சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்துவது மற்றும் அதனோடு தொடர்பான குற்றச்செயல்களை முறியடிப்பது தொடர்பான 5 ஆவது பாலி செயன்முறை தொடர்பான அமைச்சர் மட்ட செயலமர்வில் கலந்துகொள்வதற்காக நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் திங்கள் கிழமை (01) மாலை இந்தோனேசியாவுக்கு உத்தியோகபூர்வமான விஜயமொன்றை மேற்கொள்ள ஏற்பாடாகியுள்ளது.
நாட்டுக்கு நாடு ஆட்களை சட்டவிரோதமாக கடத்துவதை முறியடிப்பதற்காக 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தோனேசியாவை தளமாகக் கொண்டு பாலி செயன்முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பிராந்தியத்திலும், பிராந்தியத்திற்கு வெளியிலும் உள்ள 43 உலக நாடுகள் இதில் உறுப்புரிமை வகிக்கின்றன.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்களாதேசம், நேபாளம், பூட்டான், பாகிஸ்தான் இந்தியா, மாலைதீவு, வியட்நாம், கொரியா, பிரித்தானியா ஆகியன இவற்றுள் சிலவாகும். அத்துடன் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம், சர்வதேச பொலிஸ், ஆசியான் அமைப்பு என்பனவும் இதில் பங்குற்றுகின்றன
இதன் முக்கிய நோக்கம் சட்டவிரோதமாக அநேகமாக கடல் வழியாக ஆட்களை வேறு நாடுகளுக்கு கடத்துவதையும், களவாகவும், முறைகேடாகவும் பணத்தை நாட்டுக்கு நாடு கொண்டு செல்வதை தடுப்பதும் ஆகும்.
பெரும்பாலும் இவ்வாறான மனிதக் கடத்தல் ஆசியா, பசுபிக் பிராந்தியங்களின் ஊடாக வெகுவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இன்றைய நிலைமையை கருத்தில் கொண்டு அமைச்சர் ஹக்கீம் இரண்டு நாட்களில் தமது உத்தியோக விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளார்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
நீதி அமைச்சு
0 comments :
Post a Comment