பாலஸ்தீன பூமியில் சட்ட விரோத யூதக் குடியிருப்புகள் மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும், அந்நாட்டு மக்களுக்கான அனைத்து உரிமைகளும், அங்கீகாரங்களும் வழங்கப்பட வேண்டுமென்றும் இஸ்லாத்தின் முதலாவது கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸா இஸ்ரேலர்களிடமிருந்து மீட்கப்படுவது அவசியமென்றும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பலஸ்தீன வக்ப் மற்றும் சமய விவகார அமைச்சர் கலாநிதி மஹ்மூத் அல் ஹப்பாஷ் இடம் தெரிவித்தார்.
இங்கு விஜயம் செய்துள்ள பலஸ்தீன அமைச்சருக்கும், இலங்கையின் நீதியமைச்சருக்கும் இடையிலான உரையாடல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (09) முற்பகல் இடம்பெற்ற போதே அவர் இதனைக் கூறினார். இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரும், இங்குள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அமைப்பின் தலைவருமான அன்வர் அல் அகாவும் இச் சந்திப்பில் பங்கேற்றார்.
எதிர்வரும் ஜூன் மாதம் பலஸ்தீனாவில் நடைபெறவுள்ள இஸ்லாமிய மாநாட்டுக்கான அழைப்பை அமைச்சர் ஹக்கீமுக்கு விடுத்த அந் நாட்டு அமைச்சர் அதில் அமைச்சர் ஹக்கீம் கலந்துகொள்வார் என தமது நாடு எதிர்பார்ப்பதாகவும் கூறினார். அத்துடன் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரவேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர் விபரித்தார்.
அமைச்சர் ஹக்கீம் கருத்து தெரிவிக்கும் பொழுது இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இள வயது முதலே பலஸ்தீன மக்களின் தோழராகவும், தீவிர ஆதரவாளராகவும் விளங்குவதாக கூறினார்.
இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் யூதர்களினதும், இஸ்ரவேல் உளவுப் பிரிவான மொஸாடினதும் தலையீடு இருப்பதாக இந் நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
தாம் தலைமைத்துவம் வகிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைக் கொண்ட அரசியல் கட்சியென்றும், கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பேர் உள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தில் முஸ்லிம் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஹக்கீம் விளக்கிக் கூறினார்.
மற்றும் அமைச்சருடன் வருகை தந்துள்ள ஏனைய அதிகாரிகளும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
0 comments :
Post a Comment