மத்தளயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையமானது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நூதனசாலையாக மாற்றமடையுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ராஜகிரியவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; மத்தளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தால் இன்று வன ஜீவராசிகளின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வன விலங்குகள் மற்றும் குருவிகளுக்கு சுதந்திரமாக தமது வாழ்க்கையை முன்னெடுக்க முடியாதுள்ளது. இந்நிலையில் குறித்த விமான நிலையத்தில் தங்கும் குருவிகளையும் வன விலங்குகளையும் விரட்டுவதற்கு பட்டாசு கொளுத்தப்படுகின்றது.
அரசாங்கம் எவ்வித முன் யோசனையும் இல்லாது இதனை நிர்மாணித்துள்ளது.இவ்வாறே ஹம்பாந்தோட்டையில் உள்ள சர்வதேச மைதானத்திலும் மின்விளக்குகள் ஒளிராமையால் அண்மையில் அங்கு இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒரு மணி நேரம் தடைப்பட்டது.
அரசாங்கம் மக்களுக்கு மாயையை தோற்றுவித்துள்ளது. எதிர்வரும் எமது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் மத்தள விமான நிலையம் நூதனசாலையாக மற்றமடைவதில் எவ்வித கருத்திற்கும் இடமில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment