அநுராதபுரம் மல்வத்து லேன் பள்ளிவாசல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று அதிகாலை குறித்த பள்ளிவாசல் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்தும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது.
அத்துடன் கடந்த ஜனவரி 5 ஆம் திகதி குறித்த பள்ளிவாசலைத் தகர்ப்பதற்கு பிக்குகள் உட்பட 150 இற்கும் மேற்பட்டோர் முயற்சித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அநுராதபுரம் கிழக்கு பிரதேச செயலாளர் கலகக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் அப்பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவதற்கு 3 மாத கால அவகாசம் கொடுத்தனர்.
இதேவேளை, குறித்த பள்ளிவாசலை அப்பள்ளிவாயிலிருந்து அகற்றாமல் விட்டால் அநுராதபுரம் நகரில் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாலும் அச் சமய ஸ்தலத்தை எந்நேரத்திலும் தாக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அநுராதபுரம் வலயத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தார்.
இது தொடர்பான விசாரணையின்போது சமயங்களுக்கிடையிலான வன்முறைகள் ஏற்படுத்துவதற்கு பொலிஸார் இடமளிக்கக் கூடாது. எந்தவொரு இயக்கத்துக்கோ மதத்தினருக்கோ சட்டத்தை கையில் எடுத்து செயற்படுத்துவதற்கு உரிமை இல்லை.
குறித்த சமயத்தலம் தொடர்பில் ஏதாவது பிரச்சினை எழுந்தால் அது தொடர்பில் உடனடியாக நீதிமன்றுக்கு அறியத் தருமாறும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
ஆயினும் குறித்த பள்ளிவாசல் மூடப்பட்ட விவகாரம் தொடர்பில் அநுராதபரம் பெரிய பள்ளிவாசல் தலைவர் பெளஸியை தொடர்புகொண்டு கேட்டபோது, அநுராதபுரம் நகரிலுள்ள முஸ்லிம்களின் நலன்கருதியே குறித்த பள்ளிவாசலை தற்காலிகமாக மூடியுள்ளோம்.
எனினும் சமயக் கிரியைகளுக்கான மாற்று நடவடிக்கையினையும் செய்துள்ளோம. இன்று நாட்டிலுள்ள நிலையில் தற்காலிகமாக பள்ளிவாசலை மூடுவது நல்லது எனப் பலரும் அபிப்பிராயம் தெரிவித்தனர் எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment