எஸ்.எல். மன்சூர்
அண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராதரப் சாதாரணதரப் பரீட்சையின்போது கனிசமான ஒருதொகை மாணவர்கள் எந்தவொருபாடத்திலும் சித்திபெறவில்லை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம். அப்படியானால்; இந்த மாணவர்கள் கடந்த 11ஆண்டுகளாக பாடசாலையிலும், தன்னுடைய சுற்றாடலிலும் எதனைப் படித்தார்கள், எதனைக் கற்றுக் கொண்டார்கள்.
இவர்களை வைத்து பதினொரு ஆண்டுகள் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களும், இவர்களது பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்பும்போது இவனால் தனது குடும்பத்து கஷ்டங்கள் போக்குவான் என்கிற நம்பிக்கைகளும், குறிப்பாக இவர்களது எதிர்காலமும் கேள்விக்குறிக்குள்ளாக்கப்பட்டுள்ளதே என்பதை என்னி இவர்களைப் பயிற்றுவித்தவர்களும், இவர்களை கையாண்டவர்களும் எதனைக் கூறப்போகின்றார்கள்.
இந்த மாணவர்கள் குறைந்தது தன்னுடைய தாய்மொழியில்கூட சித்தியடையவில்லை என்றால் இவர்கள் கற்றவைகள்தான் என்ன? என்கிற தொடர் வினாக்கள் வினவிக்கொண்டே இருக்கலாம். இந்நிலையில் தற்காலக் கல்விமுறையில் மாற்றம் தேவையா? கற்றல் தொடர்பான விடயங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமா? மாணவர்களைக் கையாள்வதில் ஆசிரியரும், பெற்றோரும் தவற விட்டுள்ளார்களா? என்பதையும் அறிவுடையோர் அனைவரும் சிந்திக்க வேண்டியதும் கட்டாயமாகும். இவ்வினாக்கள் அனைத்துக்கும் விடையாக மொழியில் பற்றற்ற தன்மையே காரணம் என்று பொதுவாகக் கூறலாம்.
ஆரம்பக்கல்விக்கு ஒரு மாணவன் கற்பதற்குப் பாடசாலைக்கு வருகின்றபோது பாநூற்றுக்கணக்கான சொற்களை அறிந்தநிலையிலேயே வருகின்றான்.
அறிஞர்களிடையே பலதரப்பட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும் இன்றைய நவீன யுகத்தில் பிள்ளைகளது அறிவுப் பிரவாகம் பெருக்கெடுத்துள்ள நிலையில் நவீன ஊடகங்கள் மலிந்துவிட்ட இன்றைய காலத்தில் சாதாரணமாக ஒரு மாணவன் தரம் ஒன்றில் இணைகின்றபோது ஏறைக்குறைய 2700க்கும் மேற்பட்ட சொற்களை அறிந்து, தெரிந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் மொழியில் ஆர்வத்துடன் வருகின்ற அந்தக் பிஞ்சுக் குழந்தையை தன்னுடைய அன்புக்கரங்கள் வாரியணைத்து தரம் பதினொன்றுக்குச் செல்கின்றபோது அவனது மொழியறிவு எங்கே இருக்கவேண்டும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
அந்தளவுக்கு பாண்டித்தியத்தை அடைந்துள்ள இம்மாணவன் ஏன் ஒருபாடத்திலும் சித்தியடையவில்லை என்றால் இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று அந்த மாணவன் வேண்டுமென்றே விடை எழுதாமல் விட்டிருக்க வேண்டும். அடுத்தாக தான் எதையும் கற்காத நிலையில் வெறுமனே ஒரு ஜடப்பொருளாக பள்ளிவந்து போயிருக்க வேண்டும். இது சாத்தியமான விடயங்களாக இருக்குமா என்ன? அப்படியானால் இவ்வாறு அடைவில் குறைவைப் பெற்ற மாணவர்களின் வாசிப்பினை ஆரம்பக்கல்விப் பருவத்திலிருந்து சரியான முறையில் அவதானித்து குறைபாட்டை நிவர்த்திக்கின்ற ஒரு சிறப்பான பரிகாரக் கற்றலையாவது மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மையாகும்.
தரம் ஒன்றில் நுழைவதற்கு முன்னர் முன்பள்ளி பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்கள் சிறப்பான அடைவினை பெறுகின்றார்கள் என்பதற்கு வருடமுடிவில் அவர்களால் நடாத்தப்படும் கலைநிகழ்ச்சிகளும், அவர்களது செயற்பாடுகளும் சாட்சிபகிர்கின்றன. அதுமட்டுமன்றி சில பெற்றோர்கள் கூறுவதுண்டு எனது நேசரிப் பிள்ளை நன்றாக எழுதுகின்றான், வாசிக்கின்றான் என்றொல்லாம் மற்றவரிடம் கூறிப் பெருமைப்படுவதுண்டு.
இது உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பெற்றோர்களில் அநேகமானோர் தன்னுடைய குழந்தை முன்பள்ளியில் எழுதவும், வாசிக்கவும் வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறுவதும் உண்டு. இவ்வாறான நிலைமைகள் இருக்க பதினொரு ஆண்டுகள் கற்றதன் பின்னர் ஒருபாடத்தில் குறிப்பாக தமிழ் பாடத்தில் ஆகக் குறைந்த மட்ட புள்ளிகளையாவது பெறவில்லை என்றால் நாம் சிந்திக்க வேண்டும். தங்களுடைய பிள்ளையில் பெற்றோர் அதிக கவனம் கொள்ளவில்லை என்றுதான் நாம் கூறவேண்டியிருக்கின்றது.
கடந்த வாரம் இதே பக்கத்தில் என்னால் எழுதப்பட்டட கட்டுரையில் பின்தங்கிய பிரதேசத்து மாணவர்களது கற்றல் கற்பித்தல் விடயங்களைப் பற்றிக் கூறுகின்றபோது அந்தப் பிரதேசத்து மாணவர்கள்தான் இவ்வாறான அடைவுகளுக்கு வருகின்றார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். அப்பாடசாலைகளின் கற்றல் நிலவரத்தை தெளிவாக விளக்கியிருந்தேன்.
பொதுவாக பெற்றோர்களது அதீதீவிர ஆற்றுகைக்குள் தங்களது குழந்தைகளை கவனிக்க வேண்டிய பொருப்பு முக்கியமாகும். மாணவரின் கற்றல்தொடர்பான அனைத்து விடயங்களையும் கையாள வேண்டிய ஆசிரியர்கள் தவறவிடுவதற்கு பெற்றோர்களும் ஒருவகையில் காரணமாக அமைகின்றனர் என்கிற குற்றச் சாட்டுக்களும் இல்லாமலில்லை. எனவேதான் மொழிரீதியான பற்றை தெளிவான முறையில் ஒவ்வொரு குழந்தையும் சரியான முறையில் அடைவதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் உறுதிப்படுத்துதல் அவசியமாகும்.
அண்மையில் ஒரு பின்தங்கிய பிரதேசத்து பாடசாலையின் அதிபரின் அர்பணிப்புச் சிந்தனையை பார்க்கின்றபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்தப் பாடசாலையை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சிறந்த முறையில் கட்டிக் கொடுத்திருந்தனர். இத்தனைக்கும் அந்தப்பாடசாலை ஒரு பின்தங்கிய பிரதேசத்திலேயே காணப்படுகின்றது.
அதிபரின் விடாமுயற்சியும், அந்தப்பாடசாலையின் ஆசிரியர்களது தியாக சிந்தனையும் ஒன்றுபட்டு தரம் 5 மாணவர்களின் அடைவு படிப்படியாக அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. அதேநேரத்தில் இம்முறை எழுதிய 18மாணவர்களும் சிறப்பான அடைவுகளைப் பெற்று அனைவரும் உயர்தரம் கற்பதற்கு தகுதியானவர்களாக மாற்றம் அடைந்துள்ளனர்.
இதற்குக் காரணமாக பாடசாலைச் சமூகம் இரவு காலங்களிலும் சாதாரணதர மாணவர்களுக்கு விடேச வகுப்புக்களை ஏற்பாடு செய்து கொடுத்து பயிற்றுவித்தனர். பெரிய பாடசாலைகளில் குறைவான அடைவினைப் பெற்று இந்தப்பாடசாலையில் இரண்டாந்தடவையாக பரீட்சை எழுதிய ஒருசில மாணவர்களும் சிறப்பான அடைவினைப் பெற்றிருக்கின்றார்கள் என்றால் இப்பாடசாலையை பின்தங்கிய பாடசாலையாகக் கொள்ளலாமா? இவர்கள் சூழலையே மாற்றியமைத்திருக்கின்றார்கள் என்றால் இவர்களது பணி மெச்சத்தக்கதாகும்.
வாசிப்பில் மொழியின் முக்கியத்துவம்
இவற்றுக்கெல்லாம் காரணமாக அமைகின்ற வாசிப்புப் பழக்கம் அதாவது மொழியின் ஆர்வம் குறைந்து கொண்டுவருவதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் இன்று சிறுகுழந்தை முதல் குடுகுடு கிழடுவரையும் இணையத்துடனான தொடர்புகள் மேலோங்கிய காரணத்தினால் வாசிப்புப் பழக்கம் அரிதாகிக் கொண்டு வருகின்றது என்கிற குற்றச் சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வாசிப்பினை மேம்படுத்துவதில் அக்கைரை கொண்டு உழைப்பதில் ஊடங்களும் அனைத்தும் ஒருங்கிணைந்து செயற்படுதவற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளல் அவசியமாகும்.
சிறுவயதிலிருந்தே வாசிப்பதற்கான பழக்கவழக்கங்களை ஏற்படுத்துதல் முக்கியமாகும். அந்தவகையில் பள்ளிசெல்லும் பாலகர்களின் ஊடாக வாசிப்பை வளப்படுத்தி மேம்படுத்துவதற்கான திட்டங்களை தயாரித்து மாணவர்களை அதிகம் அதிகம் வாசிக்கச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இன்று பரீட்சை மையமான கற்றல் நிலை காரணமாக பெற்றோர்கள் தங்களது குழந்தையை எப்படியும் பரீட்சையில் சித்தியடையவைத்துவிட்டால் போதும் என்கிற நிலைமையில் மொழியின் மேம்பட்ட நடத்தைக் கோலத்திற்கும், சிறப்பான மொழிபண்பாட்டுடனான அடைவுக்கும் வாசிப்பு இன்றியமையாததாகின்றது என்கிற உண்மையை பலர் அறிந்து கொள்வதில்லை.
பொதுவாக மொழியானது நான்கு திறன்களின் அடிப்படையில்தான் காணப்படுகின்றன. அதனை சரியான முறையில் விளங்கிக் கொண்டு நமது குழந்தைகளை ஆரம்பத்திலிருந்தே பயிற்றுவிக்க வேண்டும். தரம் ஒன்றில் பிள்ளையைச் சேர்த்துவிட்டால் நமது கடமை முடிந்துவிட்டது என்கிற பெற்றோர்களும் உள்ளனர்.
பிள்ளைளை தரம் ஒன்றில் சேர்க்கும்போதே எதிர்காலத்தில் இவனை நான் ஒரு வைத்தியனாக்கியே தீர்வது என்கிற குறிக்கோள்களுடனும் பல பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளியில்; சேர்ப்பர். இவ்வாறு நினைக்கின்ற பெற்றோர்கள் தங்களது குழந்த சிறந்த ஒழுக்க முள்ளவானாகவோ, சிறந்த வாசிப்பாளனாவோ, மொழியின் மீதுள்ள பற்றாளனாகவோ ஆக்குவதற்கு முயற்சிப்பதில்லை.
அண்மைய ஆய்வுகளின் பிரகாரம் அதிகமான மாணவர்கள் கல்விப் பொதுதராதர பரீட்சையில் மொழிப்பாடத்தில் சரியான மொழிநடையில் வசனங்களையோ, வாக்கியங்களையோ எழுதாது விடுகின்றனர். பிழையான எழுத்துக்கள், பிழையான உச்சரிப்புக்கள் காரணமாக இம்மாணவர்கள் இறுதிப்பரீட்சையின்போது தவறுவிடுகிறனர்.
இது அவர்களின் மொழிப்பாடத்தில் அதிக சரிவையே காண்பிக்கின்றன. இதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்ற ஆரம்பக்கல்வி வகுப்பறைகளில் சரியான முறையில் மொழிப்பாடம் கற்பிக்கப் படுவதி;ல்லை என்கிற குற்றச்சாட்டுக்களும் கூறப்படுகின்றது. ஆதலால்தான் மொழியில் வாசிப்பு பற்றிய சில குறிப்புக்களை பார்க்கும்போது வாசிப்பின் உண்மைநிலை தெளிவாகும்.
அந்தவகையில், மொழியின் அடிப்படையான விடயங்களைப் தெரிந்து கொள்வது சாலச்சிறந்தாகும். மொழியின் அடிப்படைத் திறனகள், அவை பெறப்படுகின்ற நிலையில் கொள்திறன் என்றும் வெளியீட்டுத் திறன் என்றும் இருவகைப்படுகின்றது.
அவற்றில் செவிமடுத்தல், வாசித்தல் கொள்திறன் என்றும், பேசுதல், எழுதுதல் போன்றன வெளியீட்டுத்திறன்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் எனும் நான்கு திறன்களும் முக்கியமான அம்சங்களாகும். இதில் வருகின்ற நான்கும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டே காணப்படுகின்றது. இதில் ஒன்றான வாசித்தல் பற்றிய விடயங்களைப் பார்ப்போம்.
பொதுவாக எழுத்துக்களை காணும் நிலை வாசித்தலின் தொடக்கமாகும். கண்களால் காணுவதை மூளை அறிந்து பொருளுணரும்போது வாசித்தல் நிகழ்கின்றது. வாசித்தலின்போது இரு உளவியற் செயற்பாடுகள் அங்கே நிகழ்கின்றன. ஒன்று மூளை கண்ணுக்குச் சொல்லுதல், இரண்டாவது கண் மூளைக்குச் சொல்லுதல் ஆகியனவாகும்.
வரி வடிவத்திலுள்ள சொற்களை ஒலிவடிவமாக மாற்றி உச்சரித்தல், உறுப்புக்களும் சொற்களை நோக்கும் கண்ணும் ஒத்துழைத்தால்தான் வாசித்தல் சரியாக நடைபெறும். எனவே, வாசித்தலில் சொற்களை இனங்காணுதல், உச்சரித்துப் பொருளுணர்தல் என்கிற முக்கூறுகள் காணப்படுகின்றன.
இவை நடைபெறுவதற்கு உள்ளம், கண், காது, மூக்கு, நா, குரல் போன்ற அனைத்து உறுப்புக்களும் ஒத்துழைக்கின்றபோதுதான் வாசிப்பு அங்கே நிகழ்கின்றது. வாசித்தலின்போது எழுத்துக் குறியீடுகள், ஒலிக் குறியீடுகளாக மாற்றம் ஏற்படுவதாக கருத முடியாது.
ஏனெனில் மௌன வாசிப்பின்போதும் மனத்தளவில் எழுத்துக்களுக்குரிய ஒலிகள் எழுப்பப்படுகின்றன. வாசித்தல் செயலுக்கும் செவிமடுத்தலுக்கும் மிகுந்த வேறுபாடுகள் இல்லை. ஒலி வடிவங்களாக வெளிப்படுத்தும் செயலானது வாசிப்பாக அமைந்தாலும் அந்த நிகழ்வு மட்டும் வாசித்தல் என்று கூறமுடியாது. ஒலிவடிவங்களாக வெளிப்படுபவை தரும் பொருளையும் உணர வேண்டும்.
பொருளுணர்தலோடு இணைந்த வாசிப்பே வாசித்தலாகும். அத்துடன் எழுத்துக்களாலான சொற்கள், சொற்களாலான வாக்கியங்கள் ஆகியன வாசிக்கும்போது பொருளுணர்த்தும் மொழிக் கூறுகளாகும். ஆகவேதான் எழுத்துக்கள், சொற்கள், வாக்கியங்கள் ஆகியவற்றின் மொழிப் பண்பாட்டுத் திறன் வாசித்தலுக்கு இன்றியமையாதாகும்.
ஆகவேதான் மொழியின் உண்மைத்தன்மைகளையும், மொழிமீதான பற்றுக்களையும் மாணவர்களுக்கு ஆரம்ப வகுப்பறைகளில் ஆசிரியர்கள் வழங்க வேண்டும். சரியான உச்சரிப்புக்களுடன் சரியான எழுத்துருவாக்கங்களை வகுப்பறைகளில் கற்பிக்க வேண்டும்.
சில ஆசிரியர்கள் வகுப்பறைக்குச் சென்று மொழிப்பாடத்தை கற்பிக்க வேண்டும் என்பதற்காக எவ்வித ஆயத்தமுமின்றி பாடப்புத்தகத்தை வாசித்துக் காண்பித்துவிட்டு பாடப்புத்தகத்திலுள்ள ஐந்து வினாக்களையும் வழங்கும் ஒருநிலையும் காணப்படுகின்றது.
மாணவர்கள் சரியான முறையில் ஆசிரியரின் மொழிப்பாடத்தை விளங்கினார்களா? ஆசிரியர்கூறியதை செவிமடுத்தார்களா? என்கிற எதனையும் அறிந்து கொள்ளாமலும்;, மாணவர்களின் உளப்பாங்கினை அறிந்து கொள்ளாமலும் பாடத்தை முடித்துக் கொள்வர். இறுதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி ஆகக் குறைந்த மட்டடமான 70புள்ளிகளையாவது பெற்று கொள்ள முடியாத நிலைக்கு அந்த மாணவர்கள் தள்ளப்படுகின்ற ஒரு கஷ்டமான நிலையினை இன்றைய பாடசாலைகள் எதிர் நோக்குவதையும் காணலாம்.
குறிப்பாக தரம் ஒன்றில் சேர்ந்து கற்கத் தொடங்குகின்ற ஒரு பிள்ளை ஐந்து ஆண்டுகள் பாடசாலையில் கற்று சிறப்பான அடைவினை அடைந்து கொள்ளவான் எனும் நப்பாசையில் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு அங்கு சுக்கு நூறாக உடைந்துவிடுகின்றது.
ஏனெனில் 200 புள்ளிகள் பெற வேண்டிய புலமைப்பரிசில் பரீட்சையில் தனது குழந்தையினது பரீட்சையின் பெறுபேறு வெறும் பத்தோ, இருபதோ ஆக காணப்படுமாக இருந்தால் அந்த பிள்ளை கடந்த ஐந்து ஆண்டுகள் பாடசாலையில், வகுப்பறையில் கற்ற கல்வி அனைத்தும் வீணானது என்பதுதானே உண்மை. இதனை அறிந்து கொள்ளாத சில ஆசிரியர்கள் வகுப்பறைகளில் ஒருசில மாணவர்களது உயர்வுக்காக பல மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மழுங்கடிக்கச் செய்கின்ற கற்றல் நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டுவருவதையும் நாம் காண்கின்றோம்.
இதுதவிர்க்கப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடிப்படையிலான கற்றல்;; திறன்களை கற்று அதன் பிரகாரம் அடுத்த வகுப்புக்கு நுழையச் செய்வதில் கவனம் செலுத்தப்படுவதையும் உறுதி செய்தல்வேண்டும்.
அந்தவகையில் இன்றைய வகுப்பறைகள் மகிழ்ச்சிகரமான கற்றல் சூழ்நிலைக்குள் உள்வாங்கப்பட்டு, காட்சிப்படுத்தலுடன் கூடிய கற்றல் உபகரணங்களைக் கொண்டு கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சு மட்டத்தில் கூறப்படுகின்றது. வெறுமனே நெட்டுறுக் கல்வியை மாணவர்களுக்கு புகுத்திய காலம் மலையேறிவிட்டது.
நவீன உலகின் புதுமையை விரும்பும் மாணவர்களும், அறிவுப் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடும் இக்கால கட்டத்தில் எந்தவொரு பாடத்திற்கும் அடிப்படையாக அமைகின்ற மொழித்தேர்ச்சியின் உருவாக்கம் சிறப்பாக அமைகின்றபோது அந்தப் பிள்ளை கல்வியில் மேம்பட்டவனாக மாற்றம் காணத் தொடங்குவான்.
வாசிப்பதற்கான ஏற்பாடுகளையும், கற்றலுக்கான சூழலையும் ஏற்படுத்துவதில் பாடசாலைச் சமூத்துடன் வெளிச்சூழலும் சாதகமாக அமைவதை உறுதிப்படுத்த வேண்டும். இன்று பாடசாலையின் வாசிக்கும் அறைகள் புழுதியடைந்து, எலிகளின் உறைவிடமாகக் காணப்படுகின்ற ஒருநிலைமை பல பாடசாலைகளில் காணப்படுகின்றதுன. மாணவர்களுக்கு நூல்களை வழங்காது பூட்டிவைக்கின்ற ஒரு நிலைமையும் சில பாடசாலைகளில் காணப்படுகின்றது.
இவை அனைத்தும் தவிர்க்கப்பட்டு மாணவரின் கற்றலுக்கு உதவுகின்ற ஒருநிலைமை, வாசிப்பதற்குரிய ஏற்பாடுகள், மொழியின் மீதான பற்றை ஏற்படுத்துவதற்கு மாணவனுடன் தொடர்புபட்ட அனைவரும் ஒத்துழைக்கின்றபோது குறைந்தது தன்னுடைய தாய்மொழிப்பாடத்திலாவது கூடிய அடைவினைப் பெற்றுக் கொள்வான் அல்லவா! என்பதை நினைவுத்தி செயற்படுவதற்கு உறுதிபூணுவோமாக!
0 comments :
Post a Comment