(எம்.பைஷல் இஸ்மாயில்)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனைப் பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் விசேட தேவையுடைய சிறுமியின் சடலமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஓட்டமாவடி - காவத்தமுனை பாடசாலை வீதியைச் சேர்ந்த 13 வயதுடைய ஆதம்லெப்பை பர்மிலா என்ற சிறுமியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று மாலை வாழைச்சேனை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் குளிக்கச் செல்வதாக கூறி விட்டு சென்ற இச்சிறுமி சிறிது நேரத்தின் பின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதையடுத்து வாழைச்சேனைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸாரின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமியின் சடலத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து சடலம் வாழைச்சேனை அரச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டு பின்னர் உறவினரின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பணிப் பெண்ணுக்கான பயிற்சியை முடிக்கும் பொருட்டு கொழும்பு சென்ற நிலையில் குறித்த சிறுமி தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment