பத்திரிகை விநியோகப் பணிகளை முடக்கும் நோக்குடனும், பணியாளர்களை அச்சுறுத்தும் வகையிலும், கிளிநொச்சி உதயன் பத்திரிகை அலுவலகம் மீது இனந்தெரியாத கும்பலொன்று இன்று காலை தாக்குதலை நடத்தியிருக்கின்றது.
தாக்குதலில் அலுவலகம் சேதமடைந்திருப்பதுடன் பத்திரிகை விநியோகப் பணிக்காகச் சென்ற இரு பணியாளர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
வழமைபோன்று பத்திரிகை விநியோகப் பணியில் ஈடுபடும் வாகனத்தில் பத்திரிகைகளை எடுத்துச் சென்று யாழ் - கண்டி நெடுஞ்சாலை
, கரடிப்போக்குச் சந்தியி்ல் அமைந்துள்ள உதயன் அலுவலகத்தில் பத்திரிகைகளை இறக்குவதற்கு ஆயத்தமானபோது அலுவலகத்தில் அயலில் உள்ள ஆட்களற்ற கட்டடங்களினுள்ளும், பற்றைகளுக்குள்ளும் மறைந்திருந்து வெளிப்பட்ட காடையர்கள் வாகனத்தில் வந்த பணியாளர்களைக் கொட்டன்களினால் தாக்கிக் காயப்படுத்தியதோடு, அலுவலகத்தினுள்ளே புகுந்து அடித்து நொருக்கியிருக்கின்றனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு பணியாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
அலுவலகம் முற்றாகச் சேதமடைந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அண்மைக்காலமாக பத்திரிகைகள் மக்களின் கைக்குச் செல்வதைத் தடுப்பதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக வன்னிப் பிராந்தியத்தில் திட்டமிட்ட முறையில் விநியோகப் பணிகளைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதோடு, பத்திரிகை விற்பனையாளர்களும் கடும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. news
0 comments :
Post a Comment