சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்துவது மற்றும் அதனோடு தொடர்பான குற்றச்செயல்களை முறியடிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு அந் நாட்டின் சார்பில் அதன் இலங்கை உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி, நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் நன்றி தெரிவித்தார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் ரொபின் மூடி நீதியமைச்சர் ஹக்கீமை புதன்கிழமை (10) அவரது அமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைக் கூறினார்.
பெரும்பாலும் இவ்வாறான சட்டவிரோத மனிதக் கடத்தல் ஆசியா, பசுபிக் பிராந்தியங்களின் ஊடாகவே வெகுவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளதாக இச் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது. அத்துடன், சட்ட விரோதமாக கடல் வழியாக பயணிக்கும் நபர்கள் இடை நடுவில் பாரிய ஆபத்துக்களை எதிர்நோக்குவதோடு, உயிரழப்புகளும் ஏற்படுவதாக கூறப்பட்டது.
அண்மையில் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற சட்ட விரோத ஆட்கடத்தல் தொடர்பான 5 ஆவது பாலி செயன்முறை பற்றிய அமைச்சர் மட்ட செயலமர்வின் போது அமைச்சர் ஹக்கீம் தலைமையில் அதில் கலந்து கொண்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழு வழங்கிய ஒத்துழைப்பு குறித்தும் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்கு அவுஸ்திரேலியா முன்வந்திருப்பதையிட்டு இந் நாட்டு அரசாங்கத்தின் சார்பில் அவுஸ்திரேலியத் தூதுவரிடம் அமைச்சர் ஹக்கீம் நன்றி தெரிவித்தார்.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் சட்ட சீர்திருத்தங்களுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவிகளையும், அவற்றிற்கான வளங்களையும் தொடர்ந்தும் வழங்குமென அவுஸ்திரேலியா தூதுவர் குறிப்பிட்ட பொழுது, அண்மையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டங்கள் இரண்டைப் பற்றி அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டி விளக்கமளித்தார்.
ஓரே விதமான குற்றச்செயல்களுக்கு வௌ;வேறு நீதிபதிகள் வித்தியாசமானதும், முரண்பட்டதுமான தீர்ப்புகள் ஊடாக வேறுபட்ட தண்டனைகளை விதிப்பதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு, ஒரேவிதமான குற்றச்செயலுக்கு ஒரே மாதிரியான தண்டனையை வழங்குவதற்காக தண்டனை வழங்கும் கொள்கைச் சட்டமொன்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறிய நீதியமைச்சர், அதன் பயனாக சிறைச்சாலைகளில் நிரம்பி காணப்படும் கைதிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கக் முடியும்; என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பாதிப்புக்குள்ளானோரையும் சாட்சிகாரர்களையும் பாதுகாக்கும் விதத்தில் இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம் தற்பொழுது பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சர் கூறினார்.
நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுவது அவசியம் எனவும் அவுஸ்திரேலியத் தூதுவர் சொன்னார்.
இக் கலந்துரையாடலில் அவுஸ்திரேலிய தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் நடாலியா எயுஎப், அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் அனூஷா முனசிங்க, அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், ஏ. ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அமைச்சின் ஊடகப்பிரிவு.
0 comments :
Post a Comment