எஸ்.எல். மன்சூர்
நூலாய்வு – விமர்சனம்
நூலின் பெயர் : தோட்டுப்பாய் மூத்தம்மா(குறுங்காவியம்)
நூலாசிரியர் : பாலமுனை பாறுக்
வெளியீடு : பர்ஹாத் வெளியீட்டகம் -பாலமுனை
விலை : ரூபா 200
ஆங்கில சிந்னையாளரான வில்சன் 'உணர்ச்சிகளுக்கு உருகொடுக்கும் அறிவு வடிவமே கவிதை' என்று கூறுகின்றார். இவ்வாறு பார்க்கின்றபோது பாலமுனை பாறுக் என்கிற தென்கிழக்கின் முத்தான கவிஞன் தனக்குள் இருக்கின்ற, தான்வாழுகின்ற பிரதேசத்தில் காண்கின்ற, தன்னால் அனுபவித்த, தன்முன்னால் நடைபெற்ற, தன் நிஜவாழ்வில் ஏற்பட்ட வாழ்வின் சஞ்சலங்களை, பண்பாட்டுக் கோலங்களை பேச்சுமொழியில் சுவைத்துச் சுவைத்துப் படைத்துள்ள ஒரு பொக்கிஷமான காவியத் தொகுதி இந்த 'தோட்டுப்பாய் மூத்தம்மா' எனும் குறுங்காவியத் தொகுதியாகும்.
கா.மு.ஷெரீப் கூறுவதுபோல 'சாவைத் தவிர்ப்பது கவிதை, சாகாதிருப்பதும் கவிதை' எனும் வரிகளைப்போல பாலமுனை பாறுக் மிகவும் உணர்வுபூர்வமாகவே படைத்துள்ள இக்கவிதைத் தொகுப்புக்கு 18 தலைப்புக்களில் குறுங்காவியம் பொழிந்துள்ளார்.
தோட்டுப்பாய் விரித்த மூத்தம்மா என்கிற கவிதையில் வயதில் மூத்த பெண்ணின் கஷ்டங்களையும், தன்னுடைய வயிற்றுப்பசிக்காக தான் செய்கின்ற வேலைகளையும் அப்பழுக்கற்றவாறு கூறுகின்றார். 'தோட்டுப்பாய் விரித்தாள் மூத்தம்மா, வெட்டும் கட்டும் சூடடிப்புமாய் இருந்து வட்டைக்குள் கதிர்பொறுக்கி களவெட்டி அறுத்தும் நெல்கூட்டி கொண்டுவந்து முடாப்பானைக் குள்ளிட்டு அவித்தாள்! என்கிற கவிதையின் சொற்வடிவங்கள் கிராமத்தின் நடைபெறுகின்ற வயல்சார்ந்த விடயங்களை நினைவுபடுத்துகின்றன.
தான் வாழும் சமூகத்தில் பாலமுனை பாறுக் நிறையவே காலூண்டிய கிராமத்துப் பார்வையிலே கவிதை படைத்திருப்பதும், நவீனத்தை எங்கோ புதைத்துவிடுமளவுக்கு பழமையை தாண்டவமாடவைத்து, புதுத்தெம்பு படைத்துள்ளார். பழமையான விடயங்கள் மங்கிக் கொண்டு மறைந்தே விட்டன. இன்று நினைத்தாலும் உள்ளம்பூரிக்;கின்றது என்பதை தன்கவிதைகளில் இழையோட விடுகின்றார் கவிஞர்.
அந்த வகையில் மரணம், மரண ஊர்வலம், அடக்கஸ்தலம், காதல்வாழ்வு கண்ட கிராமத்து நடையழகு போன்ற கலகலப்பான கிராமத்து நடைமுறைகளை அப்பழுக்கின்றி அழகுடன் நேரில் நின்று பேசுவதுபோல தோட்டுப்பாய் மூத்தமா எனும் நூல் மூலமாக கூறுகின்றார். பருவம் பூத்த பளபப்பு எனும் தலைப்பில் வரும் கவிவரிகள் வைரமாய் மொத்திட்டு நிற்கின்ற சங்கதியை படித்துத்தான் பாருங்களேன். அதாவது 'பன்னிரு வயது, பருவமடைந் தனள் செய்னம்! கண்க ளிரண்டும் துரு துரு வென்று கன்ன மிரண்டும் கொழுக் கட்டை யாகி, பள பள வென்று, மேனி வெளுத்து பொங்கு மிடங்கள் அளவாய்ப் பொங்கி, புடைக்கும் தலங்கள் புடைத்துப் பொலிந்து, பூத்தனளள் செய்னம், புது மெரு கோடு!..' செய்னம் என்கிற பெண்ணின் பருவத்தை வவ்வியமாய் தந்த கவிஞருக்கு ஒருகோடி சபாஷ். இவ்வாறு ஒவ்வொரு கவி வரிகளும் எளிய நடையில் யாத்துள்ளார் பாலமுனை பாறுக்.
தோட்டுப்பாய் மூத்தம்மா என்கிற நூலுக்கான வாழ்த்துரை ஒன்றை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை பேராசிரியரான செ.யோகராசா 'மூஸ்லீம் மக்;களின் பண்பாட்டுக் கோலங்களைப் பதிவு செய்திருக்கும் முற்போக்கான படைப்பு இந்த தோட்டுப்பாய் மூத்தம்மா' என்றும், 'செவ்வியல் அந்தஸ்தைப் பெறும் சிறப்புக்கள் கொண்ட பிரதி இந்த தோட்டுப்பாய் மூத்தம்மா' என்கிறார் பன்னுலாசிரியர் ஏ.பி.எம். இத்ரீஸ். பாலமுனை பாறுக் தனது ஊரின் பெயரை அடைமொழியாகக் கொண்டு 1970களிலிருந்து எழுதிவரும் சிறந்த படைப்பாளி. பதம், சந்தனப்பொய்கை, கொந்தளிப்பு போன்ற படைப்புக்களின் சொந்தக்காரர்; பாலமுனை பாறுக். இவரின் நான்காவது படைப்பு இந்த தோட்டுப்பாய் மூத்தம்மா. முஸ்லீம்களின் பண்பாடு, கலை கலாசாரங்களை முழுக்க முழுக்கப் பிரதிபலிக்கின்ற இக்குறுங்காவியத்திற்கு காப்பியக்கோ டாக்டர் ஜின்னா ஷரிபுத்தீன் குறிப்பூக்கள் என்று தலைப்பிட்டு பாலமுனை பாறுக்கின் படைப்பினை வெகுவாக கவர்ந்த சில விடயங்களை குறிப்பிடுகின்றார். மொத்தத்தில் தோட்டுப்பாய் மூத்தம்மா பழமையை மறக்காத பாத்திரங்களைக் கொண்ட காவியம். இந்நூலின் அட்டைப்படத்தில் தோட்டுப்பாய் ஒன்றில் காய்கின்ற சில பொருள்களுடன், மூத்தம்மாவையும் சேர்த்தே தந்துள்ளார். தலைப்புக்கேற்ற முகப்பு. ஒருமுறை படித்தவர் மீண்டும் ஒருதடவை நிச்சயம் பார்க்கப்படுவாள் தோட்டுப்பாய் மூத்தம்மா!
0 comments :
Post a Comment