இலங்கையில் பூரணமாக ஊடக சுதந்திரம் உள்ளதாகவும் அதனை எவரும் மறுக்க முடியாது எனவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்தார்.
இன்று காலை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற விஷேட பாதுகாப்பு தொடர்பிலான செயலமர்வின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அதற்காக இறுதி யுத்தத்தில் பல இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக அவர்கள் போலியான அறிக்கைகளை முன்வைக்கின்றனர்.
எனினும் இறுதிப்போரின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 7721 மட்டுமே. இதில் விடுதலை புலி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அடங்கும். இத்தொகை ஐ.நா. சபை RDHS மற்றும் சில அரச சார்பற்ற நிறுவனங்களின் புள்ளிவிபரங்களை வைத்து தயாரித்த ஆவணங்களுடன் எந்த விதத்திலும் முரணாகவில்லை.
ஐ.நா. சபையும் இவ்விபரத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் போர் காலத்தில் அமெரிக்காவின் செய்மதிப்படங்களின் அடிப்படையிலான கணிப்பிலும் போர் சூழலில் இறந்தவர்களின் எண்ணிக்கை எமது தரவுகளுக்கு கிட்டியதாகவே உள்ளது.
இவற்றை விட இலங்கை குடிசன மதிப்பீட்டு திணைக்களத்தின் தரவுகளும் இதனை உறுதிசெய்கிறது.
இவ்வாறான உத்தியோகபூர்வ தரவுகள் இருக்க பல இலட்சம் பேர் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுவது அபாண்டமாகும். இவ்வாறான நடவடிக்கைகளின் பின்னால் பிரிவினைவாதிகள் செயற்படுகின்றனர்.
யுத்தம் நிறைவடைந்ததாக கூற முடியாது. பிரிவினைவாதிகளுடனான ஆயுதமற்ற மோதல் தொடரத்தான் செய்கிறது.
புலம் பெயர் அமைப்புக்கள் தொடர்பில் இன்று உலகில் பலரும் கதைக்கின்றனர். இது ஒரு பயங்கரமான சூழலாகும். உலகில் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான நிலைமை உள்ளது. இன்று நாட்டில் எவ்விதமான சிங்கள தமிழ் பிரச்சினையும் இல்லை. இது இலங்கை தொடர்பான பிரச்சினையாகும்.
மாடு பயிரை மேயப்போகின்றதா அல்லது இல்லையா என்பதை அவதானிப்பவர்களுக்கு விரைவாகவே கண்டுகொள்ள முடியும்.
தற்போது இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலொன்று நிலவுவதாகவும் இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லை எனவும் சிலர் சர்வதேச அளவில் பிரச்சாரப்படுத்துகின்றனர். ஒரு சில தனிப்பட்ட அல்லது அறிவீனர்களின் செயற்பாடுகளை வைத்து இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லை என்று கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்தார்.VV
0 comments :
Post a Comment