இலங்கையின் முன்னேற்றத்தில் முஸ்லிம் நாடுகளின் பங்களிப்பு அளப்பரியது. -முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன்


இந்த சாதக நிலைமைகளை சிங்கள மக்களுக்கு விளக்குமாறு முஸ்லிம் கவுன்சில் தலைவர் கோரிக்கை 
முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் வெறுப்புப் பிரச்சாரத்தை முஸ்லிம்களால் தனித்து வெற்றி கொள்ள முடியாது. முஸ்லிம்கள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் நல்லெண்ணத்தை வென்றெடுப்பதன் மூலமே இந்த போராட்டத்தில் வெற்றி கொள்ளலாம் என முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் கூறினார்.
குருநாகல், தெலியாகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசலில் கடந்த ஞாயிறன்று நடத்தப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் மௌலவி சித்திகின் தலைமையில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் அவர் மேலும் கூறியதாவது,
எம்மைச் சார்ந்து வாழும் சிங்களச் சகோதரர்களுக்கு எமது சமூகத்தின் கலாச்சார சமய விழுமியங்களை நாம் சரியாக விளங்கப்படுத்த தவறிவிட்டோம்.
இதனைப் பயன்படுத்த கடும் போக்காளர்கள் எம்மை அவர்களிடமிருந்து தூரப்படுத்த முயற்சிக்கின்றார்கள். எமது சமூகம் தனித்துப் போக முயற்ச்சிக்கின்றது என்ற சந்தேகம் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. 
இந்த நிலையை மாற்ற வேண்டும். நமது ஊர்களில் அயலிலுள்ள விஹாரைகளிலுள்ள பௌத்த தேரர்களுடன் நாம் நெருங்கிய தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து ஒவ்வொரு ஊரிலுமுள்ள பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் அமைப்புக்கள் அக்கறை காட்ட வேண்டும்.
ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மகாநாட்டில் இலங்கைக்கெதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக கூடுதலாக முஸ்லிம் நாடுகள் செயற்பட்டு வருகின்றன. ஓமான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராட்சியம் உட்பட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளன. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாகப் பிரேரணை ஒன்றைக் கூட சமர்ப்பிக்க முயற்சித்தது. 
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நெருக்கடிகள் இருக்கும் போதுகூட முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதனை நாம் சிங்கள சகோதரர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். எமது துரதிஷ்டம் என்னவென்றால் இவற்றுக்கு எமது ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்காமையாகும். இதுபோன்ற சாதகமான விடயங்களை சொல்வதற்கு முஸ்லிம் சமூகத்தின் கையிலும் ஊடகமில்லை.
இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகம் மிகவும் விவேகத்துடனும் மதிநுட்பத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
சுமார் 100 முஸ்லிம் கிராமங்கள் உள்ள குருநாகல் மாவட்டத்தில் ஒரு வலயமைப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வலையமைப்பினை உருவாக்கிக் கொள்வதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். கட்சி மற்றும் பிரதேச ஆத்மீக அமைப்பு வேறுபாடின்றி இங்கே திரண்டு வந்திருக்கின்றார்கள்.
 இந்த நிலையை உருவாக்கியது இந்த கடும்போக்கு அமைப்புக்களே அந்த வகையில் எம்மை விழிக்க வைத்த கடும் போக்கு அமைப்புக்களுக்கு ஒருவகையில் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.
இதற்கு முன்பு இப்படியொரு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தால் இந்தப் பள்ளிவாசலின் அரைவாசியும் நிரம்பியிருக்காது. ஆனால் பள்ளிவாசல் நிரம்பி வெளியிலும் இருக்கின்றார்கள்.
குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார், உயர்கல்வி அமைச்சின் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி, ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் பிரிவு பொறுப்பாளர் மௌலவி முளப்பர் உட்பட பலரும் உரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :