(எஸ்.அஷ்ரப்கான்)
இளைஞர்கள் நெறிபிறழ்வானவர்களாக மாறுவதற்கு அதிகாரமுள்ள அரசியல்வாதிகளின்
ஒழுங்கான வழிகாட்டல்கள் இல்லாமையும் பிரதான காரணமாகும் என கல்முனை மாநகர
சபையின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை மாவட்ட இளைஞர்
அணியின் அமைப்பாளருமான ஏ.எச்.எச்.எம். நபார் தெரிவித்தார்.
பல்கலைக்கழகம் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரி மாணவர்கள் கலந்துகொண்ட
முஸ்லிம் இளைஞர்களின் எதிர்கால சுபீட்சத்தை அடைந்துகொள்ளல் என்ற
தொனிப்பொருளில் பொதுக் கூட்டம் அண்மையில் சம்மாந்துறையில் இடம்பெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை மாவட்ட பிரச்சாரச் செயலாளர் ஏ.அப்துஸ்
ஸலாம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு
உரையாற்றிய நபார் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது,
இலங்கையில் இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் இளைஞர்கள் அகிம்சை வழிப்போர்
வீரர்களாக மாறி எமது சமூகத்திற்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
அரசியல்வாதிகள் இளைஞர்களை தேர்தல்காலங்களில் தமது இலக்கை அடைந்து
கொள்வதற்காக பயன்படுத்திவிட்டு அவர்களை நட்டாற்றில் விடுகின்ற நிலையே
பெரும்பாலாக காணப்படுகின்றது. மாறாக இளைஞர்களுக்கு எமது சமூகம் சார்ந்த
இளைஞர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவோ, தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும்
நிலையை உருவாக்கவோ முன்வராமை கவலையளிக்கிறது. இதனால் இளைஞர்கள்
நெறிபிறழ்வானவர்களாக மாறி நாட்டிற்கும், தனது சமூகத்திற்கும்
பிரயோசனமற்றவர்களாக மாறும் அபாயம் இன்று ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இவை மாற்றப்பட வேண்டும்.
சமூதாயத்தின் முதுகெலும்புகளான இளைஞர்களை நெறிப்படுத்தி
வழிப்படுத்துகின்ற பொறுப்பு அரசியல்வாதிகள் முதற்கொண்டு சமூகத்தின்
பல்துறை சார்ந்தவர்களுக்கும் தலையாய கடமையாகும். நாட்டின்
ஆட்சியாளர்களும் இதனை கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.
அந்த அடிப்படையில்தான் நாம் இன்று இளைஞர்களின் தேவைகளை இனம்கண்டு
எங்களால் இயலுமான சேவைகளை செய்து வருகிறோம். இன்று ஐக்கிய
தேசியக்கட்சியில் இளைஞர்களை இணைத்துக்கொள்வதன் மூலமாக எமது
பிரதேசத்திற்கும், நாட்டிற்கும் உகந்த செயற்றிறன் மிக்கவர்களாக எமது
இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். எமது நாட்டை
கட்டியெழுப்ப இளைஞர்கள் என்ற வகையில் எமது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு
வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
0 comments :
Post a Comment