தமிழ் அரசியல் கைதி கேதீஸ்வரன் இருவாரமாய் உண்ணாவிரதம் : சரியான பதில் இல்லையேல் தற்கொலை என்கிறார்

விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது புனர்வாழ்வளிக்க வேண்டுமென கோரி தமிழ் அரசியல் கைதியொருவர் கடந்த இருவாரங்களாக வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வருகிறார். தனது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கவில்லையென்றால் தான் சிறைச்சாலைக்குள்ளேயே தற்கொலை செய்து கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் என்ற 22 வயதுடைய தமிழ் அரசியல் கைதியே இவ்வாறு இருவாரங்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதுடன் அவர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

குறித்த தமிழ் அரசியல் கைதியான சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். காடுகளில் இருந்த விடுதலை புலி உறுப்பினர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற பொருட்களை வழங்கியதாகவே இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் நீர்கொழும்பு ஆகிய நீதிமன்றங்களில் இவருக்கெதிராக வழக்குகள் உள்ளன. எனவே இவர் மகசின் சிறையிலிருந்து வழக்குக்காக கொண்டு செல்லப்படுவதும் பின்னர் மகசின் சிறைக்கு கொண்டு வருவதும் வழமை. இவ்வாறு கொண்டு செல்லப்படும் போது குறித்த பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளில் தற்காலிகமாக அவர் தங்க வைக்கப்படுவார்.

இவ்வாறு கொழும்பிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தங்கவைத்த பல சந்தர்ப்பங்களில் இக்கைதி அங்கு கடுமையாக தாக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் அவருடைய பிறப்பு உறுப்பு பகுதி கடுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

பெப்ரவரி மாதமளவில் தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட போது அவரை இரண்டு சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் மதுபோதையில் வந்து கடுமையாக தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் அவர் தற்போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இவ்வாறான காரணங்களினால் அவர் தன்னை விடுதலை செய்ய வேண்டும் அல்லது புனர்வாழ்வளிக்க வேண்டும் என கோரியே உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :