ஹமீட் சிறாஜ்.
எய்தவன் தன்னோடு இருக்க பொதுபலசேனாவை மட்டும் கண்டிப்பதன் மூலம் அகில இலங்கை. முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்களை பச்சையாகவே ஏமாற்ற முனைகிறது என முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த அரசாங்கத்தின் பின்புலத்தில் உருவாக்கப்பட்டதே பொது பல சேனா என்பது மிகச்சாதாரண அறிவுள்ள எந்த மனிதனாலும் புரிந்து கொள்ள முடியும். அதனை நிரூபிக்கும் வகையில் உலமா சபைக்கும் பொது பல சேனாவுக்குமிடையில் எங்கு வைத்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன? யாரின் அழுத்தத்தினால் உலமா சபை ஹலாலை கைவிட முன் வந்தது என்பதெல்லாம் அனைவரும் அறிந்த இரகசியம்.
இவை அத்தனையும் தமக்கு தெரியாது என்பது போல் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விடுத்து பொது பல சேனாவை மட்டும் கண்டிப்பதன் மூலம் இதன் பின்னணியில் அரசாங்கமோ தாங்களோ இல்லை என முஸ்லிம்களிடம் பிழையாக காட்ட முன் வருகிறது.
அ. இ. மு.காவுக்கு பாராளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எவருமே இதுவரை அரசின் இனவாத செயற்பாடுகளுக்கான சிங்கள அமைப்புக்களுக்கான ஒத்துழைப்பு பற்றி வாய் திறக்கவும் இல்லை, ஒரு வார்த்தையேனும் கண்டிக்கவுமில்லை. இந்த நிலையில் அதன் தலைவா, செயலாளர் போன்றோர் பொது பல சேனாவை மட்டும் கண்டித்து அறிக்கை விடுவதன் மூலம் அரசாங்கத்தை காப்பாற்ற முனைகிறார்கள்.
உண்மையில் இவர்கள் அறிவுள்ளவர்களாகவும், உண்மையாளர்களாகவும் இருந்தால் அம்பை எய்தவர்களையும் சேர்த்து கண்டிக்க வேண்டும். இல்லையாயின் விடயத்தை தெரிந்து கொண்டே உண்மையை மறைத்து முஸ்லிம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றுதான் தெரிகிறது.
உலமா சபையை அரச ஆதரவு பொதுபலசேனா, நரிகள், கள்வர்கள் என கூறிய போது அதற்கு பாராளுமன்றத்தில் பதிலளிக்காத அமைச்சர் ரிசாத் பதியுதீன் வெளியில் வந்து அதனை கண்டித்து அறிக்கை விடுவதை பார்க்கும் போது இந்தளவுக்கு அவரது அதிகாரமும் கட்சியின் தரமும் குறைந்து விட்டதா என்ற கேள்வி எழுகிறது.
புராண கதையில் வரும் கர்ணன் பற்றிய கதையில் கர்ணனை நோக்கி அர்ஜுனன் எய்த அம்பு கர்ணனை தாக்க முடியாத நிலை ஏற்பட்ட போது தேரோட்டிய கன்னன் செய்த சதியே கர்ணனை இலகுவாக அந்த அம்பு தாக்கியதாக படித்துள்ளோம்.
இதே போன்று பொது பல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்புக்களுக்கு அரச ஆதரவு இல்லாதிருந்தால் அவற்றை முஸ்லிம்கள் எப்போதே மிக இலகுவாக முறியடித்திருப்பார்கள். ஆனால் கன்னனின் சதி இலங்கை முஸ்லிம்களின் நெஞ்சை குத்திவிட்டது. இந்தக்கன்னனுக்கு தேரோட்டும் சமூகத் துரோகிகள் கன்னனை விடுத்து அர்ஜுனனை மட்டும் கண்டிக்கும் போலிக்கூத்தின் மூலம் முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள்.
எனவே பொதுபல சேனாவுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அ. இ. முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அல்லது செயலாளரால் ஓர் இறைவன் மீது சத்தியமிட்டு பகிரங்கமாக கூற முடியுமா?
என நாம் அக்கட்சியிடம் சவால் விடுக்கிறோம்.
இந்தச்சவாலை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் சமூகத்தை காட்டிக்கொடுத்ததற்காக உங்களுக்கு கிடைத்தவற்றுடன் நிறத்திக்கொள்ளுங்கள், அப்பாவி முஸ்லிம் சமூகத்தை இனியும் ஏமாற்ற முனைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment