ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்பதற்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அனுமதிக்கப்பட்டதைக் கண்டித்து இன்று (03) கொழும்பில்
பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கிரிக்கெட் நிறுவன அலுவலகம் முன்பாக ´ராவணா சக்தி´ எனும் அமைப்பைச் சேர்ந்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் நாட்டில் இலங்கை வீரர்கள் விளையாடுவதை அனுமதிக்க முடியாது என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததை அடுத்து, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்கப் போவதில்லை என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்திருந்தது.
எனினும், தமிழ் நாட்டுக்கு மட்டும் செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தலுடன் இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அனுமதித்திருந்தது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இலங்கையை பிளவுபடுத்தும் முயற்சிகளில் தமிழக அரசியல்வாதிகள் ஈடுபடுவதாகவும் இந்திய மத்திய அரசு அதற்குத் துணைபோவதாகவும் கோஷமிட்டனர்.
இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க இலங்கை வீரர்களை அனுமதித்ததன் மூலம் இலங்கை கிரிக்கெட் அமைப்பும், போட்டிகளில் பங்கேற்க சென்றமைக்காக இலங்கை வீரர்கள் சிலரும் தேச துரோக செயலில் ஈடுபட்டுள்ளதாக ராவணா சக்தி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், ஐ.பி.எல் போட்டிகளில் கலந்துகொண்டு திரும்பும் இலங்கை வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment