விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை லண்டனிலுள்ள அவர்களின் வழக்கறிஞர் குலசேகரம் கீதார்த்தனன் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பில் அபுதாபிலுள்ள ஐ நா மன்ற அகதிகளுக்கான அமைப்பின் அதிகாரியிடமிருந்து எழுத்துபூர்வமான தகவல் வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
புகலிடம் தேடி வருபவர்களுக்கு அகதி தஞ்சம் அளிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் பாதுகாப்பான இதர நாடுகளிடம் இவர்களை அகதிகளாக எடுக்கும்படி தாங்கள் மீண்டும் விண்ணபிக்கப் போவதாகவும் ஐ நா மன்ற அகதிகளுக்கான அமைப்பின் அதிகாரி தமது பதிலில் தெவித்துள்ளதாகவும் கீதார்த்தனன் கூறினார்.
அந்த 19 பேருக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வேறு எதாவது அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாரா என்பதை தமது அமைப்பு பிரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த 19 பேரில் ஒன்பது பேர் திருப்பி அனுப்பவே முடியாத நிலையில் இருப்பதாகக் கூறும் கீதார்த்தனன், அப்படி அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்றும் கூறுகிறார்.
அந்த ஒன்பது பேரும் ஏதோ ஒரு வகையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் இவர்கள் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் இலங்கையிலிருந்து வெளியிருந்தார்கள் என்று அவர்களது வழக்கறிஞர் கூறுகிறார், ஆனால் தாங்கள் 2009 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே இந்தியா வந்துவிட்டதாக லோஹினி ரதிமோகன் கடந்த வாரம் தெரிவித்தார்.
தற்போது துபாயில் தமது எதிர்காலம் கேள்விக் குறியாக உள்ள நிலையில் இருக்கும் இவர்களில் சிலர் இறுதி யுத்த நேரத்தில் இலங்கை அரசிடம் சரணடைந்து, பின்னர் முகாம்களிலிருந்து தப்பித்து இந்தியா சென்று தஞ்சம் புகுந்திருந்தார்கள் எனவும் கீதார்த்தனன் கூறுகிறார்.
(பீபீசி)
0 comments :
Post a Comment