(பஹ்மி யூஸூப்)
கடந்த பல வருடங்களாக இலங்கையில் நிவாரணம் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற இரண்டு பிரதான சர்வதேச அமைப்புகளான முஸ்லிம் எய்ட் மற்றும் அட்ரா இன்ரநேசனல், 2013 ஏப்ரல் மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டன. இந்நிகழ்வு இலங்கையின் நீண்ட நிவாரண மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஒரு வரலாற்று மைல் கல்லாகும்.
இவ்விரு சர்வதேச நிவாரண நிறுனங்களும் அவசரகால நிவாரணப் பணிகளில் கூட்டிணைந்து செயற்படுவதென முஸ்லிம் எய்ட் சிறிலங்கா வதிவிடப்பணிப்பாளர் ஜனாப் பைசர் கான் அவர்களும் அட்ரா சிறிலங்காவின் வதிவிடப்பணிப்பாளர் திரு.ஒஸ்கார் டோமொடோ அவர்களும் கைச்சாத்திட்ட நிகழ்வு மிகவும் எளிமையாக அட்ரா அலுவலகத்தில் நடைபெற்றது. மனிதகுல அபிவிருத்தி மற்றும் சமூக கலாசார தளங்களில் முன்னேற்றங்களைக் கொண்டு வரும் நோக்குடன் பல்வேறுபட்ட செயற்பாடுகளி;ல் ஈடுபடுவதென்பது இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பரந்த இலக்குகளாகும்.
மனிதகுல மேம்பாட்டை ஒரே குறிக்கோளாகக் கொண்ட அமைப்புகளுடன் கூட்டிணைந்து செயற்படுவதை நோக்கி முஸ்லிம் எய்ட் சிறிலங்கா அதன் ஆரம்பகாலம் தொடக்கம் தனது நேசக்கரத்தினை நீட்டி வந்துள்ளது. குறிப்பாக 2006ம், 2007ம் ஆண்டுகளில் அம்கோர் எனப்படும் கிறித்தவமத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட உலகில் செல்வாக்கு மிக்க சர்வதேச நிவார அமைப்புடன் முஸ்லிம் எய்ட் கூட்டிணைந்து தொடர்ச்சியாக ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலம் செயற்பட்டது. இதன்போது கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையும் அனுபவங்களும் இவ்விரண்டு நிவார அமைப்புகளின் தாய் அமைப்புகளும் லண்டன் மாநகரில் வரலாற்றுப் புகழ்மிக்க உடன்படிக்கையில் 2007ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் கைச்சாத்திட்டன. உலகு தழுவிய அளவில் வறுமைக்கு எதிராகவும் சமாதானத்தை நிலைநாட்டவும் கூட்டிணைந்து செயற்படுவது என்பது அவ்வுடன்படிக்கையாகும்.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு 1985ம் ஆண்டு தொடக்கம் 60 மேற்பட்ட நாடுகளில் தனது நிகழ்ச்சித் திட்டங்களை இன, மத, பாலின, தேசியம் என்ற எந்தவித பாகுபாடுமின்றி முஸ்லிம் எய்ட் முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறே. அட்ரா நிறுவனம் 1994ம் தொடக்கம் இலங்கையில் நிவாரணம் மற்றும் சமூக அபிவிருத்திப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன. அட்ரா இன்ரர் நேசனல் எனப்படும் வலைப்பின்னல் அமைப்பு 25 நாடுகளில் கிளை அமைப்புகளைக் கொண்டு 125 நாடுகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
ஒரு சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்விரு அமைப்புகளும் இணைந்து இருபத்தி ஐந்து இலட்சம் ரூபா (2,500,000) பெறுமதியான உணவல்லாத பொருட்களைக் கொண்ட பொதிகளை உடனடி நிவாரணமாக வழங்கியிருந்தன. வேறுபட்ட இன, மத, கலாசாரங்களுக்கிடையில் பதட்டநிலைமை நிலவும் இன்றைய காலகட்டத்தில் இருவேறு நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்ற நிறுவனங்களாக இருக்கின்றபோதிலும், மனிதகுலத்திற்குச் சேவை செய்வதற்கென அவை ஒன்றுபட முடியும் என்பதை முஸ்லிம் எய்ட், அட்ரா நிறுவனங்கள் நடைமுறையில் எடுத்துக் காட்டியுள்ளன.
0 comments :
Post a Comment