காதலிப்பதாக நாடகமாடி மூன்று மாணவர்களை ஏமாற்றிய போலி காதலிக்கு சரமாரி கத்திகுத்து விழுந்தது. இது தொடர்பாக 3 வாலிபர்களை பொலிசார் கைது செய்தனர்.
ஆண்கள் தான் பல பெண்களை காதலித்து ஏமாற்றுவர். ஆனால், ஒரு பெண் மூன்று மாணவர்களை காதலித்து ஏமாற்றிய சம்பவம் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
பெல்காம் மாவட்டம், அதணி தாலுகா, கெலசங்கா கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதாதொட்டமணி, கடந்த 15ம் திகதி அவரது சொந்த ஊரான தெலசங்கா கிராமத்தில் 3 மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டார். அதை பார்த்த அருகில் இருந்தவர்கள் காயமடைந்த சங்கீதாவை மீட்டு வைத்தியசாலையில் கொண்டு சேர்த்தனர்.
அவருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஐகாளி பொலிசார் விசாரணை நடத்தினர்.
கெலசங்கா கிராமத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பசப்பா மாகரா (22), பசப்பா கம்பளி (23) மற்றும் சுரேஷ் கல்மட்டி (22) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் சங்கீதாவை கொலை செய்ய திட்டமிட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியபோது, பொலிசாருக்கே தலைசுற்றியது. பிஜாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் சங்கீதா இரண்டாம் ஆண்டு பியுசி படித்த போது, அதே கல்லூரியில் பசப்பா மாகரா, பசப்பா கம்பளி, சுரேஷ் கல்மட்டி ஆகிய 3 பேரும் படித்தனர்.
சக மாணவர்களுடன் அன்பாக பழகிய சங்கீதா, பின் மூன்று பேரையும் காதலர்களாக்கி கொண்டார். மூன்று பேரையும் தனித்தனியாக சந்திக்கும்போது, உன்னைத்தான் காதலிக்கிறேன் என்று பொய் கூறினார். இதையடுத்து ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் ஜாலியாக ஊர்சுற்றி ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
மூன்று பேரும் தன்னை ஒரே நேரத்தில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்காமல் மிக கவனமாக நிலைமையை சமாளித்து வந்தார். அதேபோல், மூன்று இளைஞர்களும் ஒன்றாக சந்தித்து கொள்ள முடியாதபடி பகைமையை உருவாக்கி வைத்திருந்தார்.
இந்நிலையில் மூன்று பேரை தனித்தனியாக காதலித்து சுக, போக வாழ்க்கை நடத்திய சங்கீதாவுக்கு மேலும் பல ஆண்களை தன் வலையில் வீழ்த்த திட்டமிட்டார்.
இதற்காக மூன்று இளைஞர்களையும் மெல்ல புறக்கணிக்க தொடங்கினார். சங்கீதாவின் போக்கில் மாற்றம் இருப்பதை தெரிந்துகொண்ட மூன்று இளைஞர்களும் ஒரு கட்டத்தில் ஒன்றாக சந்தித்து தங்கள் மனக்குறைகளை கொட்டிதீர்த்தனர். அப்போது தான் சங்கீதாவின் குட்டு வெளிச்சத்திற்கு வந்தது.
காதல் நாடகமாடி ஏமாற்றிய சங்கீதாவை உயிருடன் விடக்கூடாது என்று முடிவு செய்து, மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து சங்கீதாவை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த 15ம் திகதி தொலைபேசியில் பேசி தனி இடத்துக்கு வரவழைத்தனர்.
அங்கு மூன்று பேரும் தங்கள் ஆத்திரம் தீர சங்கீதாவை சரமாரியாக கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சங்கீதா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பொலிசார் மூன்று மாணவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் கூறிய தகவலை கேட்டு பொலிசாரே குழப்பமடைந்துள்ளனர். அவர்கள் சொல்வது உண்மையா? பழி வாங்கும் நோக்கத்தில் சங்கீதாவை கொலை செய்ய முயற்சித்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை முடுக்கிவிட்டுள்ளனர்.
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சங்கீதாவுக்கு நினைவு திரும்பிய பின், அவர் கொடுக்கும் வாக்கு மூலத்தை வைத்து என்ன காரணத்திற்காக கொலை முயற்சி நடந்தது என்பது தெரியும் என்று பொலிசார் கூறினர்.
0 comments :
Post a Comment