நாட்டின் நிலமையும் முஸ்லிம் மக்களுக்கான அரசியல் வாதிகளும் -சிறப்புக்கட்டுரை.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

1983ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூலை கலவரத்தின் பின்னர் இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் பல் வேறு விதத்திலும் துன்பங்களை அனுபவிக்க நேரிட்டது. அரசியல், பொருளாதார, கல்வி, வர்த்தகம், தொழில்வாய்ப்பு, சுதந்திரமான நடமாட்டம், மத விடயங்கள் என்று எல்லா செயற்பாடுகளிலும் கட்டுப்பாடுகளையும் தொந்தரவுகளையும் எதிர்நோக்க வேண்டியேற்பட்டது.

நாடளாவிய ரீதியில் சாதாரண தமிழ் மகன் ஒருவர் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்பட்டது. எல்லாத் தமிழர்களும் பயங்கரவாதி என்ற அடிப்படையில் சந்தேகக் கண் கொண்டு நோக்கும் நிலை ஏற்பட்டது. வடக்கில் விடுதலைப் புலிகளால் அரசாங்கத்திற்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதால் நாட்டில் வாழும் எல்லாத் தமிழர்களையும் பயங்கரவாதிகளாக்கி சந்தேகத்துடனே பார்க்கும் நிலைமை காணப்பட்டு வந்ததை நாம் இன்னும் மறக்கவில்லை.

அரசாங்கம் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்து இந்நாட்டில் அமைதியை ஏற்படுத்திய இத்தகைய ஒருநிலை ஏற்படக் காரணம் இந்நாட்டில் வாழும் பெரும்பான்மைச் சிங்களவர்களும் பேரினவாத தமிழர் எதிர்ப்புச் செயற்பாடுகளுக்கு ஊதுகுழலாக அமைந்த ஊடகங்களும் உதாசீனப் போக்குடைய அரசியல் தலைவர்களுமாவர்.

இது இந்நாட்டின் கடந்த கால கறைபடிந்த வரலாறாகும். இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையை அவதானிக்கையில்

எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கும் அப்படியான ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு முகம் கொடுக்க நேரிடுமா என்ற அச்சம் ஏற்பட்டிருக்கின்றது.

பொதுபல சேனா, சிங்ஹலயே ராவய, ஜாதிக ஹெல உறுமய, ஐக்கிய பிக்குகள் முன்னணி போன்ற அமைப்புக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருவதை நாம் அவதானிக்க முடிகின்றது.

ஆரம்பத்தில் ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட விற்பனை பொருட்களுக்கு எதிராக ஆரம்பித்த எதிர்ப்பு செயற்பாடுகள் இன்று முஸ்லிம்களின் கல்வி, மதவிடயங்கள், ஹஜ் பிரயாணம், மத்ரசாக்கள், அன்றாட மத செயற்பாடுகள், இஸ்லாமிய உடை அணிந்த நிலையில் முஸ்லிம் பெண்களின் வெளி நடமாட்டம், வக்ப் சட்டங்கள், இஸ்லாமிய கலாசார விவகாரங்கள் என்று அனைத்திலும் இந்த பௌத்த தீவிரவாத அமைப்புகள் தலையிட்டு இடையூறு உண்டு பண்ணும் அளவிற்கு உக்கிரமடைந்து விட்டன. அவர்களின் வேண்டுதலின் அடிப்படையில் அந்த அமைப்புக்களின் கோரிக்கைகளின் பிரகாரம் முஸ்லிம்களும் அஞ்சி ஒதுங்கிப்போனால் 1200

வருடகால வரலாற்றைக் கொண்ட பேசா மடந்தைகளாக பௌத்தர்களுக்கு அஞ்சி வாழவேண்டிய ஒரு நிலை ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகங்களுக்கும் இடமே இல்லை.

இந்த தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் இவ்வாறு தீவிரமடைந்து செல்கையில் அரசாங்கம் மௌனம் சாதிப்பதும் இந்த அமைப்புகளின் செயற்பாடுகளுக்கு அரச அங்கீகாரம் வழங்கப்படுகின்றதா? என்ற சந்தேகத்தை முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலைமை தொடருமானால் இந்நாட்டில் முஸ்லிம்களது எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதை நாம் சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றோம்.

இந்நிலையில் இந்நாட்டில் வாழும் புத்திஜீவிகளது பொறுப்பு எத்தகையது என்று சிந்தித்தால் அவர்கள் இவ்வாறானதொரு நிலையில் மௌனம் சாதித்தால் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்கு சமமானதாக அமைந்துள்ளது. முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற இன்றைய மிக மோசமான நிலைமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஜே.வி.பி., சோசலிச கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஐ.தே.க. வின் ஓரிரு பிரதிநிதிகள் அவர்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இத்தகை செயற்பாடுகள் திட்டமிட்ட அடிப்படையிலா முஸ்லிம்களுக்கு எதிரான இன ஒதுக்கல் என்று அவர்கள் கண்டித்திருப்பது முஸ்லிம்களுக்கு ஒருவகையில் நிம்மதியளிப்பதாக இருந்தபோதும் பௌத்த தரப்பை சேர்ந்த புத்திஜீவிகள் மற்றும் இந்நாட்டில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் ஆகியோர் வாய்மூடி மௌனிகளாக இருப்பதும் இந்த தீவிரவாத அமைப்புக்கள் முன்னெடுக்கும் இஸ்லாமிய எதிர்ப்பால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மோசமான விளைவுகளைச் சுட்டிக்காட்டி கண்டிக்காமல் இருப்பது முஸ்லிம்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்களை இந்நாட்டின் பெரும்பான்மையினர் அங்கீகரிப்பதில்லை என்பது உண்மை. அவர்கள் மௌனமாக இருப்பது அதனை அங்கீகரிக்கின்றது என்ற உணர்வினையே ஏற்படுத்துகின்றது. எனவேதான் இந்தக் கடும் போக்காளர்களது செயற்பாடுகளை அங்கீகரிக்காதிருக்கும் சக்திகளது குரல் பலமாக ஒலிக்கப்பட வேண்டும் என்று நாம் கூறுகின்றோம்.

முப்பது வருட யுத்தத்தினால் நாம் கண்ட இழப்புக்கள் அழிவுகள் மீண்டும் ஏற்படாதிருப்பதன் மூலம் மட்டுமே இந்த நாடு சுபீட்சத்தைக் காணலாம். எனவே, இலங்கைமீது பற்றுள்ள சகலரும் இந்த கடும் போக்காளர்களது செயற்பாடுகள் குறித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும்.

இந்நாட்டில் வாழும் எல்லா இனங்களுக்கும் அவர்களது மத உரிமைகள் சுதந்திரங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவற்றுக்காக குரல் எழுப்பவும் பூரண உரிமையும் சுதந்திரமும் இருக்கின்ற அதே நேரம் அந்த செயற்பாடுகளால் ஏனைய இனங்களின் சுதந்திரங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.

அவ்வாறே அந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஏனைய இனங்களை தூற்றி இம்சைப்படுத்தவும் கூடாது. இடையூறு, களங்கம் எற்படுத்தும் வகையில் நடந்துகொள்வதையும் அனுமதிக்க முடியாது. முஸ்லிம்களை பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் என்றும் இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கு தூபமிடுபவர்கள் என்றும் பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொதுபலசேனா மும்முரமாக முஸ்லிம் எதிர்ப்பை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றது.

அவர்களுக்கு பக்கபலமாக ஜாதிக ஹெல உருமய, சிங்ஹலயே ராவய ஆகிய அமைப்புக்களும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றதை நாம் அறிந்த இந்நிலையில் அந்த அமைப்பு அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்கின்ற நெருக்கம் எதிர்காலத்தில் அதன் தீவிர முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு அரச அங்கீகாரம் வழங்குவதாக அமையக்கூடாது.

இப்பொழுது முஸ்லிம்களுக்கெதிராக நடக்கின்ற அட்டூழியங்களைக் சட்டதிட்டத்தின் அடிப்படையில் கட்டுப் படுத்த முடியவில்லை என்றால் இந்த நாடு இன்னும் 30, 40 வருடங்களுக்குப் இனவாத தீயினால் எரியூட்டப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதை ஜனாதிபதிக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் சொல்லியிருக்கின்றேன். என்று அகில இலங்கைமக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.

எமது நாட்டின் தேசிய ஒற்றுமையின் அத்திவாரத்தை தோண்டியெடுக்கும் ஒரு நிகழ்வாகவே இன்று முஸ்லிம்களின் 'ஹலால் பறிப்பு' ஆகும். இந்த ஹலால் பறிப்பானது மிகத் தந்திர உபாயத்தடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதை முதலில் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மவர்கள் சிலர் தங்களின் சுய இலாப நோக்கில் இவ்விடயத்தில் உடந்தையாக செயற்பட்டு வருகின்றனர்.

இருந்த போதிலும் முஸ்லிம்கள் அனைவரும் குர்ஆன் மற்றும் நபி சொல்லியும் செய்தும் காட்டிய ஓர் இறைவனை நம்பி நம்பிக்கை கொண்டவர்களாக ஹலால் பறிப்பு தொடர்பில் முஸ்லிம்களாகிய நாம் ஒரு சிறுபான்மை இனத்தில் இருந்து கொண்டு வாழ்ந்து வருவதனால் மிக அமைதியாகவும், இறைவன் மீது நம்பிக்கை வைத்தவர்களாகவும் பொருமை காத்து வருகின்றோம்.

இவ்வியத்தில் இறைவன் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்களாகவும் இது தொடர்பில் இறைவன் நமக்காக ஒரு நன்மையை பிறக் வைத்துள்ளான் என்பது குறித்து நாம் முதலில் சமரசம் செய்து கொள்வோம்.

ஹலால் சர்ச்சை என்பது இவ்வளவு பூதாகரமாகும் என்று ஆரம்பத்தில் யாரும் நினைக்கவில்லை. அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும். எந்த வகையான வேலைத்திட்டங்களை முன்வைப்பது பற்றி நிகழ்ச்சி நிரல்கள் கூட எமது முஸ்லிம் அரசியல் தலைவர்களும் சமூகத் தளத்திலிருந்து இதுவரைக்கும் யாரும் தயார் செய்யவில்லை. 

ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிரான முன்னெடுப்புகளை மிக நீண்ட நாள் வேலைத் திட்டங்களூடாகவும், பலரால் பலமுறை சரி பார்க்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் ஊடாகவும் ஆமை வேகத்தில் தங்களது காய்களை நகர்த்தி முயல் வேகத்தில் செய்து வெற்றியும் பெற்று வருவதை நாம் கண்ணூடகாக கண்டு வருகின்றோம்.

இலங்கை ஜனநாயக நாடு என்பதற்கப்பால் பேரினவாத நாடு எனும் யதார்த்தபூர்வ நிலையை சகலரும் அறிந்து கொள்ள வேண்டும். இப்படியான ஒரு சூழலில் ஹலால் சர்ச்சையை நாங்கள் எப்படி, எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும். என்பதை மிக நுனுக்கமாக சிந்தித்து செயற்படவேண்டும்.

அந்த வகையில் நமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இவ்விடயத்தில் ஒன்று சேர்ந்து எமது சகோதர இனத்துக்கு குறைந்த பட்சம் ஹலால் பற்றிய ஒரு புரிதலை சரியான முறையில் எத்திவைக்க வேண்டும்.

இவ்வாறு எத்திவைக்கும் விடயத்தில் தங்களின் அவதானங்களைச் செலுத்தாமல் எமது முஸ்லிம் தலைவர்களும், தலைமைத்துவமும் சேர்ந்து தங்களின் எதிர்கால அரசியல் பற்றியும் தங்கள் ஆடம்பர வாழ்க்கை பற்றிய சிந்தனையில் தான் இன்றைய முஸ்லிம் அரசியல் வாதிகள் எல்லோரும் தமக்கு வாசியான அறிக்கைகளை விடும் காகித புலிகளாக இருந்து வாருகின்றார்களே தவிர உருப்படியான முயற்சிகள் எதனையும் நடைமுறைபடுத்த முனையவில்லை.

வெள்ளம் அணையைக் கடந்த சென்ற பிறகு விபரிதத்தின் உச்சம் விளங்கியதன் பின்னர் நமது வெறுப்புகளை மற்றவர்கள் மீது திணித்துக் கொண்டிருக்கிறோமே தவிர எதிர்வரும் காலங்களில் வரப்போகும் வினைகள் பற்றி கூடிப்பேசுகிற ஒரு கருத்தியல் வாதமும் நமக்கு தேவையானதை அவரும் இவரும் தான் செய்யவேண்டும் என்ற மிக மோசமான கருத்தியல் தளத்திலிருந்து முஸ்லிம் சமூகம் முதலில் விடுபடவேண்டும்.

நமக்கு தேவையானதை நாம் தான் செய்ய வேண்டும். பேரின சமூகத்தின் பொதுபல சேனா என்பது அவர்களது சமூகம் சார்ந்து யோசிக்க கூடிய நிகழ்ச்சி நிரல்களுடன் அமையப்பெற்ற ஒரு அமைப்பாகும். 

அவ்வமைப்பின் திட்டங்கள் யாவும் முஸ்லிம்களை எவ்வாறு மடக்கலாம், அவர்களின் பொருளாதாரங்களை எவ்வாறு முடக்கலாம் என்ற பல சதிதிட்டங்களை மிக நீண்ட காலமாகத்தீட்டி தற்போது அவர்களால் சதித்திட்ட கருத்தியல் வெளிக்கொணரப்பட்டு வரும் சமகாலமென்றால் அது மிகையாகாது.

இதற்காக அவர்கள் மிக நீண்ட நாட்களாக உழைத்து வந்த சதித்திட்ட வேலைத்திட்டங்களை இன்று பொதுபல சேனா மூலம் தங்களின் காய்களை நகர்த்தி அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்று வருகின்றார்கள்.

ஒரு நாட்டில் எப்போதுமே அனுபவிக்க கூடிய இன ஒற்றுமையை சிவில் சமூகங்களுக்கு ஊடாகத்தான் வெளிக்கொணரலாம். அந்த வகையில் நாம் எல்லோரும் சிவில் சமூகம் எனும் அடிப்படையில் சகோதர இனங்களை பகைத்துக் கொண்டு வாழ முடியாது.

இது ஒரு புறமிருக்க நாம் எமது முஸ்லிம் சமூகத்தை எடுத்துக் கொள்வோமாயின் எமக்குள்ளோ ஒற்றுமையில்லை. நமது முஸ்லிம் அரசியல் தலைவர்களை எடுத்துக்கொள்வோமாயின் அந்தந்த தலைமைத்தும் எல்லாம் தங்களின் நிகழ்கால, எதிர்கால அரசியல் வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி யோசித்தவர்களாகவும், தங்களுக்கு கிடைத்துள்ள சொகுசு, ஆடம்பர வாழ்க்கையை விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லாதவர்களாகவும் வாக்குகளை போட்ட முஸ்லிம் மக்களைப்பற்றி எந்த சிந்தனைகளும் இல்லாதவர்களாகவும், மார்க்க விடயத்தில் எவ்வித அக்கரை கொள்ளாதவர்களாகவும் இன்று இருப்பதை நாம் கண்ணூடாக கண்டு வருகின்றோம்.

பொதுபல சேனா என்ற ஒருவரினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத் திட்டங்களில் ஒன்றையாவது இந்த முஸ்லிம் தலைவர்கள் என்று இருக்கும் அமைச்சர்களான றஊப் ஹக்கீம், அதாஉல்லா, றிசாத் ஆகியோர்கள் செய்து காட்ட முடியுமா? அப்படித்தான் நினைக்க முடியுமா? முடியவே முடியாது.

இவ்வாறு முஸ்லிம் தலைவர்கள் என்ற பெயருக்கும், பதவிக்கும் இருக்கும் தலைவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால் றஊப் ஹக்கீம் அதாஉல்லாவையும், றிசாத்தையும் பற்றி குறை கூறுகின்றார். அதாஉல்லா றஊப் ஹக்கீமையும், றிசாத்தையும் பற்றி குறை கூறுகின்றார். றிசாத் றஊப் ஹக்கீமையும், அதாஉல்லாவையும் குறை கூறுகின்றார்.

இவ்வாறு ஆளுக்கு ஆள் குறை கூறி தங்களின் அறிக்கைகளை ஊடகம் மூலம் வெளியிடுகின்றார்களே தவிர தற்போது முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுவரும் நிலைமையை பற்றி மூன்று பேரும் இவ்விடயத்தில் ஒன்றினைந்து இதற்கு எந்த முறையில் ஒரு சுமுகமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும். என்று சிந்தித்துப் பார்த்து செயற்படுகின்றார்களா? இல்லவே இல்லை.

இவ்வாறு செயற்படும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நமக்கு இன்னும் தேவைதானா? அவர்களின் ஆடம்பர வாழ்க்கையை சொகுசாக கொண்டு செல்ல நமது வாக்குகளை இவர்களுக்கு நாம் இன்னும் அள்ளி வழங்குவதா? என்று முஸ்லிம் மக்களாகிய நாம் நன்கு சிந்திக்க வேண்டும்.

இந்நிலையில் இருக்கும் தலைவர்கள் யதார்த்தபூர்வமான் கருத்தியல் நிலைக்கு மாற முயற்சிக்க வேண்டும். அந்த நிலையை ஏற்படுவதற்கு முஸ்லிம் தலைவர்கள் கட்சி வேறுபாடு பார்க்காமல் மார்க்க விடயங்களில் விட்டுக் கொடுக்காமல் தங்களின் ஒருமித்த கருத்துக்களை முன்வைத்து அதன் மூலம் ஒரு சுமுகமான தீர்வினை பெற்றுக் கொள்ளவும், உங்களை நம்பி வாக்களித்த மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கை முன்வைக்க முதலில் ஒற்றுமை படவேண்டும்.

இன்று எங்களிடையே சமூகப் பிணைப்பு மிக அரிதாகி விட்டது. எங்குமே இல்லாதவாறு முஸ்லிம்களுக்குள் மட்டும்தான் ஒரு வீதிக்கு ஒரு கட்சியும், ஒரு வீதிக்கு ஒரு வேட்பாளரும், ஒரு வீட்டுக்குள் பல வாக்களர்களும் ஏன் ஒரு முஸ்லிம் உம்மாவுக்குள் பல்வேறுபட்ட கொள்கைகளுடன் பல கிளைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் பிள்ளைகளுமாய் (அமைப்புகள்) கருத்து வேற்றுமை எனும் கரையானால் அரிக்கப்பட்டு முஸ்லிம் சமூதாயம் அழிந்து கொண்டிருப்பதை நாம் இன்னும் உணராத மக்களாக இப்போதும் காணப்படுவதை என்னி மனம் வருந்த இன்னும் மனம் வரவில்லையா?

எனவே எமது அரசியல் இடையர்கள் எம்மை வழி நடத்துகிற எமக்கான மதப் பெரியார்கள் என இனி யார் மீதும் நாங்கள் விரல் நீட்டுவதில் உருப்படியான பலனேதுமில்லை. 

எமக்கே நாம் விரல் நீட்டி எமக்குள் புரையோடி போயிருக்கும் மகா பிழைகளை களைவதோடு இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம். இப்பிரார்த்தனைகள் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு நல்லதோர் தீர்வு கிடைக்கும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :