோக்கம் முஸ்லிம் தரப்பைத் திருப்திப்படுத்தப்படவில்லை என்பதையும் பங்குபற்றியவர்கள் சிலரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

அதேவேளை, நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்டுள்ள இவ் அசாதாரண நிலைமைகளுக்கு எதிராக முஸ்லிம்களின் தொழுகையில் ஓதப்படும் 'குனூத்' பிரார்த்தனையில் முஸ்லிம்கள் இறைவனிடத்தில் ஆயுதங்களை வேண்டுகிறார்களா? என்று ஜனாதிபதி அவர்கள் வினவியதையும், பொதுபலசேனா அமைப்பை ஹெலிகொப்டரில் அலரி மாளிகைக்கு அழைத்து 45 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தும் மூன்று மணிநேரம் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஒருசில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றியதையும், அவர்களின் செயற்றிட்டங்களை முன்னெடுத்துச் செல்ல ஆசீர்வாதம் வழங்கியிருந்ததையும் ஒருசில அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், 2003 ஆம் ஆண்டின் அல்கைதா உறுப்பினர் ஒருவரை இலங்கையில் கைதுசெய்யப்பட்டு அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்ற செய்தியும், அண்மையில் இலங்கைப் பத்திரிகையில் செய்தியாக கசியவிடப்பட்டிருந்தது. அதேவேளை, ஜம்இயத்துல் உலமாவினால் ஹலாலுக்காக அறவிடப்படும் பணத்தில் ஒரு பகுதி அல் கைதா போன்ற ஜிஹாதிய அமைப்புகளுக்கு அனுப்பப்படுகின்றது என்று குற்றச் சாட்டுகளுக்கு உள்ள பின்னணியையும் சில அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இன்று இலங்கை முஸ்லிம்களை ஆயுதக் கலாசாரத்தோடு தொடர்புபடுத்தப்பட வேண்டிய தேவை எதிரிகளுக்கு அல்லது முஸ்லிம் விரோத சக்திகளுக்கு அதிகமாகவே உண்டு. இந்திய சிவசேனாவை போல்; முஸ்லிம் விரோதப் போக்கை மேற்கொண்டு பல பயங்கரமான சதி சூழ்ச்சிகளில் இந்திய முஸ்லிம்களை சிக்க வைத்துள்ளது போல், நாளை பொதுபல சேனாவும் சதி சூழ்ச்சிகளில் இலங்கை முஸ்லிம்களை சிக்க வைக்கலாம் என்பதில் வியப்பதற்கில்லை. 
இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் பற்றி ஒரு அரசியல் ஆர்வலர் குறிப்பிடும் போது கீழ்வருமாறு சுட்டிக்காட்டுகின்றார். 

'யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மேற்குலகின் பல அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வரும் ராஜபக்ஷ அரசாங்கம் எப்பொழுதும் கிழக்குலகின் நட்டையும், ஒத்துழைப்பையுமே கட்டியெழுப்பியது. ஜெனீவா போன்ற அழுத்தங்கள் இனிவரும் காலங்களில் இலங்கைக்கு எதிராக தொடரும் நிலையில் மேற்குலகின் அனுதாபம் அல்லது கரிசனை பெறுவதற்குள்ள மூல உபாயங்களில் மிகப் பிரதானமானதும், இலகுவானதுமானது இலங்கையில் அல்கைதா அல்லது ஜிஹாதிய செயற்பாடுகள் இலங்கையை அச்சுறுத்தி

உள்ளது என்பதை மேற்குலகிற்கு நம்பவைப்பதாகும். குறிப்பாக அமெரிக்காவிற்கு நம்பவைப்பதாகும். அதேவேளை, பெரும்பான்மை பௌத்தர்களுக்கு மத்தியில் முஸ்லிம் விரோதப் போக்கை மேற்கொள்வதால் பெரும்பான்மை பௌத்தர்களின் வாக்கு வாங்கியை தன் பக்கம் தக்க வைத்துக்கொள்வதற்கும் இச்செயற் பாடுகள் உறுதுணை அளிக்கின்றன. ஆகவே 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்' என்ற கோட்பாடு இங்கு பின்பற்றப்படுகின்றது' என்று குறிப்பிட்ட அரசியல் ஆர்வலர் சுட்டிக்காட்டுகின்றார்.

'ஆயிரம் வருடங்கள் சமூக சகவாழ்வு' என்ற தொனிப்பொருளில் பல சமூக விஞ்ஞானிகளால் வரலாற்று ரீதியான ஆய்வுகள் மேற்கொண்டு ஆதாரப் பூர்வமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கௌரவமான சமுதாயம் இந்நாட்டின் சுதந்திரத்திற்காகவும், சுபீட்சத்திற்காகவும் பல அர்ப்பணிப்புகளை செய்துள்ளதோடு, தமது சமூக கலாசார தனித்துவத்தைப் பேணவும், அரசியல் ரீதியான அடைவுகளுக்காகவும் ஜனநாயக வழிமுறைகளில் திடமான நம்பிக்கை வைத்துள்ள ஒரு சமூகம் தாம் திட்டமிட்டு வஞ்சிக்கப்படுவதாக உள ரீதியாக உணரத் தொடங்கியுள்ளார்கள். கடந்த காலங்களில் பெரும்பான்மையின இந்நாட்டின் தலைவர்களிலும், இந்நாட்டு அரசிலும் நம்பிக்கைக் கொண்டு செயற்பட்டு வந்த அதேவேளை, அவர்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற்று வந்துள்ளதால் முஸ்லிம் சமூகத்திற்கான தனித்துவமான தலைமைத்துவ வெற்றிடம் இந்தளவு உணரப்படவில்லை.

ஆனால் இந்நாட்டின் ஈழப்போர் ஆரம்பித்தப் பிறகு புலிபயங்கரவாத ஆயுததாரிகளினதும், அரசாங்கத்தினதும் நெருக்கடிகளுக்கு உள்ளான கிழக்கிலங்கை முஸ்லிம் சமூகத்தால் தனித்துவமானதொரு தலைமைத்துவத்தின் தேவை உணரப்பட்டு அல்லது உணர்த்தப்பட்டு மருஹூம் அஸ்ரப் அவர்களால் அவ் இடைவெளி ஓரளவு நிரப்பப்பட்டது. அத்தலைமைத்துவத்தை இஸ்லாமிய ஆன்மீக தலைமைத்துவம் ஓரளவு ஏற்றுக்கொண்டிருந்தது. அதேவேளை ஈழப்போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின் முஸ்லிம் சமூகம் முறையானதொரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பை இழந்துள்ளது. முன்பிருந்ததை விட இயக்கங் களாகவும், அரசியல் ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் பிரிந்தே செயற்பட்டு வருகிறது. இந்நிலையே இன்றைய பல காட்டிக்கொடுப்புகளுக்கும் காரணமாகவுள்ளது.

இவ்வாறான பின்னணியைக் கொண்டதொரு நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப் பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். என்று முஸ்லிம் சமூகத்தை நோக்கி விரல் நீட்டுபவர்கள் முன்மொழிந்த பாரிய பிரிவு அல்லது பிளவு இந்நாட்டின் சம்பிரதாய முஸ்லிம்கள் மற்றும் சலபி வஹாபி முஸ்லிம்கள் என்ற பிரிவினை உண்மையில் இந்நாட்டில் இ;வ்வாறானதொரு பிரிவு நடைமுறையில் உள்ளதா என்றால் கோடிட்டுக் காட்டக்கூடிய வகையில் இல்;லை என்றே கூற வேண்டும். இயக்க ரீதியாக வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், தொழும் பள்ளிவாயில்கள் நோக்கும் திசை மொழிந்துள்ள கலிமா, திருமண முறைகள், வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் வேறுபாட்டைக் காண முடியாது. ஆனால் இன்று பொதுபலசேனா கூறுவதுபோல் (முன்மொழிந்தது போல்) இன்று எமது எழுத்தாளர்கள் என்று சொல்லக்கூடிய வர்கள் சிலரும் அதை ஏற்றுக்கொள்வது போல் சம்பிரதாய முஸ்லிம்கள், வஹாபி முஸ்லிம்கள் என்று பிரித்து எழுதத் தொடங்கிவிட்டார்கள். நம்நாட்டில் ஷpயாசுன்னி என்ற அடிப்படை கொள்கை வேறுபாடுகள் இதுவரை இல்லை. ஆனால் இப்பாகுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உணரப்பட்டுள்ளது.

ஆகவே, இன்று பொதுவாக முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் கட்;டவிழ்த்தப்பட்டு;ள்ள நெருக்குதல்களுக்கு அவரவர் பாணியில் தீர்வுகளைத் தேடக்கூடியதொரு அபாயகரமான சூழல் உருவாகியுள்ளதை அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்நாட்டில் எல்லைக்குள் வாழும் முஸ்லிம் சமூகத்தை கிள்ளுக்கீரைகளாக சித்தரிக்கப்பட்டாலும், சர்வதேச குடும்ப அமைப்பைக் கொண்டதொரு சமூக வலையமைப்பைப் பெற்றுள்ள இலங்கை முஸ்லிம்கள் வெளிநாட்டு முஸ்லிம் அமைப்புகளால் வழிநடத்தக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். ஆகவே எமது சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள தலைமைத்துவ இடைவெளியை நிரப்ப தேசிய ரீதியில் மாகாண மாவட்ட, நகர, பிரதேச பிரதிநிதித்துவங்களைக் கொண்டதொரு கட்;;டமைப்பை அவசியமாக உருவாக்க வேண்டியதன் தேவையுணர்ந்து பொறுப்புள்ளவர்கள் செயற்பட முன்வர வேண்டும்.
தற்போதைக்கு இதற்கான அழைப்பை இலங்கை ஜம்இயத்துல் உலமாவே விடுக்க வேண்டுமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :