யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பொலன்னறுவை – மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைப் புறத்தை அண்டிய முஸ்லிம் குக் கிராமங்களில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை காண்பதற்காக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரையின் கீழ் அதிகாரிகள் அங்கு சென்று விபரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் அப் பிரதேச மக்களின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிய 120 குடும்பங்களைச் சேர்ந்த திரிகோணமடு மக்கள் அங்கிருந்து தமது இருப்பிடங்கள், காணிகள் என்பவற்றில் இருந்து வெளியேறிய பின்னர் மகாவலி பிரதேசத்தில் குடாபொக்குண என்னும் கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.
அவர்களது முன்னைய காணிகளுக்கு என்ன ஆனது? என்ற கேள்வி எழுந்துள்ளதையடுத்து நீதியமைச்சரின் பணிப்புரையின் கீழ் அதன் பின்னணியையும், தற்போதைய நிலைமையையும் கண்டறியும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் காணிச் சொந்தக்காரர்கள், காணி அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள், அரசாங்க காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வெலிகந்தை பிரதேச சபை மற்றும் வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேனப்புர, கட்டுவன்வில தெற்கு, கிழக்கு, குடாபொக்குன, அத்துகல போன்ற கிராம சேவை பிரிவுகளில் மூவாயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் இன்னும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவது அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உத்தேச காலாவதிப்பு சட்டத்தின் ஊடாக தமது காணிகளை இழந்த பலர் அவற்றை மீளப்பெறும் வாய்ப்பு காணப்படுகிறது. அத்துடன் ஏனைய சட்ட நடவடிக்கைகளுக்கான சந்தர்ப்பமும் உண்டு.
இப் பகுதிகளை உள்ளடக்கி முஸ்லிம் மரண விசாரணை அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கும், தமிழ் மொழியில் கடமையாற்றக் கூடிய பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவரையும், முஸ்லிம் விவாக பதிவாளர் ஒருவரை நியமிப்பதற்கும், காதி நீதவான் ஒருவரை நியமிப்பதற்குமான சாத்தியக்கூறுகளையும் நீதியமைச்சர் அனுப்பி வைத்த குழுவினர் சீர்தூக்கிப் பார்த்துள்ளனர்.
நீதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், அமைச்சரின் பிரத்தியேக அலுவலர் நிஸாம் ஷபீக் ஆகியோர் அடங்கிய குழுவினரே இக் குக்கிராமங்களுக்கு நேரில் சென்று தகவல்களை திரட்டும் பணியில் கவனம் செலுத்தினர்.
பாதிப்புக்குள்ளான மக்களிடமிருந்து உரிய தகவல்களை பெறுவதற்கான படிவங்களும் விநியோகிக்கப்பட்டன.
ஏற்கனவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சை, ஊருகாமம், இருநூறுவில், பாகற்கொடிசேனை, இழுப்படிச்சேனை, கரடியனாறு, ஏறாவூர் போன்ற இடங்களுக்கும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தமது இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி சல்மான் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று குடியிருப்புகளையும், காணிகளையும் இழந்த மக்களின் நிலைமையை ஆராய்ந்துள்ளார்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்.
0 comments :
Post a Comment