அரசுடன் இணைந்துள்ள முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்களும் அமைச்சர்களும் வெளியேற வேண்டுமா? என்ற சர்ச்சைகளை அடிக்கடி நாம் காண்கிறோம். வாசிக்கின்றோம். எனவே அது பற்றி சற்று அலசி ஆராய்வதன் மூலம் எமது நிலைமைகளை நாம் நாடி பிடித்துப் பார்க்க முடியும்.
எனவே இது விடயமாக நாம் அவதானித்த அறிந்து கொண்ட அல்லது கேட்டறிந்த விடயங்களை ஓரளவு தொகுத்துத் தரவிரும்புகிறோம். அத்துடன் அவர்கர்களது விமர்சனங்களையும் சுருக்கமாக எதிர்பார்க்கிறோம்.
பொதுவாக அரசில் இனைந்திருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள் அரசிலிருந்து வெளியேற வேண்டுமா? என ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் ‘ஆம்’ என்ற முடிவு பெறப்படும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் எமது பிரச்சினைகளை தம் பிரச்சினையாக தலைமேல் தாங்கிக் கொண்ட சமூக ஆர்வலர்களாகவும் சமூக அமைப்புக்களில் உயர் பதவிகளையும் வகிப்பவர்கள் அல்லது சமுக ரீதியான வீ.ஐ.பீ என்று சொல்லக் கூடிய ஒரு சிலரிடம் நாம் அபிப்பிராயம் கேட்டபோது அவர்கள் சொன்ன கருத்து ஒரு சிலருக்கு கசப்பாக இருந்ததுடன் எமக்கும் வியப்பாக இருந்தது.
அதன் சுருக்கம் ‘வெளியேறக் கூடாது. அரசு வெளியேற்றினால் பரவாயில்லை. அது வரை உள்ளிருந்து குரல் கொடுக்கவேண்டும்’என்பது. இதற்கு ஒருசிலர் ஒரு திருத்தத்தையும் சேர்த்து வழங்கினர். வெளியேறத் தேவையில்லை என்பதை காரணமாக வைத்து ‘ஆமா சாமி’ போடக்கூடாது. எமது சமூகத்தின் குரல் பிரதி பலிக்கவேண்டும். அவர்கள் சமூகத்தின் சார்பாகவே அனுப்பப்பட்டனர். வெளியேறி எம்மை நட்டாற்றில் கைவிடுவதற்கு அல்ல. எமது குரல் ஒலித்தால் போதும். அதற்கு எதிரணியில் இருப்பதை விட அரச அணியில் இருப்பது கூடுதல் அணுகூலமானது என்றனர்.
ஏனெனில் ஒரு ‘சிறு கூட்டம்..’ என்று சொல்பவர்கள் 100 சதவீதம் பெரும்பான்மையினரின் பாராளுமன்றம் ஒன்றே இருக்க வேண்டும் என நினைக்கின்றனர் பெரும்பான்மையினர் மட்டும் உள்ள அமைச்சரவை பெரும்பான்மையினரின் நாடு, கலாச்சாரம், மொழி, வர்த்தகம், வியாபாரம்… என்று அடுக்கிக் கொண்டு போகும் போது அவர்களுக்கு இது சாதகமாகி விடும். அதனையே அவர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்க முடியாது. ஹலால் கடையடைப்பு என்று பலவற்றில் அவர்கள் எதிர் பார்த்தது நடக்க வில்லை. நாம் பலவருடங்களுக்கு முன்பு இரண்டு கப்பல்களில் கொண்டு வந்து ஒழித்து வைத்துள்ளவை என்று பொய்ப் பிரசாரம் செய்யும் பொருட்களை வெளியே எடுத்துக் கொண்டு வருவோம் என நினைத்தனர். நாம் மாற்று வழியின்றி அமைதி காப்பது அவர்களுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வெளியேறும் விடயத்திலும் அவர்கள் எதிர்பார்ப்பது நடக்கக் கூடாது என்றனர்.
கிழக்கில் நூறு சதவீதம் ஹர்த்தால். தெற்கில் நூறு சதவீதம் கடை திறப்பு. ஆனால் தெற்கில் மூட வேண்டும் என எதிர்பார்த்தனர். அதனை நிறந்தரமாகவே மூடி விட அவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். சில இடங்களில் முஸ்லிம்கள் அறிவிப்பது போலும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் சவால் விடுவது போலும் போஸ்டர்களை ஒட்டிய போதும் அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. ஆஸாத் சாலி முஜீபுர் றஹ்மான் போன்றவர்களது கோரிக்கை ஏற்றார்களா? என்பதும் அவர்களுக்குத் தெரியாது. ஏற்காமல் ஒதுக்கி விட்டார்களா? என்பதும் தெரியாது. ஒரு மயக்கம். அதேபோல் கிழக்கில் அரசியல் வாதிகள் சொன்னதைக் கேட்கவில்லை. தெற்கில் கேட்டார்கள். இது என்ன சமூகம்டா..? அவர்களுக்கு ஒன்றும் புரிய வில்லை.
எனவே அதே விதம் நாம் ஆளுக்கு முந்தி வெளியேறக் கூடாது என்பது ஒருசிலர் கருத்து. கமநெகும, ஜாத்திக சவிய, திவி நெகும போன்ற பல திட்டங்களில் தமது ஆதரவாளர்களுக்கு போய்ச்சேரும் வகையில் ஆளும் தரப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. (இது உறுதியான ஆட்சிக்கு ஒரு காரணமாக அமைந்ததுடன் எதிரணிகள் துண்டங்களாகப் பிரியவும் வழிசமைத்தது. அதேபோல் திட்டமிட்டு பிரித்தாளப் படும் பொறிமுறைக்கும் மேற்படி அணுகு முறை இலகு படுத்தியது) இது போன்ற இன்னும் பல விடயங்களுக்கு ஆட்சியாளர்களுடன் இருக்காது வெளியேறி விட்டால் அவர்களுக்கே சாதக மாகி விடும் என்று இன்னொருவர் தமது கருத்தைத் தெரிவித்தார்.
அதைவிடப் பயங்கரம் பூணைக்கு மணிகட்டப் புரப்பட்ட எலி பூணையிடம் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான். மற்ற எலிகள் எல்லாம் ஓடிப் போய் இன்னும் வசதியாகக் கூத்துப் போடமுடியுமாம். இது எமது சமூகத்தை அண்மையில் பீடித்துள்ள புதிய நோய் என்று ஒருவர் தெரிவித்தார்.
இன்னொருவர் கருத்துப்படி வடக்கு கிழக்கில் நாம் சிறுபான்மையல்ல. ஆனால் அதற்கு வெளியே சிறுபான்மை. எனவே நாம் எடுக்கும் முடிவுகள் இருசாராருக்கும் திருப்தி அளிக்க வேண்டும். சிதறி வாழும் முஸ்லிமகளின் எண்ணிக்கையே அதிகம். அவர்கள் அடிக்கடி பெரும்பான்மையின் தயவை நாடவேண்டியுள்ளது. இன்றைக்கு வெளியேறி விட்டு நாளைக்கு அவர்களிடம் சென்றால் அவர்கள் கூறும் பதில் தெரியும் தானே. இது இதற்கு முன்னரும் தெற்கிலுள்ளவர்களுக்கு நடந்தது.
இன்னொருவர் கருத்துப்படி பழைய அரசியல் அமைப்புப் படி (1977 அல்லது அதற்கு முன் உள்ளவை) பாரளமன்றத்தில் வெற்றிடம் ஏற்பட்டால் புதிதாக இடைத் தேர்தல் மூன்று மாதங்களில் வைக்க வேண்டும். அப்படியான ஒரு நிலை இருக்குமாயின் எல்லோரும் அல்லது மாறி மாறி இராஜிநாமாச் செய்து பின்னர் இடைத் தேர்தலில் போட்டி இட்டு எமது சக்தியைக் காட்ட முடியும். இது இதற்கு முன்னரும் நடந்துள்ளது. ஆனால் தற்போதைய அரசியல் அமைப்புப் படி இடைத் தேர்தல் கிடையாது. எனவே கட்சி நியமிக்கும் புதியவருக்கே இடம் வழங்கப் படும். அப்படி கட்சி நியமிப்பது என்பது சில இடங்களில் பேரினக் கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களது சின்னத்தில் போட்டியிட்டதன் காரணமாக நீதிமன்றம் ஏறி இறங்க வேண்டி வரும். அதற்கிடையில் ஆட்சி காலம் முடிவடைந்து விடும். பெஷன்பக் தாக்குதல் வழக்கு போன்று குறுகிய நேரத்தில் முடிவுகாண முடியாது. இருபது -20 ஓவர் போட்டியல்ல. டெஸ்ட் போட்டியில் முடிவுகாண ஐந்து நாள் காத்திருந்தும் எதிர்பார்த்த முடிவு கிடைக்காது. வெற்றி தோல்வியை காலம் தீர்மானிக்ககும். அதுபோல் இதுவும் நடக்கலாம்.
இன்னொரு உலமாவின் கருத்துப்படி சிறுபான்மையினருக்கென்று தனியான சட்டப் பிரிவுகள் தொகுக்கப் படவேண்டிய காலம் வந்துள்ளது. ஏனென்றால் உதைபியா உடன் படிக்கையோ மதீனாவிற்கு மேற்கொண்ட ஹிஜ்ரத்தோ அல்லது அபூதாலிப் பள்ளத்தாக்கில் தடுத்து வைத்திருந்த போது மேற்கொண்ட காரியமோ பயந்தான் கொள்ளித் தனம் என யாரும் கூறமுடியாது. ஆனால் பொறுமையின் மூலம் அடையப் பெற்ற வெற்றி. அதேபோல் சூரத்துல் கஃப்பை ஆராய்ந்து பார்த்தால் குகைவாசிகள் சிறுபான்மையினராக இருந்தனர். அவர்கள் காபிர்களை எதிர்த்து போராடி இருந்தால் அதன் பின் ஏற்பட்ட இஸ்லாமிய மயமாகுதல் நடைபெற்றிருக்குமா? அவர்கள் ஓடி ஒழிந்தது பின்னர் 300 வருட உறக்கத்தின் பின் இஸ்லாத்திற்கு வெற்றியைத் தேடித்தரக் காரணமானது.
அதேபோல் தாயிப் நகர வாசிகளை நபி(ஸல்) மன்னித்தமையால் அவர்கள் அழிக்கப்படவில்லை. ஆனால் பிற்பட்ட காலத்தில் அவர்கள் முழுமையாகவோ பகுதியாகவோ இஸ்லாத்தில் நுழைய காரணமானது. இது நபி(ஸல்) காட்டித் தந்த ஒரு பொறுமையான வழிமுறையாகும் என்றார்.
இன்னொரு உலமாவின் கூற்றுப்படி மூஸா நபியின் சரித்திரத்தில் அவர் கொல்லப்படக் கூடிய சூழ் நிலை ஏற்பட்ட போது உடனே அரச மாளிகையை விட்டு வெளியேறினார். ஆனால் அதற்கான சூழலை அல்லது தனக்கு சார்பான இரகசிய குழு ஒன்றை பிர்அவுனின் மாளிகையில் விட்டு விட்டுத்தான் வெளியேறினார்கள்.
அதுபோல் எமது அரசியல் வாதிகள் வெளியேறுவதாயின் அதற்காகப் பேராடும் ஒரு இரகசிய அணி உள்ளே இருக்கவேண்டும். இதற்கு முன்பிருந்த பாராளுமன்றங்களில் அப்படி ஒருவர் குரல் கொடுக்க அவருடைய கோரிக்கையை சாதகமாக்க மற்றொரு குழு பாராளுமன்றத்தில் இருந்த சந்தர்ப்பங்கள் உண்டு. இன்று அப்படியான நிலையில்லை. அப்படி எவராவது வெளியேறி விட்டால் நான்தான் ராஜா. நான்தான் முஸ்லிம்களின் ஏக தலைவன் எனக் கூறை மீது ஏறி கொக்கரிப்பர். ‘பள்ளிகள் உடைக்கப் பட வில்லை. பெஷன் பக் போன்ற நிறுவனங்களை முஸ்லிம்கள் தான் தாக்கிவிட்டு வழக்கை மீளப் பெற்று விட்டார்கள்’ என யாரவது தப்பித் தவறி அறிக்கை விட்டால் அதற்கு பாராளுமன்றத்தில் வைத்து கைதட்டுவார்கள் என்றார்.
அதே போல் தாக்கப்பட்டது பள்ளி அல்ல. அது சியாரம் என்று கூறினார்கள். தென்னை மரத்தில் ஏறி புல்லு வெட்டச் சென்றவனுக்கும் கீழே இறங்கும் போது சொல்வதற்கு ஒரு காரணம் இருந்தது போல் காரணம் சொல்பவர்கள் எம்மில் உள்ளனர். அப்படி யாராவது அமைச்சராக இருந்து வெளியேற முற்பட்டால் கோள் சொல்லி தமது கோணை உயர்த்திவைக்க பலர் இருக்கின்றனர். போட்டி போட்டுக் கொண்டு முழு அமைச்சராகி சுகபோகம் அனுபவித்து தனது பிள்ளை பேரப்பிள்ளை கொள்ளுப் பேரப் பிள்ளை… என்று பரம்பரைக்கே சொத்து சேர்க்க பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். குர்ஆனை (அல்லாஹ்வின் சிந்தனையை) எடுத்துச் செல்ல வேண்டிய கரங்களில் ‘மனிதர்களின்….சிந்தனையை’ உலகெல்லாம் எடுத்துச் செல்லும் ஒரு சிலரும் எமது புத்தி ஜீவிகள் பட்டியலில் இருக்கிறார்கள். குட்டிக் குட்டித் தீவுகள் கொண்ட மக்களுக்கு கொடுத்த அந்தப் பிரசுரத்தில் எமக்கொன்று கிடைக்காதா? எனப் பலர் கேட்கின்றனர். எனவே வெளியேறுவது பொருத்தமல்ல என்று கூறுவோரும் உண்டு.
இன்னொருவர் கருத்துப்படி வெளியே வந்து விட்டால் தன்மானமுள்ளவனால் உள்ளே போக முடியாது. ஆனால் உள்ளே இருப்பவரால் தன்மானத்துடன் வெளிவரமுடியும். ஆனால் அவர்கள் தன்மானம் கிழக்கு தேர்தலுடனும் தம்புள்ள பள்ளியுடனும் முடிந்து விட்டது என்றும் கூறுகின்றனர்.
எது எப்டியானாலும் பொறுமையாக இருந்து நடப்பதை அவதானிப்பதே பொருத்மென்று ஒரு அனுபவசாலி சொன்னார். உலமா சபையின் வழிகாட்டலில் நாம் அணிதிரள வேண்டும். ஏனென்றால் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைமை வரும்வரைக்கும் தற்காலிகமாவது அதனைச் செய்ய வேண்டும். இது தவிர வேறு எந்த வகையில் ஒன்றிணைக்க முற்பட்டாலும் ஏற்கனவே பதிந்துள்ள கருத்து முன்னோங்குமாம். அது அரபு வசந்தமகாது. ஆனால் அந்தப் பயத்தை அது எதிரிகளுக்கு ஏற்படுத்துமாம்.
இன்னொருவர் கருத்துப்படி உலமா சபையும் ஒட்டிக் கொண்டிருக்கும் அரசியல் வாதிகளும் ஒருவகை மறைமுக நிர்பந்தம் காரணமாக அவ்வாறு அரசை ஆதரிப்பதாகவும் நிர்பந்தம் என்பதால் அதை மீறினால் விபரீதம் ஏற்படும் என்றும் எச்சரிப்பது போல் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக எமது ஆயுளை பயன் படுத்துவது முக்கியம் என்றார்.
இன்னொருவர் கருத்துப் படி பேரின சக்திகள் சொல்லும் ஒரு சில விடயங்களில் அவர்கள் சார்பாக உண்மை இருக்கிறது. ஆனால் பொய்களை இட்டுக்கட்டியும் ஒருவரின் தவறை முழுசமூகத்திற்கும் பொதுமைப் படுத்துவதே பிரச்சினை என்றார். சற்று தெளிவாகக் கூறச் சொன்னோம். அவர் சொன்ன காரணங்கள் ஓரளவு நியாயமாக எமக்குப்ட்டது. விரிவஞ்சி தவிர்க்க வேண்டியுள்ளது.
உதாரணத்திற்கு பேரின யுவதிகள் வேலைக்காக வெளியே வருகிறார்கள். அவர்கள் மீண்டும் வீடு திரும்பும் வரை நடக்கின்ற சகல பிரச்சினைகளுக்கும் எமது சமூகம் மீது பொறுப்புச் சாட்டுவதைக் குறிப்பிட்டார்.. அது எமது விடயமன்று. இதைப் போய் முஸ்லிம் வர்த்தகர்களிடம் வேலைசெய்யும் யுவதிகளுக்கு இப்படி நடந்தது அப்படி நடந்தது என்று எம்மீது விரலை நீட்ட முடியாது. பனமரத்தின் கீழ் இருந்து பால் குடிக்காமல் பசுமாட்டின் பக்கத்தில் போய் மது அருந்தி இருக்கலாம். அதை பால் என்று நினைத்தாலும் குடித்தவனுக்கு போதை ஏறத்தானே செய்யும். இப்படி பல உதாரணங்களைக் கூறினர். அதற்கு அவர்களது காலச்சாரத்தின் தாக்கமே தவிர நாம் முழுக்காரணமுமல்ல என்றார்.
இது போல் இன்னும் பல விடயங்களை எடுத்துக்கொண்டால் அவர்களிடத்தில் தடை செய்ய வேண்டியவை நிறைய உண்டு. அதற்கு இஸ்லாம்தான் தீர்வு. அதனை அறிந்த சில சிங்கள யுவதிகள் கவரப்பட்டு அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டியதால் அவர்களில் சிலர் இஸ்லாத்தில் புகுந்து உயர் நிலையில் வாழ்கின்றனர். இதனைக் கண்ணுற்று தாமும் அவ்வாறு செய்தால் என்ன என்று எம்மை நோக்கி அவர்களில் ஒரு அலை அடிக்க ஆரம்பித்துள்ளது. இது விடயமாக அவர்களது சமூகம் கவலைப்படத்தான் செய்யும். அதனை தடுக்க முட்படுவார்கள். ஆனால் அடுத்தவனை குறை கூறி அவனை இழிவு படுத்துவது அதற்கு தீர்வாகாது.
எனவே இப்படியான சில்லறைப் பிரச்சினைகளை நாம் பெரிது படுத்தி வெளியேறினால் அது காத்திரமான முடிவாகாது என்ற சாராரும் உண்டு.
முஸ்லிம்களுடன் இணைந்து வாழும் சிங்களப் பகுதிகளில் சிங்கள யுவதிகள் இப்பக்கம் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உண்மையும் இல்லாமல் இல்லை.
இதுபோலவே ஏனையவைகளையும் நியாயமாக ஆராயவேண்டியுள்ளது. எனவே இதற்குப் பயந்து நாம் வெளியேறத் தேவையில்லை. நியாயமான பதிலை எத்திவைக்க எமது பிரதி நிதித்துவம் இருக்கத்தான் வேண்டும். அவர்கள் ஒட்டி இருந்தால் பரவாயில்லை. ஆனால் வெட்டிப் பேசவேண்டும் என்பதே அனேகர் கருத்தாகும். அதனை விட ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் சிறிய காலத்திற்கு ஒட்டிக் கொண்டிருக்கச் சொல்லி நாம் பின்வரும் விடயத்தையும் கருத்திற் கொண்டு பொறுமையாக இருந்து அடுத்த தேர்தலில் அப்படியானவர்களுக்கு ஒருபாடம் புகட்ட முடியும் என்றும் ஒருவர் எம்மிடம் கூறினார்.
இன்று இலங்கையில் நடப்பது முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு பாரிய திட்டமிட்ட சதியாகும். ஒரு முஸ்லிமான ஆண் அல்லது பெண் விடும் ஒவ்வொரு மூச்சும் கூட சமூகத்தையே பாதிக்கச் செய்கிறது. அது சாதகமாகவோ பாதகமாகவோ இருக்கலாம். இவ்வாறான ஒரு சூழலில் நாங்கள் அவசரப்ப்ட்டு எவ்வித திடீர் தீர்மானத்தையும் எடுத்துவிடக் கூடாது. அதே போல் முன்பின் சிந்திக்காமல் கருத்துக்களை எழுத்து மூலமோ வாய் மூலமோ கொட்டிவிடக் கூடாது. நாங்கள வெளியிடும் ஒவ்வொரு வார்த்தையையும் சிந்தித்தே வெளியிட வேண்டுன். அதே போல் நாங்கள் ஏதும் எதிர்ப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதனை சமூகத்தில் உள்ள எல்லாத் தரப்பினறுடனும் கலந்தாலோசித்தே மேற்கொள்ள வேண்டும். ஏன் என்றால் நாட்டின் ஒரு பகுதிக்கு பொருந்துவது மற்றப் பகுதிக்கு பொருந்தாமலும் ;இருக்கும். உதாரணத்திற்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்திற்கு பொருந்துவது முஸ்லிம்கள் ஆங்காங்கே சிதறி வாழும் ஏனைய பகுதிகளுக்கு பொருந்தாமலும் இருக்கலாம் எனவே இவைகளை பற்றியும் சிந்தப்பது இன்றைய தேவையாகும். எனலே என்ன முடிவு எடுக்கப்பட்டாலும் சமூகத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றனர். இப்படி பலரும் பலவிதமாகக் கூறினர்.
எனவே நீண்ட தேடலின் பின்பே முடிவு மேற்கொள்ளப்பட வேண்டும். இருபதுக்கு 20 ஓவர் போட்டியாக அமைந்து விடக் கூடாது. எனவே டெஸ்ட் போட்டியாக சற்று நிதாமாக தடுத்து ஆடவேண்டியுள்ளது. சந்தர்ப்பம வரும்போதுமட்டும் சிக்ஸ் அடித்தால் போதும. பாய்ந்து பாய்நது சிக்ஸ் அடிக்கத் தேவையில். ஒற்றை ஓட்டங்களாலும் உதிரிகளாலும் அந்த 6 ஓட்ட இலக்கை நிதானமாக இருந்து அடையலாம் என்பதே அனேகர் கருத்து. ஆனால் இது ஒட்டிக் கொண்டு சுகபோகம் அனுபவிக்க காரணமாகக் கூடாது.KI
0 comments :
Post a Comment